
தமிழக முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் பதவி ஏற்கும் விழா இன்று காலை ஆளுநர் மாளிகையான ராஜ்பவனில் நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்ற அவரது மனைவி துர்கா ஆனந்தக் கண்ணீர் சிந்தினார்.
இன்று காலை ஆளுநர் மாளிகையில் தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஸ்டாலின் மனைவி துர்கா, மகன் உதயநிதி, பேரன், பேத்திகள் என குடும்ப உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
ஆளுநர், மு.க. ஸ்டாலினுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்த போது, ஸ்டாலின் மனைவி துர்கா ஆனந்தக் கண்ணீர் சிந்தினார். இந்தக் காட்சி டிவி.,க்களில் மீண்டும் மீண்டும் ஒளிபரப்பானது.

நடந்து முடிந்த தமிழக சட்டப் பேரவைக்கான தேர்தலில், 125 இடங்களில் வெற்றி பெற்று திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது. 10 ஆண்டுகளுக்குப் பின் திமுக ஆட்சி அமைப்பதால், கட்சியினரிடையே பெருத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
திமுக.,வின் சட்டசபை தலைவராக தேர்வு செய்யப்பட்ட ஸ்டாலின் இன்று முதல்வராக பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
தனது அமைச்சரவை சகாக்களை ஆளுநரிடம் ஸ்டாலின் அறிமுகம் செய்து வைத்தார். காலை 9.10 மணி அளவில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஸ்டாலினுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். தொடர்ந்து அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.
வழக்கமாக கடவுளின் பெயரால் என்று கூறி பதவிப் பிரமாணம் மேற்கொள்வர். ஆனால் இன்று எவரும் கடவுளின் பெயரால் என்று உறுதிமொழி எடுக்கவில்லை.

கொரோனா பரவல் காரணமாக எளிய முறையில் ஆளுநர் மாளிகையில் இந்தப் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட அரசியல் கட்சிப் பிரமுகர்கள், நீதிபதிகள் என நிகழ்ச்சியில் பங்கேற்க 200 பேருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டது. பாஜக., மூத்த தலைவர் இல.கணசேன், காங்கிரஸ் தலைவர் அழகிரி, தமிழக காங்கிரஸ் மேலிட பார்வையாளர் தினேஷ் குண்டுராவ், மதிமுக பொதுச் செயலர் வைகோ, மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள், தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இதைத் தொடர்ந்து, ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற தேநீர் விருந்தில் அனைவரும் கலந்து கொண்டனர்.
தமிழக முதல்வராக தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பதவியேற்றதும் சென்னை, தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயத்தில் தொண்டர்கள் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.