கவச உடை அணியக்கூட அவகாசம் இல்லை! கொரோனா பாதித்த பெண்ணிற்கு பிரசவம் பார்த்த மருத்துவக்குழு!

அடடே... அப்படியா? உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை
baby 1
baby 1

சென்னை ஐசிஎப் பகுதியை சேர்ந்த 27 வயதான இளம்பெண் ஒருவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் கடந்த சில தினங்கள் முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டார்.

இதையடுத்து பெரம்பூரில் உள்ள ரயில்வே மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்காக அமுதா அனுமதிக்கப்பட்டார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்ததால் அவரை மருத்துவ குழு தொடர்ந்து கண்காணித்து வந்தது. இந்த சூழலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அமுதாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது.

அமுதா பிரசவ வலியில் துடிப்பது அறிந்த மருத்துவர் பிரியங்கா தலைமையிலான குழு கொரோனா வார்டுக்கு வந்தனர். எந்த நேரத்திலும் குழந்தை பிறக்கும் என்ற சூழ்நிலையில் தவித்துக்கொண்டிருந்த அமுதாவை கண்ட மருத்துவர்கள், கொரோனா கவச உடை அணிந்து வந்து பிரசவம் பார்ப்பதற்குள் தாய்க்கும் ,சேய்க்கும் ஏதேனும் ஆகிவிடுமோ என்று பயந்தனர்.

அதனால் தங்கள் உயிரையும் துச்சமாக நினைத்து அவர்கள் உடனடியாக களத்தில் இறங்கி அமுதாவுக்கு பிரசவம் பார்த்தனர். இதில் சில நேரத்திலேயே அமுதாவுக்கு பெண் குழந்தை பிறந்தது.

சுகப் பிரசவத்தில் பிறந்த பெண் குழந்தை பிறந்த சில நிமிடங்கள் அசைவற்று இருந்தது. இதையடுத்து அதிர்ந்து போன மருத்துவ குழுவினர் குழந்தைக்கு வாய் வழியாக மூச்சை செலுத்தி பிழைக்கவைத்தனர். இதையடுத்து தாயும் சேயும் நலமாக இருப்பதாக மருத்துவக்குழு தெரிவித்துள்ளது.

உரிய நேரத்தில் தாயையும் , சேயையும் காப்பாற்றிய மருத்துவக்குழுவுக்கு தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஜான் தாமஸ் பாராட்டி வாழ்த்து கடிதம் அனுப்பியுள்ளார். அத்துடன் அவர்களுக்கு தக்க ரொக்க பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பேரிடர் காலத்தில் மருத்துவர்கள் தங்கள் உயிரை ஒரு பொருட்டாக நினைக்காமல் சேவையே பிரதானம் என்று இருப்பது பலரையும் வியக்க செய்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.