spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஅடடே... அப்படியா?தேர்தல் அறிக்கையும் அதன் ஆதியும் அந்தமும்!

தேர்தல் அறிக்கையும் அதன் ஆதியும் அந்தமும்!

- Advertisement -

இந்தியத் தேர்தல் ஆணையம், அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் அறிக்கைகளை வாக்குப் பதிவுக்கு முன்பே வெளியிட வேண்டுமென்ற அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது. இந்த தேர்தல் அறிக்கை என்பது சம்பிரதாயமா, சடங்கா அல்லது ஆட்சிக்கு வந்தால் அந்த கட்சியின் வழிகாட்டு நெறிமுறைகளோடு அதில் சொல்லப்பட்ட உறுதிமொழிகளுடன் நடைமுறைக்கு வருமா என்று விவாதத்தில் உள்ளன.

தேர்தல் அறிக்கை என்பது ஒரு அரசியல் கட்சி தேர்தல் களத்தில் மக்களின் வாக்குகளை பெற மக்களுக்கான திட்டங்களை நடைமுறைப்படுத்துவோம் என்று தேர்தலுக்கு முன்னர் தருகின்ற உறுதிமொழி சாசனம் ஆகும். இந்த தேர்தல் பிரகடனம் மக்கள் நல அரசுக்கு ஒரு ஜனநாயக நாட்டில் வழிவகுக்க ஒரு முக்கிய அடிப்படையாக ஒவ்வொரு அரசியல் கட்சியும் தேர்தல் காலத்தில் வெளியிடுகின்றது. சில கட்சிகள் இந்த தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட உறுதிமொழிகளை நடைமுறைப்படுத்துகிறது. தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட உறுதிமொழிகளை 100 சதவீதம் நடைமுறைப்படுத்த முடியுமா என்பது இயலாத காரியம் தான் என்றாலும் தேர்தல் களத்தில் சொல்லப்பட்ட வாக்குறுதிகளை ஆட்சிக்கு வந்தால் நிறைவேற்ற வேண்டியது அந்த ஆட்சியின் ஆளவந்தார்களின் கடமையாகும்.

தேர்தல் அறிக்கையும், தேர்தல் சீர்திருத்தங்களும் ஜனநாயக பரிணாம வளர்ச்சிக்கு முக்கிய காரணிகளாக திகழ்கின்றன. இந்த தேர்தல் அறிக்கையின் வரலாறு என்ன என்று பார்த்தால், ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்திலேயே இந்தியாவில் பிரிட்டிஷ் அரசியல் கட்சிகள் வெளியிட்டவாறு தேர்தல் அறிக்கைகள் வெளியிடப்பட்டது.

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் ரிப்பன் பிரபுவின் 1882இன் தீர்மானம், இந்திய கவுன்சில் சட்டம் 1892, மின்டோ – மார்லி சீர்திருத்தம் (1909) இதையொட்டி உருவாக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் தேர்தல் அமைப்பு முறை சட்டம், லக்னோ ஒப்பந்தம் (1916), மாண்டேகு – செம்ஸ்போர்டு சட்டம் (1919), அதன்பின் பிரிட்டிஷாரால் நிறைவேற்றப்பட்ட சட்டம் 1919, முடிமான் விசாரணைக்குழு அறிக்கை (1924) என இந்தியர்களுக்கும் தேர்தலில் போட்டியிட்டு கவுன்சிலின் உறுப்பினராக உரிமைகளை வழங்கும் நடவடிக்கைகளை பிரிட்டிஷார் மேற்கொண்டனர். இந்த அடிப்படையில் 1920, 1923, 1926, 1930 என மாகாண கவுன்சிலின் தேர்தல்களும் நடந்தேறின.

இந்த காலக்கட்டத்தில் இந்தியாவிலிருந்த அரசியலமைப்புகள் தேர்தல் களத்தில் இறங்கியது. பிரிட்டிஷ் நாடாளுமன்ற அமைப்பு முறைப்படி நடந்த தேர்தலில் இந்திய அரசியலமைப்புகள் தங்களுடைய உறுதிமொழிகளை தேர்தல் அறிக்கைகளாக முதன்முறையாக வெளியிடத் துவங்கின. காங்கிரஸ் ஜனநாயக கட்சி 1920இல் முதன்முதலாக பாலகங்காதர திலகர் தேர்தல் அறிக்கையினை இந்திய மண்ணில் வெளியிட்டார். இதில் அவர் இந்தியப் பொருளாதாரத்தை நவீனப்படுத்த வேண்டும். அதேபோல, சுதேசிப் பொருட்கள் உற்பத்தியை பெருக்க வேண்டும். தொழிற்கல்வி, பொது சுகாதாரம், இலவசக் கல்வி போன்ற திட்டங்களை நாங்கள் வெற்றி பெற்றால் நடைமுறைப்படுத்துவோம் என்ற உறுதியை அந்த அறிக்கையில் திலகர் குறிப்பிட்டிருந்தார்.

