
- தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு
- 100 சதவீத அனுமதிக்கான உத்தரவு திரும்பப் பெறப்பட்டது
- மத்திய அரசின் அறிவுரையை கருத்தில் கொண்டு முடிவு – முதல்வர் அறிக்கை
- உயர்நீதிமன்ற உத்தரவின் படி கூடுதல் காட்சிகளை திரையிட அனுமதி – முதல்வர்
- முகக் கவசம் அணிதல், தனிநபர் இடைவெளியை தவறாமல் கடைபிடிக்க அறிவுறுத்தல்
மத்திய அரசின் உத்தரவுப்படி தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.
வரும் பொங்கல் தினத்தன்று விஜய் நடிப்பில் உருவாகி உள்ள மாஸ்டர், சிம்பு நடிப்பில் ஈஸ்வரன் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகின்றன. எனவே, இருவரும் மாநில அரசுக்கு, தற்போதைய 50% இருக்கை என்ற நிலையில் இருந்து 100% இருக்கைக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இதை அடுத்து, திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. ஆனால், கொரோனா பரவல் மீண்டும் வேகமெடுக்கும் என்று கணிக்கப் பட்டுள்ள நிலையில், தமிழக அரசின் முடிவுக்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்திருந்தது.
இதனிடையே, தமிழக அரசின் உத்தரவு குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.
இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஓர் அறிக்கை வெளியிட்டார். அதில், தியேட்டர்களில் இருக்கை சம்பந்தமாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதாலும் , மத்திய அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளின் படி தியேட்டர்களுக்கு வழங்கப்பட்டிருந்த100 சதவீத இருக்கைக்கு அனுமதி என்பது வாபஸ் பெறப்படுகிறது
உயர் நீதிமன்ற உத்தரவின் படி தியேட்டர்களில் கூடுதல் காட்சிகளை திரையிட்டுக் கொள்ளலாம். மேலும் முக கவசம் அணிவது, தனி நபர் இடைவெளியை கடைபிடிப்பது அவசியமாகும் என்று தெரிவிக்கப் பட்டிருந்தது.
முன்னதாக, தியேட்டர்கள் 100 சதவீத இருக்கைகளுடன் இயங்க அனுமதித்து, ஜன.4 ஆம் தேதி தலைமை செயலர் உத்தரவிட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டும் அனுமதி என்ற நிலை தொடர வேண்டும். 100 சதவீத இருக்கைகளில் ரசிகர்களை அனுமதிக்க முடியாது. பள்ளிகள் திறக்காத நிலையில் ரசிகர்களை அனுமதித்தது எவ்வாறு? கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கும் வரை கவனமாக இருக்க வேண்டும் என தெரிவித்தது.
இதே போல், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையிலும் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த நீதிபதிகள், வரும் 11ஆம் தேதி வரை தியேட்டர்களில் 50 சதவீத ரசிகர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும். 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி வழங்கியது குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும். தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர், விரிவான அறிக்கை பெற்று தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.