ஆண்டாள் நாச்சியார் அருளிச் செய்த திருப்பாவை பாடலும் விளக்கமும்
விளக்கம் : வேதா டி.ஸ்ரீதரன்
ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவில்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத்
தரிக்கிலா(ன்) ஆகித் தான் தீங்கு நினைந்த
கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்
நெருப்பென்ன நின்ற நெடுமாலே! உன்னை
அருத்தித்து வந்தோம் பறை தருதி யாகில்
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம் பாடி
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய். (25)
பொருள்
தேவகிக்கு மகனாக அவதரித்து, அதே இரவில் யசோதை மகனாக மாறி கம்சனின் கண்ணில் படாமல் ஒளிந்து வளர்ந்தவனே! உன்னை அழித்துவிட முடியும் என்று கம்சன் நினைத்தான். ஆனால், அவனது அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன. நீயோ அவனுக்கு சிம்மசொப்பனமாக விளங்கினாய். தனக்கு உவமையில்லாத மகா பெரியவனே! உன்னையே நாங்கள் சரணடைந்தோம். உன்னைப் போற்றிப் பாடுவதற்கு உரிய தகுதியை வழங்குவாயாக. உன் அருள் எங்களுக்குக் கிடைத்தால் உனது மகிமைகளையும், குணங்களையும், உன் அடியார்களின் உயர்வையும் நாங்கள் போற்றிப் பாடுவோம். இதனால் எங்களது பிறவிப் பிணி நீங்கி, பேரானந்தக் கடலில் திளைத்து நிற்போம். எங்களுக்கு அனுக்கிரகம் புரிவாயாக!
அருஞ்சொற்பொருள்
தரிக்கிலான் – பொறுக்க இயலாதவன்
தீங்கு நினைந்த – தீமை செய்ய நினைத்த
கருத்தைப் பிழைப்பித்து – எண்ணத்தைப் பொய்யாக்கி
கஞ்சன் – கம்சன்
வயிற்றில் நெருப்பென்ன – கிலியை ஏற்படுத்துபவனாக
அருத்தித்தல் – வேண்டுதல், யாசித்தல்
திருத்தக்க – திருமகளை ஒத்த
சேவகம் – கைங்கரியம்
வருத்தம் – பாவம், குறைகள், கர்ம பலன்
கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில் நெருப்பென்ன நின்றவன் –
கோகுலவாசிகள் வயிற்றில் பயமெனும் நெருப்பை உண்டாக்கியவன் கம்சன். ஆனால் கிருஷ்ணனோ, கம்சன் வயிற்றில் நெருப்பை உண்டாக்கியவன். கம்சனின் கருத்தைப் பிழையாக்கியது என்பதற்கு உரையாசிரியர்கள் தரும் விளக்கம் இதுவே.
தருதியாகில் – திருவுள்ளம் இருந்தால் தந்தருள்வாயாக
வைணவத்தின் அடிப்படை பணிவுதான். திருவுள்ளமாயின் செய்தருள வேண்டும் என்பதே வைணவத்தில் பெரியோரிடம் வேண்டும் முறை.
வருத்தமும் தீர்ந்து – அவனைப் பிரிந்திருப்பதுதான் ஜீவர்களின் வருத்தம் என்பது தொக்கி நிற்கிறது.
மொழி அழகு
ஒளித்து வளர –
தேவகியின் எட்டாவது குழந்தையால் கம்சனுக்கு மரணம் என்பது அசரீரி வாக்கு. அதனால், அவளுக்குப் பிறந்த பிள்ளைகளை வரிசையாகக் கொன்றான் கம்சன். ஆனால், எட்டாவது பிள்ளையாக ஸ்ரீகிருஷ்ணன் பிறந்ததும் தெய்வத்தின் வழிகாட்டுதல்களின்படி வசுதேவர் அவனைத் தலையில் வைத்தவாறு யமுனையைக் கடந்து யசோதையிடம் சேர்ப்பித்தார். அவன் யசோதையிடம் வளர்ந்தான்.