காங்கிரசின் தேர்தல் அறிக்கைகள் ராஜாராம் மோகன்ராய், தாதாபாய் நௌரோஜி, மகாதேவ் கோவிந்த ரானடேவின் பொருளாதாரக் கொள்கைகள், ரமேஷ் சந்திர தத்தின் பொருளாதார அணுகுமுறைகள், கோபாலகிருஷ்ண கோகலேவின் அதிகாரம் பரவலாக்குதல், உத்தமர் காந்தியின் கோட்பாடுகளை எல்லாம் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையின் அடிப்படை விடயங்களாக எடுத்துக் கொள்ளப்பட்டது.

அதன்பின் 1923, 1926 இல் சுயராஜ்ய கட்சி தன்னுடைய தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. இந்த காலக்கட்டத்தில்தான், தமிழகத்திலிருந்து நீதிக்கட்சி தன்னுடைய தேர்தல் அறிக்கையை 1923, 1926, 1930 தேர்தல்களில் வெளியிட்டது. அன்று சென்னை மாகாணம், ஆந்திரம், கேரளாவின் வடபகுதி, கர்நாடகத்தின் தென்பகுதிகளெல்லாம் இணைந்த சென்னை ராஜதானியாக தென் தமிழகம் விளங்கியது. இந்த தேர்தல் அறிக்கையில் பிராமணர்கள் அல்லாத மக்களின் நலனைப் பாதுகாக்கக் கூடிய வகையில் உறுதிமொழிகள் சொல்லப்பட்டன.

மற்றொரு கட்சி தேசிய ஐக்கிய கட்சி 1923, 1926 தேர்தல்களில் தேர்தல் அறிக்கை வெளியிட்டது.

பண்டித நேரு 1937 தேர்தலில் காங்கிரசின் தேர்தல் அறிக்கையை தயாரித்தார். இதே போல, பிராந்தியக் கட்சிகளான கிரசக் பிரஜா கட்சி, தேசிய விவசாயிகள் கட்சி போன்ற கட்சிகளும் தங்களுடைய தேர்தல் அறிக்கையை பிரிட்டிஷார் காலத்திலேயே தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டதெல்லாம் வரலாற்று செய்திகளே. கடந்த 1919லிருந்து நாடு விடுதலைபெறும் வரை இம்மாதிரி தேர்தல் அறிக்கைகளை கட்சிகள் தொடர்ந்து வெளியிட்டன. அவைகள் யாவும் மூன்று நான்கு பக்கங்களிலேயே அடங்கிவிடும் ஆவணமாக இருந்தது. அதேபோன்று கம்யூனிச சிந்தனை உள்ளவர்களும் தங்களுடைய தேர்தல் அணுகுமுறை மற்றும் உறுதிமொழி ஆவணங்களையும் வெளியிட்டது.

நாடு விடுதலை பெற்றபின், தேசியக் கட்சிகளும், மாநிலக் கட்சிகளும் விரிவாக அன்றைய காலச் சூழ்நிலை மற்றும் அரசியல் சூழலுக்கேற்றவாறு, மக்களின் அபிலாஷைகளை கொண்டு தேர்தல் அறிக்கைகளை தயாரிக்கத் துவங்கின. காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் உறுதியளித்தவாறு முதன்முறையாக திட்டக்குழுவை (Planning Commission) அமைத்தது. இது ரஷ்ய மாடலைப் போன்று நேரு தன்னுடைய நேரடிப் பார்வையில் அமைத்தார். இன்றைக்கு மோடி அதை நிடி ஆயோக் என்று மாற்றிவிட்டார்.

