முஸ்லிம் தெரு வழியாக கோவில் ஊர்வலம் செல்லலாம்: காவல்துறை பாதுகாப்பளிக்க வேண்டும்!

Published:

madras high court
madras high court

முஸ்லிம்கள் வசிக்கும் தெரு வழியாக கோவில் ஊர்வலம் செல்லக் கூடாது என்ற தடைக்கு எதிராக இந்து முன்னணி சார்பில் தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

குறிப்பிட்ட மதத்தினர் ஒரு பகுதியில் அதிகம் வசிக்கின்றனர், தொழில் செய்கின்றனர் என்பதற்காக மற்ற மதத்தினர் அங்கு ஊர்வலம் செல்ல தடை விதிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பெரம்பலுார் மாவட்டம், வி.களத்துார் கிராமத்தில், கிழக்கு பகுதியில் முஸ்லிம், மேற்கு பகுதியில் ஹிந்து மதத்தினர் வசிக்கின்றனர். வி.களத்துார் கிராமத்தில் மூன்று நாட்கள் கோவில் திருவிழா நடத்தவும் ஊர்வலம் நடத்தவும் அனுமதி கோரி உயர் நீதிமன்றத்தில் ராமசாமி உடையார் என்பவர் மனு தாக்கல் செய்தார்.

விழா நடத்த அனுமதி வழங்கிய உயர் நீதிமன்றம், இரண்டாவது நாள் விழாவின் போது பிரதான சாலைகளில் மட்டும் ஊர்வலம் செல்ல அனுமதி வழங்கியது.

இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் ராமசாமி உடையார் மேல்முறையீடு செய்தார். இது தொடர்பாக சுன்னத் வால் ஜமாத் அமைப்பும் வழக்கு தொடுத்தது. இந்த மனுக்கள் நீதிபதிகள் கிருபாகரன், வேல்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தன.

ALSO READ:  திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

ராமசாமி உடையார் சார்பில் வழக்கறிஞர் ஜி.கார்த்திகேயன் ஆஜராகி, குறிப்பிட்ட தெருவில் குறிப்பிட்ட பிரிவினருக்கு சொத்துக்கள் உள்ளது என்பதற்காக மற்ற மதத்தினரின் ஊர்வலத்துக்கு தடை விதிக்க முடியாது என்றார்.

சுன்னத் வால் ஜமாத் அமைப்பு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் எஸ்.துரைசாமி, சில தெருக்களில், முஸ்லிம் சமூகத்தினர் மட்டுமே வசிக்கின்றனர்; அங்கு ஒரு ஹிந்து குடும்பம் கூட வசிக்கவில்லை; எனவே முஸ்லிம்கள் வசிக்கும் பகுதிகளில் ஊர்வலம் செல்ல வேண்டும் என வற்புறுத்துவதற்கு எந்த காரணமும் இல்லை என்றார்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், வேல்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவில்…

சாலை, தெருக்களை எந்த மதம், ஜாதி, இனத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். குறிப்பிட்ட பகுதியில் ஒரு மதத்தினர் அதிகம் பேர் வசிப்பதால் அதைக் காரணமாக வைத்து அந்த சாலையில் மற்ற மதத்தினரினர் ஊர்வலம் கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்க முடியாது.

அப்படித் தடை விதித்தால் அந்தச் சாலையில் செல்லவோ, போக்குவரத்துக்காகவோ கூட மற்ற மதத்தினரை அனுமதிக்க மாட்டார்கள். திருமண ஊர்வலங்கள், இறுதி ஊர்வலங்கள் கூட தடுக்கப்படும். அது, சமூகத்துக்கு நல்லது அல்ல. கோவில்கள், பல ஆண்டுகளாக உள்ளன. குறிப்பிட்ட பகுதியில், ஒரு மதத்தினர் அதிகம் வசிக்கின்றனர் என்பதற்காக, பாரம்பரிய மாக கிராம வீதிகளில் நடந்து கொண்டிருக்கும் ஊர்வலங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்க முடியாது. எனவே, பல ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கும், கோவில் விழாக்கள், ஊர்வலங்களுக்கு தடை விதிக்க முடியாது.

ALSO READ:  IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!

சட்டம் – ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்றால், போலீசார் தலையிட்டு அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க வேண்டும்; உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். எனவே, அனைத்து தெருக்கள், சாலைகளில், முதல் மற்றும் இரண்டாம் நாளில் ஊர்வலம் நடத்த அனுமதிக்க வேண்டும்.

சகிப்புத்தன்மை இன்றி இருப்பது நாட்டுக்கு நல்லது அல்ல. நம் நாடு மதசார்பற்ற நாடு. குறிப்பிட்ட மதத்தினர் ஒரு பகுதியில் பெரும்பான்மையாக வசிக்கின்றனர் என்பதற்காக அதை காரணமாக வைத்து, மற்ற மதத்தினரின் விழாக்கள், ஊர்வலங்களுக்கு அனுமதி மறுக்கக் கூடாது; தடை விதிக்கவும் முடியாது.

எனவே, அனைத்து சாலை, தெருக்களில் மத ஊர்வலம் உள்ளிட்ட எந்த ஊர்வலத்தையும் நடத்தலாம். மற்ற மதத்தினரின் உணர்வுகளை புண்படுத்தாமல், கோஷங்கள் எழுப்பாமல், சாலைகளில், மத ஊர்வலம் செல்ல உரிமை உள்ளது. வழிபாட்டு தலம், மத ரீதியான கட்டடம் இருப்பதால் பல ஆண்டுகளாக அனுபவிக்கும் மத உரிமையைப் பறிக்க முடியாது… என்று, நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

ALSO READ:  டெட் மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பில் உடனடி சட்ட நிவாரணம் தேவை!

Related articles

Recent articles

spot_img