
கரூரில் இருசக்கர வாகனத்தில் இருந்த விஷப்பாம்பை தீயணைப்புத்துறை வீரர்கள் லாவகமாக பிடித்துள்ளனர்.
கரூர் மாவட்டம் பள்ளப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் செல்வநாயகம். இவரது மகன் கிங் (36) வேலை நிமித்தமாக கரூர் நகர கடை வீதி காமராஜர் சிலை பகுதியில் தனது இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவரது வாகனத்தில் ஏதோ நெளிவது போல் இருந்துள்ளது.

வண்டியில் இருந்து இறங்கிய கிங் தன் வாகனத்தில் ஒரு பாம்பு சுற்றி இருப்பதை பார்த்து அதிர்ந்துள்ளார். இது குறித்து தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

அவர்கள் வந்து ஆய்வு செய்ததில் கொம்பேறிமூக்கன் என்ற கொடிய விஷப்பாம்பு அவரது வாகனத்தில் இருப்பது கண்டறியப்பட்டது. இந்த பரபரப்பில் பொதுமக்களும் அங்கு குழுமினர்.

தீயணைப்பு வீரர்கள் லாவகமாக பாம்பை பிடித்த பிறகே மக்களுக்கும், கிங்கிற்கும் நிம்மதி கிடைத்தது. முக்கிய நகர வீதியில் ஒரு கொடிய விஷப்பாம்பை பிடித்தது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது