
நீண்ட நாள் கோரிக்கையான கிராம கோயில் பூஜாரிகளுக்கு ஓய்வூதியம் உயர்வு, வருமான உச்சவரம்பு உயர்வு அளித்து உத்தரவிட்ட முதல்வருக்கு தமிழ்நாடு கிராம கோயில் பூஜாரிகள் பேரவை சார்பில், அறங்காவலர்கள் நேரில் நன்றி தெரிவித்தனர்.
6 லட்சம் குடும்ப உறுப்பினர்களை கொண்ட கிராம கோயில் பூஜாரிகளுக்கு மாதாந்திர ஓய்வூதியம் ரூ. ஆயிரம் வழங்கப்பட்டு வருவதை ரூ. 3 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். அரசின் சலுகைகள் மற்றும் ஓய்வூதிய பலன்கள் பெற, அவர்களுக்கான ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ. 24 என்பதை ரூ. 72 ஆயிரமாக உயர்த்தி அறிவிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு, தமிழ்நாடு கிராம கோயில் பூஜாரிகள் பேரவை சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்த கோரிக்கைகளை நிறைவேற்றி அறிவித்த முதல்வர் பழனிசாமியை அவரது முகாம் அலுவலகத்தில் பூஜாரிகள் பேரவையின் நிர்வாக அறங்காவலர் வேதாந்தம், அறங்காவலர்கள் ஆர்.ஆர்.கோபால்ஜி, கிரிஜா சேஷாத்ரி, ஆகியோர் நேற்று நேரில் சந்தித்து, பூஜாரிகள் சார்பில் நன்றி தெரிவித்தனர்.
அப்போது, தமிழகத்தில் முறையாக பயிற்சி பெற்று கோயில் பூஜாரிகளாக பணியாற்றுபவர்களுக்கு மாதாம் தோறும் ரூ. 3 ஆயிரம் ஊக்கத் தொகையாக வழங்க வேண்டும் என்று மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிடம் நேரில் வலியுறுத்தினோம். அதற்கு ஆவன செய்வதாகக் கூறியதுடன், 2016ம் ஆண்டு சட்டசபை பொதுத்தேர்தல் நேரத்தில் அரக்கோணத்தில் நடந்த பிரச்சார கூட்டத்தில் இதுகுறித்த அறிவிப்பையும் வெளியிட்டார். அவரது அறிவிப்பு நீண்ட காலமாக நிறைவேற்றப்படாமல் உள்ளது. அதை நிறைவேற்றித் தர வேண்டும்.
அத்துடன் தமிழகம் முழுவதும் 2 லட்சத்துக்கும் அதிகமான பூக்கட்டும் பேரவை உறுப்பினர்களின் நீண்ட கால கோரிக்கையான அவர்களுக்கு நலவாரியம் அமைத்து சலுகைகள் வழங்க உத்தரவிட வேண்டும் என்று நிர்வாக அறங்காவலர் மற்றும் அறங்காவலர்கள் வலியுறுத்தினர்.
கோரிக்கைகளை பொறுமையாக கேட்டுக் கொண்ட முதல்வர் பழனிசாமி, தேர்தல் அறிக்கையில் இடம் பெறச் செய்வதாக உறுதி அளித்தார்.