
மதுரையில் நம்ம ஊரு பொங்கல் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த பாஜக தமிழக தலைவருக்கு எதிர்ப்பு தெரிவித்து விசிக மற்றும் திமுகவினர் கோஷங்கள் எழுப்பினர். மேலும், பள்ளிவாசல் பகுதி வழியாக பாஜக.,வினர் செல்லக் கூடாது என்று கூறி, அனுமதிக்க மறுத்தனர்! இந்நிலையில் இன்று மதுரை பாஜக., அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப் பட்டுள்ளது.
மதுரை திருப்பாலை மந்தை திடலில் பாஜக.,வினர் சார்பில் நம்ம ஊர் தாமரை பொங்கல் விழா தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மாட்டு வண்டியில் அக்கட்சித் தலைவர் எல்.முருகன், வந்தார்.
வரும் வழியில் விடுதலை சிறுத்தை கட்சியினர் மற்றும் திமுகவினர் தொடர்ந்து பாஜக மாநில தலைவர் L.முருகனை வசைபாடியவாறே இருந்தனர். அந்தப் பகுதி வழியாக பாஜக.,வினர் செல்லக் கூடாது என்று பிரச்னையில் ஈடுபட்டனர். பாஜக.,வினர் செல்லும் வழியில் அரசியல் ரீதியான பதற்றத்தை ஏற்படுத்திய படி இருந்தவர்களை போலீசார் கட்டுப்படுத்தினர்.
பின்னர் அங்கிருந்து, பள்ளிவாசல் பகுதி வழியாக மாநிலத் தலைவர் எல்.முருகன் மாட்டுவண்டியில் நிகழ்ச்சிக்கு சென்று கொண்டிருந்த போது அந்தப் பகுதியை சேர்ந்த சிலர் பாரதப் பிரதமர் மோடிக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர்.
ஆனால் தொடர்ந்து பள்ளிவாசல் பகுதியில் அப்பகுதி மக்கள் 50க்கும் மேற்பட்டோர் கூடி பிரச்னையில் ஈடுபட்டதால், அங்கே பதற்றமான சூழல் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
இதனிடையே, இன்று மதுரை புறநகர் மாவட்ட பாஜக., அலுவலகம் மீது தாக்குதல் நடந்துள்ளது. அலுவலகத்தில் பிளாஸ்டிக் சேர்கள் உடைக்கப்பட்டன. இது குறித்து போலீஸார் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக.,வினர் கோரியுள்ளனர்.