அதையே ‘ஒளித்து வளர’ என்று பாடுகிறாள் ஆண்டாள். அவன் ‘ஒளிக்கப்பட்டு’ வளர்ந்தான் என்றால் சரி. அல்லது, ‘ஒளிந்து’ வளர்ந்தான் என்றாவது இருக்க வேண்டும். ஆனால், ஆண்டாளோ ‘ஒளித்து வளர்ந்தான்’ என்று கூறுகிறாள். பிறப்பு இறப்பற்ற அவன் கருவில் பிறந்தானாம், இன்னொருத்தியிடம் வளர்ந்தானாம். இருப்பதை மறைத்து இல்லாததைக் காட்டும் அவனது மாயாவித்தனம் இவ்வாறு அவனது அவதாரத் தொடக்கத்திலேயே தெரிந்து விட்டது என்று அவள் சொல்லாமல் சொல்லும் நயம் இதில் தொனிக்கிறது.
இப்பாசுரத்துக்கு அஜாயமானோ பஹுதா விஜாயதே (பிறப்பற்ற அவன் பல பிறப்புகள் எடுக்கிறான்.) என்ற வேத வாக்கியத்தை உரையாசிரியர்கள் மேற்கோள் காட்டுகிறார்கள்.
ஆண்டாளும் ஒளித்துத்தான் பேசுகிறாள். வேதத்தைத் தமிழில் மறை என்று சொல்வார்கள். அது பேருண்மையைத் தனக்குள் மறைத்து வைத்திருக்கிறதாம். வேதநாயகனாம் பரப்பிரம்மத்தை மட்டுமே நினைந்து அவனையே அடைந்த ஆண்டாள் பாடிய பாசுரங்களும் மறைபொருளே. இவள் பாசுர வரிகளும் மறையைப் போலவே உள்ளுறை பொருள் தாங்கியவை.
***
திருத்தக்க –
திருமகளின் விருப்பத்துக்கு உரியவன் அவன் என்பதால் திருத்தக்க ஐசுவரியம் கொண்டவனாகிறான். திருவுக்கும் திருவாகிய செல்வன் அவன்.
ஐசுவரியங்கள் அனைத்தின் மொத்த வடிவாகத் திகழ்பவள் திருமகள். அவளது நாயகன் மகாவிஷ்ணு. அவளைத் தன் மார்பில் அணிந்தவன். திருமகளே அவனுக்கு ஓர் அங்கம். எனவே, திருத்தக்க செல்வம்.
திரு என்பது பரமனின் அத்துணை குணநலன்களையும் ஒருங்கே குறிப்பது. எனவே, அவன் திருத்தக்க செல்வன்.
ஆன்மிகம், தத்துவம்
மகிழ்ந்து – மகிழ்ந்து இருப்போம் என்று சொல்லாமல் மகிழ்ந்து என்று மட்டும் சொல்வது முக்காலத்துக்கும் பொதுவான சொல்லாகக் கொள்ளப்படுகிறது. முக்காலத்திலும் மகிழ்ச்சி என்பது காலத்துக்கு அப்பாற்பட்ட மகிழ்ச்சி. அதுதான் பேரின்பம். எந்த இன்பத்துக்கு இணை கிடையாதோ அத்தகைய இன்பம். அவனாம் அவனை மட்டுமே நினைவில் வைத்திருப்பது. வேறு எந்த எண்ணமும் இல்லாமல் அவனுக்குக் கைங்கரியம் பண்ணுவதை மட்டுமே தொழிலாகக் கொண்டிருப்பது. ஆண்டாள் யாசிக்கும் பறை அல்லது வரம் இதுதான். அடுத்தடுத்த பாசுரங்களில் இதையே வெவ்வேறு விதமாக வேண்டுகிறாள்.