
நடிகர்கள் விஜய் மற்றும் சிம்புவுக்கு அரவிந்து சீனிவாஸ் என்ற மருத்துவர் எழுதிய உருக்கமான கடிதம் முகநூலில் வைரலாகி வருகிறது.
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால், ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. இந்நிலையில் கடந்த 8 மாதங்களாக திறக்கப்படாமல் இருந்த திரையரங்குகள் அனைத்தும் 50 சதவீத இரு கைகளுடன் திறப்பதற்கு தமிழக அரசு கடந்த மாதம் அனுமதி வழங்கியது. அதன் பிறகு நடிகர் விஜய் மற்றும் சிம்புவின் அடுத்தடுத்த படங்கள் திரைக்கு வர இருப்பதால், விஜய் மற்றும் சிம்பு ஆகிய நடிகர்கள் தமிழக அரசிடம் கோரிக்கை வைத்தனர்.

இந்நிலையில் திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதனையடுத்து திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி கேட்ட நடிகர்கள் விஜய், சிம்பு மற்றும் தமிழக அரசுக்கு அரவிந்து சீனிவஸ் என்ற மருத்துவர் உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
டியர் விஜய் சார்.. சிலம்பரசன் சார் மற்றும் மாண்புமிகு தமிழக அரசே.. நான் சோர்வடைந்து போய்விட்டேன். நாங்கள் அனைவரும் சோர்வில் உள்ளோம். காவல்துறையினரும் சோர்வடைந்து போய்விட்டனர். துப்புறவு பணியாளர்களும் சோர்வில் உள்ளனர்.
இதுவரை பார்த்திராத ஒரு பெரிய தொற்றுநோயை எதிர்த்துப் போராடக்கூடிய இந்த காலகட்டத்தில், அதிக அளவுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் முயற்சிகளை செய்துள்ளோம். எங்களது பணியை நான் புகழவில்லை. எங்களுக்கு முன்பாக கேமராக்கள் இல்லை. சண்டை காட்சிகள் இல்லை. நாங்கள் ஹீரோக்கள் இல்லை. ஆனால் கொஞ்சம் மூச்சுக் காற்றை இழுத்து விட்டு ஆசுவாசப்படுத்திக் கொள்வதற்கு தகுதியானவர்கள்தான் நாங்கள்.

சிலரது சுயநலம் மற்றும் பேராசைக்கு நாங்கள் இரையாக விரும்பவில்லை. பெருந்தொற்று நோய் இன்னும் ஓயவில்லை. மக்கள் இன்னும் செத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நேரத்தில் 100% ரசிகர்களை தியேட்டர்களுக்கு அனுமதிப்பது ஒரு தற்கொலை முயற்சி. கொள்கை வகுப்பாளர்களோ, அல்லது நீங்கள் ஹீரோக்கள் என்று சொல்லிக் கொள்பவர்களோ, கூட்டத்தோடு கூட்டமாக சென்று திரைப்படம் பார்க்கப் போவது கிடையாது.

உயிரை பணயம் வைத்து பண்டமாற்று முறையில் இங்கு வணிகம் செய்யப்படுகிறது. அறிவியல் பூர்வமாக இது மிகவும் ஆபத்தான முடிவு என்பதை விளக்க நினைத்தேன். ஆனால் எனக்கு நானே கேட்டுக் கொண்டேன்.. அதை நான் சொல்லிதான் என்ன பலன்? ‘இப்படிக்கு சோர்வடைந்து போயுள்ள ஒரு ஏழை மருத்துவர்’. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.