இந்தியாவின் 1951, 52 தேர்தலில் நாட்டின் ஜனநாயகக் கட்டமைப்பு, முக்கியத் தேவைகள் மற்றும் அணுகுமுறைகளை மனதில் கொண்டே தேர்தல் அறிக்கை வெளிவந்தது. அதேபோல, 1951இல் கம்யூனிஸ்ட் கட்சியும் பொதுவுடைமை சித்தாந்த்தோடு தேர்தல் அறிக்கையை அக்காலத்தில் வெளியிட்டது. இந்த சூழலில் துணை அறிக்கைகளாக காங்கிரஸ் பொருளாதாரத் திட்டங்களை குறித்து 1948 ஜனவரியிலும், கம்யூனிஸ்ட் கட்சி பொருளதார அமைப்பு முறையைக் குறித்து 1951லும், சோசலிஷ்ட் கட்சி தன்னுடைய திட்டங்களை 1947, அக்டோபர் மாததிலும், அன்றைய ஜனசங்கம் (இன்றைய பாஜக) தன்னுடைய தேர்தல் அறிக்கையை 1951 அக்டோபரிலும், சுதந்திரா கட்சி தன்னுடைய கொள்கைகள் திட்டங்களையும் குறித்து 1959 ஆகஸ்டிலும் வெளியிட்டது. இந்த ஆவணங்கள் தான் அக்கால தேர்தல் அறிக்கையின் மையக் கருத்துகளாகும்.

தமிழகத்தைப் பொறுத்தவரையில் பொதுத் தேர்தலில் தி.மு.க. 1957இல் போட்டியிட்டபோது, பேரறிஞர் அண்ணா தனது கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். திமுக, ஜெயப்பிரகாஷ் நாராயணன் வலியுறுத்திய விகிதாச்சாரப் பிரதிநிதித்துவத்தை நடைமுறைப்படுத்த வேண்டுமென்று கூறியது. அந்த தேர்தலில் 15 சட்டமன்ற தொகுதியிலும், 2 நாடாளுமன்ற தொகுதியிலும் வெற்றிபெற்றது. கட்சி துவங்கப்பட்ட பதினெட்டே ஆண்டுகளுக்குள் தமிழ்நாட்டில் 1967-ல் ஆட்சிக் கட்டிலில் தி.மு.க அமர்ந்தது.

இந்தியாவில் காங்கிரஸ் அல்லாத முதல் மாநில முதல்வராக பதவிக்கு வந்தவர் பீகார் மாநிலத்தின் மகாமய பிரசாத் சின்கா (Mahamaya Prasad Sinha) ஆவார். இவரும் காங்கிரஸ் கட்சிக்கு எதிரான கொள்கைகளை கொண்ட தேர்தல் அறிக்கைகளை தயாரித்து வெளியிட்டார். ராஜேந்திர பிரசாத்தின் சீடராக இருந்து காங்கிரசில் இருந்து விலகி இறுதிவரை ஜனதா கட்சியிலும் இருந்தார்.

அதேபோல, நாட்டின் இரண்டாவது காங்கிரஸ் அல்லாத மாநில முதல்வராக கேரளத்தில் இ.எம்.எஸ். நம்பூதரிபாட் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, கம்யூனிஸ்டுகள் கேரள சட்டமன்றத் தேர்தலில் சிறப்பான பொதுவுடைமைக் கொள்கைகள் அடங்கிய தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டனர்.

தேர்தலில் வெற்றி பெற்ற பின் வெவ்வேறு தேர்தல் அறிக்கைகள் வெளியிட்டாலும் கூட்டணி அமைச்சரவை அமைக்கும் பொழுது பல கட்சிகள் இணைந்து தேர்தல் அறிக்கையை போன்று குறைந்தபட்ச செயல் திட்டத்தை (minimum common program) வெளியிடுகின்றன. 1998 ஆம் வருடத்திலிருந்து இந்தப் போக்கு நடைமுறைக்கு வந்தது.

காலப்போக்கில் அரசியல் கட்சிகள் மட்டுமல்லாமல், தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களும் ஆங்காங்குள்ள ஸ்தலப் பிரச்சனைகளை மையப்படுத்தி தொகுதிவாரியாக தனி தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டனர். இது வடக்கே சோசலிஷ்ட் லோகியோவின் அணுகுமுறையாகும். இதே போன்று நான் 1989 கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதி தேர்தலில் போட்டியிட்டபோது, தமிழகத்தில் முதன்முறையாக ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு 30 ஆண்டுகளுக்கு முன்பே கீழ்குறிப்பிட்டவாறு எனது தனி தேர்தல் அறிக்கையை வெளியிட்டேன்.

கோவில்பட்டி வட்டத்தில் உள்ள கிராமங்களுக்கு பஸ் போக்குவரத்து இல்லாமல் இருந்தது.

