
வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் பிச்சனூர் பேட்டையில் உள்ள சுப்பையா தெருவில், வீட்டின் மாடியில் இளம் பெண்கள் அதிகமாக வந்து செல்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து குடியாத்தம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அதிரடி சோதனை செய்துள்ளனர்.
இதன்போது அங்கு போலியான கால் சென்டர் நடந்து வருவதும், 15-க்கும் மேற்பட்ட பெண்கள் பணியில் இருப்பதும் தெரியவந்துள்ளது. இவர்கள் தமிழகத்தின் பல பகுதிகளில் உள்ள வாடிக்கையாளர்களை தொலைபேசியில் அழைத்து, குறைந்த விலையிலான அலைபேசிகள், பவர் பேங்க், சார்ஜ் வழங்குவதாக கூறி மோசடி செய்தது தெரியவந்துள்ளது.
ஆன்லைனில் பணம் கட்டச் சொல்லி போன் பேசும் இவர்களின் பேச்சில் மயங்கும் நபர்கள் பணம் காட்டினால், பவர் பேங்க் போன்ற வடிவில் உள்ள பிளாஸ்டிக் பொருட்களை அடைத்து வைத்தும், சில பெட்டிகளில் களிமண் வைத்து அனுப்பியுள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் காவல் துறையினர், பணியில் ஈடுபட்டிருந்த பெண்களை அழைத்து பெற்றோரை வரச்சொல்லி அறிவுரை கூறி அனுப்பி வைத்துள்ளனர். இந்த நிலையில், இந்த போலியான கால் சென்டரை நடத்தி வந்த நபரும் தேடி வருகின்றனர்.
ஏற்கனவே தமிழகத்தில் இதுபோன்று பல போலியான கால் சென்டர்கள் காவல் துறையினரால் கண்டறியப்பட்டுள்ள நிலையில், அங்கு பணியாற்றும் பெண்கள் வறுமையால் வாடிவரும் நிலையில், அவர்களை மூளைச்சலவை செய்து வேலைக்கு பயன்படுத்துவதாகவும் பல பகீர் தகவல் வெளியானது.
இதுபோன்று பெண்களை பணியில் சேர்க்கிறோம் என்ற போர்வையில் செயல்படும் நிறுவனங்களை கண்டறிந்து, அதனை நடத்தி வந்த நபர்களுக்கு தகுந்த தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ள நிலையில், பெண்கள் / ஆண்கள் என யார் பணியாற்றும் இடமாக இருந்தாலும் அங்கு நடப்பது என்ன என்பதை முடிந்தளவு உறுதி செய்து பணியாற்றுமாறும், வரும் நாட்களில் தேவையில்லாத சிக்கலில் சிக்கி மன உளைச்சலுக்கு உள்ளாக வேண்டாம் என்றும் காவல் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.