
ஆந்திர அரசியலில் கிறிஸ்துவ ஆதிக்கத்தின் வெளிப்பாடாக, தெலுங்கு தேசம் கட்சி ஆங்கிலோ இந்திய கிறிஸ்தவ எம்எல்ஏ ராஜினாமா செய்துள்ளார். தனது ராஜினாமாவுக்கு சந்திரபாபுவின் மத அரசியல் காரணம் என்றும், அது கூடாது என்றும் விமர்சனம் செய்துள்ளார்.
கடந்த சில நாட்களாக ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் அரசியல் மத சாயம் பூசிக் கொண்டுள்ளது. பல கோவில்களும் தெய்வச் சிலைகளும் சிதைக்கப்பட்டதால் எதிர்க்கட்சிகள் ஆந்திர அரசாங்கத்தின் மீது பரபரப்பு விமர்சனங்கள் செய்து வருகின்றன.
இந்த வரிசையில் தெலுங்குதேசம் கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு ராம தீர்த்தம் கோவிலை தரிசித்து அங்கு உரையாற்றுகையில் அரசாங்கத்தின் மீது கடுமையான விமர்சனங்களை முன் வைத்தார். எப்போதும் இல்லாத விதமாக சந்திரபாபு முதல் முறையாக ஜெய் ஸ்ரீராம் என்று கோஷம் எழுப்பினார். அதுமட்டுமல்ல; கிறிஸ்தவர்கள் குறித்து மறைமுகமாக விமர்சனம் செய்தார். இதனால் மாநில அளவில் மதம் குறித்த சர்ச்சை நடந்து வருகிறது.
தெலுங்கு தேசம் கட்சி செய்து வரும் மத அரசியல் தனக்குப் பிடிக்கவில்லை என்று கூறி சந்திரபாபு நாயுடுவின் ஆட்சியில் நாமினேடட் எம்எல்ஏவாக நியமிக்கப்பட்ட பிலிப் தோசர் தெலுங்கு தேசம் கட்சியில் இருந்து தாம் விலகுவதாக ராஜினாமா கடிதம் கொடுத்தார்.
தெலுங்கு தேசம் கட்சி தொடங்கியது முதல் இந்த கட்சியில் மிகவும் விருப்பத்தோடு தொடர்ந்து இருந்து வந்தேன் என்றும் ஆனால் அண்மைக் காலத்தில் இடம்பெறுகின்ற மாற்றங்களால் தனக்கு எரிச்சல் ஏற்பட்டது என்றும் கூறினார். அண்மைக் காலமாக நடந்து வருகின்ற மாற்றங்களால் தனக்கு மிகவும் மன வருத்தமும் வேதனையும் ஏற்பட்டதாக தோசர் குறிப்பிட்டார்.
நம் நாட்டில் எத்தனையோ மதங்கள், சாதிகள் இருக்கின்றன என்றும் அதே நேரத்தில் அவரவர் குலம் அவரவர் மதம் விசுவாசங்கள் அவரவருக்கு முக்கியமானதாக இருக்கும் என்றும் நினைவுபடுத்தினார். தான் இந்திய கிறிஸ்டியன் அசோசியேஷனிலும் பணிபுரிவதாக அவர் குறிப்பிட்டுக் கொண்டார்.

முதல்வராக இருந்த போது சந்திரபாபு நாயுடு கழுத்தில் சிலுவை அணிந்து கொண்டு பைபிள் கையில் பிடித்து அந்த நூலை வாசித்ததாக அவர் தெரிவித்தார்.
அதுமட்டுமின்றி பைபிளை கையில் பிடித்துக்கொண்டு தன் பிறவி உய்வடைந்தது என்றும் இயேசு கிறிஸ்து அமைதியை போதித்தார் என்றும் சந்திரபாபு கூறிய வார்த்தைகளை நினைவு படுத்தினார்.
இன்று அதற்கு மாறாகப் பேசுவது தனக்கு பிடிக்கவில்லை என்றும் வெறும் மதத்தை முன்னிறுத்தி அரசியல் செய்வது தகாது என்றும் கூறினார். கிறிஸ்துவம் பற்றி ஒரு பொறுப்பான எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் இருந்துகொண்டு இந்த மாதிரி பேசுவதைப் பார்த்து இத்தனை நாள் இது போன்ற ஒருவரிடம் பணி புரிந்ததற்காக வருத்தம் அடைகிறேன் என்று கடிதத்தில் தெரிவித்தார்.
இனி எந்த மதத்தின் மீது ஆனாலும் சரி தாக்குதல் நடந்தால் அவர்களை கண்டிக்கத்தான் வேண்டும் என்று கூறிய தோசர் ஒரு மதத்தைக் காப்பாற்றுவதற்காக மற்றொரு மதத்தை கண்டிப்பது கட்சிக்கும் கட்சித் தலைவருக்கும் நல்லதல்ல என்று கூறினார். அதனாலேயே தெலுங்கு தேசம் கட்சியில் இருந்து ராஜினாமா செய்வதாகக் கூறினார்.