குடிநீர் பற்றாக்குறை மிகப் பெரிய பிரச்னையாக இருந்தது. கோமல் சாமிநாதனின் ‘தண்ணீர் தண்ணீர்’என்ற பாலசந்தரின் திரைப்படம் கோவில்பட்டி தொகுதியில் உள்ள ஏழுபட்டி கிராமத்தில் தான் எடுக்கப்பட்டது. அந்தத் திரைப்படம் வந்த நான்கு வருடம் கழித்து அந்தத் தொகுதியில் வேட்பாளராக களம் கண்டேன்.

கிராமங்களுக்கு உயர்நிலை குடிநீர்த்தொட்டி வசதியும், கைப்பம்பு குடிநீர்வசதியும் இன்ன இன்ன கிராமங்களுக்கு அமைத்து தருகிறோம் என்ற உறுதியையும் அந்த அறிக்கையில் சொல்லியிருந்தேன்.

எட்டயபுரம் மகாகவி பாரதி நெசவு ஆலை தொழிலாளருக்கு வீட்டு வசதியும், சங்கீத மேதை முத்துசாமி தீட்சதர், விளாத்திகுளம் சுவாமிகள் என்ற நல்லப்ப சுவாமிகள் கால் ஊன்றிய எட்டயபுரத்தில் இசைக் கல்லூரியும், மகாகவி பாரதியும், சீதகாதியும், சோமசுந்தர பாரதி போன்ற தமிழறிஞர்கள் உலாவிய மண்ணில் கிராமிய படிப்புகள் சார்ந்த நிகர்நிலை பல்கலைக்கழகம் அமைக்கப்படும் எனவும்,
எட்டயபுரம் தனி தாலுக்கா அமைக்கப்படும் என்றும், கோவில்பட்டி வட்டாரத்தில் விவசாயப் போராட்டத்தில் தமிழகத்திலேயே அதிகமானவர்கள் அதாவது 20க்கும் மேற்பட்ட விவசாயிகள் உரிமை கேட்டு போராடியபோது காவல்துறையால் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். அவர்களுக்கு நினைவிடம் அமைக்கப்படும் எனவும்,
விவசாய விளை பொருட்களுக்கு நியாயமான இலாப விலையும், விவசாய இடுப் பொருட்களின் விலை குறைக்கவும் குரல் கொடுப்பேன் எனவும்,
கோவில்பட்டியில் உள்ள அரசு விவசாயப் பண்ணையில் விவசாயக் கல்லூரி துவக்கவும் குரல் கொடுப்பேன் எனவும்,
வறண்ட குளங்களை தூர்வாரி முள் செடிகளை வெட்டுவதும் என்றும்,
கேரள அச்சங்கோவில் – பம்பையை வைப்பாறாரோடு இணைத்து கங்கை, வைகை, தாமிரபரணி, குமரிமுனை வரை தேசிய நதிகளை இணைக்க உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளேன். அந்த வழக்கை விரிவுப்படுத்தி கோவில்பட்டி வட்டாரத்தில் நீர்ப்பாசன வசதியை பெருக்குவேன் எனவும்,
கோவில்பட்டி குடிநீருக்கு புதிய பைப் லைன் அமைப்பதும்,
அரசு கலைக்கல்லூரி அமைப்பது எனவும்,
புறவழி சாலை அமைக்கவும்,
பாதிக்கப்பட்ட தீப்பெட்டி தொழிலை பாதுகாக்கவும்,
என பல அத்தொகுதியின் தேவைகளை தேர்தல் அறிக்கையில் அப்போது சொல்லியிருந்தேன்.
இம்மாதிரி தேர்தல் காலத்தில் உறுதிமொழிகளை கொடுத்து மக்களின் ஆதரவைப் பெற்று மக்களுக்காக வாதாட வேண்டுமென நினைக்கும் மக்கள் பிரதிநிதிகள் நாளுக்கு நாள் அரிதாகிவிட்டனர். இன்றைய சூழ்நிலையில் வாக்குகளை பணத்திற்கு விற்றபின் எந்த தேர்தல் அறிக்கையின் ஆளுமையும், அதன் வீச்சும் சில நேரங்களில் அரசியல் கட்சிகளுக்கு கைகொடுப்பதை மறுக்க முடியாது.
தேர்தல் அறிக்கைகள் ஆவணங்கள் மட்டுமல்லாமல், நாட்டின் வளர்ச்சி, மக்கள் நலம் என உள்ளார்ந்த உளவியல் காரண காரியங்கள் உள்ளடங்கியது.

  • கே.எஸ்.இராதாகிருஷ்ணன் (வழக்குரைஞர், செய்தித் தொடர்பாளர் – திமுக., [email protected])

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe