June 21, 2021, 2:32 am
More

  ARTICLE - SECTIONS

  அனைத்து தினமும் அன்னையர் தினமே !

  புராணங்களிலும் இதிகாசங்களிலும் தனித்தன்மையான, தெய்வீக சக்தியுடைய அன்னையர்களின் பெருமையைப் பார்த்திருக்கிறோம்.

  mothersday
  mothersday

  கட்டுரை: கமலா முரளி

  மே மாதத்தின் இரண்டாவது ஞாயிறு சர்வதேச அன்னையர் தினமாக அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டு மே மாதம் 9 ஆம் நாள் அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது.

  புண்ணிய தேசமான பாரதத்திலோ அனுதினமும்… அனைத்து தினமும் அன்னையர் தினம் தானே !

  இந்தியக் கலாச்சாரம் மிகத் தொன்மையானது. பாரம்பரியம் மிக்கது. அன்பு, பொறுமை, இரக்கம், காருண்யம், பிறரைத் தன்னுயிர் போல் மதிப்பது போன்ற ஜீவகாருண்ய குணங்களைத் தலைமுறை தலைமுறையாகப் பேணி வளர்க்கும் சமூகப் பின்ணணியுடன்  கூடியது.

  நம் சமூகக் கட்டமைப்பில் “குடும்ப” அமைப்பே பிரதானம். குடும்பத்தின் ஆணிவேராக இருப்பது அன்னை தானே ! கூட்டுக் குடும்பமாக வாழ்ந்த குடும்பத்தில், அன்னையர்களின் கட்டுக்கோப்பான பாங்கே வளர்ச்சிக்கு இனிய இல்வாழ்க்கைக்கு உதவியது.

  புராணங்களிலும் இதிகாசங்களிலும் தனித்தன்மையான, தெய்வீக சக்தியுடைய அன்னையர்களின் பெருமையைப் பார்த்திருக்கிறோம்.

  தெய்வத்தை அன்னையாகவும், ஒவ்வொரு அன்னையையும் தெய்வமாகவும் போற்றி வணங்குவது நம் பண்பாடாகும் !

  பேரண்டமே அன்னையின் அருளால் தான் இயங்குகிறது. மும்மூர்த்திகள் முத்தொழிலைச் செய்ய  ஆதிபராசக்தி ஆக்ஞை இட்டு வழி நடத்துகிறாள். மலைமகள், திருமகள், கலைமகள் அருளின்றி எச்செயலை நாம் செய்திட முடியும் ! எக்குறையையும் அன்னை சக்தியிடம் முறையிட்டால் ஒரு நொடியில் குறை தீர்க்கும் தேவியாக, “அம்மா ! அம்மா !” என்ற கூப்பிட்ட குரலுக்கு ஓடி வரும் அன்னையாக தேவியரை வணங்கும் நாடு இது !

  லவ குசர்களை பராக்ரமசாலிகளாக, விவேகிகளாக வளர்க்கும் அன்னை சீதா, தர்ம சிந்தனையில் இருந்து மாறாமல், பொறுமை , வீரம், தேச நலம் ,பெரியோரை மதித்து நடத்தல் என மிகச்சிறந்த பண்புகளை தன் பிள்ளைகளுக்கு ஊட்டி வளர்த்த குந்தி தேவி, எத்துனை கஷ்டங்கள் வந்தாலும் தன் பக்தி நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளாத சிறந்த பக்தனை வளர்த்த பிரகலாதனின் அன்னை லீலாவதி, பாரத தேசம் எனப் பெயர் வரக் காரணமாயிருந்த பரதனின் தாய் என நம் நாட்டின் பெருமைப்படக்கூடிய, பெருமிதப்படக்கூடிய அன்னையரின் பட்டியல் நீண்டு கொண்டே போகும் !

  கடவுள் எல்லா இடத்திலும் நேரிடையாக அன்னை உருவத்தில் உள்ளார் எனச் சொல்லுவார் !

  நம் இந்தியக் குடும்பங்களில் அன்னைக்குத்தான் எத்தனை மரியாதை! உறவுகளே இல்லை என துறவறம் கொள்ளும் துறவி கூட அன்னைக்கு உரித்தான கடமைகளையும் மரியாதையையும் செய்ய வேண்டும்.

  மகவைப் ஈன்று புறந் தருதலோடு அன்னையின் பணி முடிவதில்லை ! அங்கே தான் பணி தொடங்குகிறது ! விருப்பு வெறுப்பு இன்றி மலஜலம் துடைத்து,பிணிக்கு மருந்திட்டு என அவள் பணி தொடர்ந்து கொண்டே இருக்கும்.

  அம்மா என்பவள் வெறும் உணவு அளித்து, உடல் நலத்தைப் பேணுபவள் மட்டுமல்ல ! பிள்ளைகளின் மனநலன், ஆத்ம பலம் இவற்றையும் காப்பவள் அன்னையே ! நல்ல பண்புகளை இளமை முதலே சொல்லித் தருபவள் !

  “எனக்கென்ன மனக்கவலை ? என் தாய்க்கன்றோ தினம் தினம் என் கவலை !” என ஒரு பாடலில் வருவதைப் போல, அம்மா இருந்து விட்டால், ஒரு சுகமான பலம் தான் பிள்ளைகளுக்கு ! அது அறுபது வயதான பிள்ளையாய் இருந்தாலும் !

  இவ்வளவு சிறப்பு வாய்ந்த தாய்க்கு ஒரு நாள் “அன்னையர் தினம்” கொண்டாடி, புடவை துணி வாங்கி, கேக் வெட்டி, சிறப்பு வாழ்த்து அனுப்பி, ஒரு நாள் அவள் சமையல் செய்ய வேண்டாம் எனச் சொல்லி சந்தோஷமாக இருப்பதும் நம் நாட்டு வழக்கம் இல்லை !

  தினம் தினம், அனுதினம் அன்னையைப் போற்றுவதே நம் வழக்கம் !

  போற்றுதலுக்கு உரியவராக காருண்யத்துடன், இரக்க உணர்வுடன், பொறுப்புணர்வுடன், தர்மசிந்தனையுடன் , பொறுமையுடன் இருப்பது நம் தேச அன்னையரின்   மாண்பு !

  தாய் சொல்லைத் தட்டாது வாழ்வது பிள்ளைகளின் மாண்பு !

  தினந்தோறும் அன்னையின் பாதங்களில் விழுந்து சேவித்துக் கொள்வது தொன்றுதொட்ட வழக்கமாக இருந்தது ! தற்போது முக்கிய தினங்களில் மட்டும் சேவிக்கும் வழக்கம் இருக்கிறது !

  உலக அன்னையர் தினத்தைக் கொண்டாடுவதில் மகிழ்ச்சியே !

  மற்ற நாட்களிலும் அன்னையர் சொல்லும் நல்ல கருத்துகளை மனதில் கொண்டு நடத்தல் வேண்டாமா ?

  எந்த அன்னை குடித்துக் கும்மாளமிட வேண்டும் எனச் சொல்லுவார் ?

  எந்த அன்னை வாகனங்களை வேகமாக ஓட்டி விபத்து நிலமைக்கு ஆக்கிக் கொள்ள வேண்டும் எனச் சொல்லுவார் ?

  எந்த அன்னை உலகம் பழிக்கும் ஈனச் செயல்களைச் செய்ய வேண்டும் எனச் சொல்லுவார் ?

  எந்த அன்னை ( பெண் )பிள்ளைகள் குடும்ப பொறுப்பின்றி உலாத்தவேண்டும் எனச் சொல்லுவார் ?

  பொறுப்புணர்வையும் தர்ம சிந்தனையையும் வளர்க்கும் இரக்க குணமிக்க அன்னையரும், அன்னையின் வழி நடக்கும் பிள்ளைகளும் பெருகட்டும் !

  அனுதினமும் அனைத்து தினமும் அன்னையர் தினமே !

  கொண்டாடுவோம் அன்னையர் தினத்தை !

  kamala murali

  திருமதி.கமலா, ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டமும், கல்வியியலில் முதுகலைப் பட்டமும் பெற்றவர். ஆசிரியராக கல்விப் பணியில் இருபத்தெட்டு ஆண்டுகள் பணிபுரிந்தவர்., கேந்த்ரிய வித்யாலயா அகில இந்திய சிறந்த ஆசிரியருக்கான பரிசு பெற்றவர். மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் ஆங்கில வழியில் பல சொற்பொழிவுகளும் பயிற்சி வகுப்புகளும் நடத்தியிருந்தாலும், தாய் மொழியாம் தமிழ் மொழியில் கதை, கவிதை மற்றும் கட்டுரை எழுதுவதில் ஆர்வம் உள்ளவர்.

  1 COMMENT

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,252FansLike
  0FollowersFollow
  22FollowersFollow
  74FollowersFollow
  1,261FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-