
மேற்கு வங்கத்தில் ‘யாஸ்’ புயல் பாதிப்புகள் குறித்து பிரதமர் நடத்திய ஆய்வுக் கூட்டத்தினை முதல்வர் மம்தா புறக்கணித்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மேற்கு வங்க முதல்வருடன் அம்மாநில தலைமைச் செயலாளரும் இக் கூட்டத்தைப் புறக்கணித்ததைத் தொடர்ந்து அவர் நேற்று திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
‘யாஸ்’ புயல் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய பிரதமர் நரேந்திர மோதி, விமானம் மூலம் நேற்று காலை மேற்கு வங்கம் வந்தார். பின்னர் பாதிப்புகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதில் பிரதமர் நரேந்திர மோதியும், மேற்கு வங்க ஆளுநர் ஜக்தீப் தன்கரும் கலந்து கொண்டனர். அவர்கள் இந்தக் கூட்டத்துக்கு வந்தபோது, அம்மாநில அரசின் சார்பில் முதல்வர் மம்தா பானர்ஜியும் கலந்து கொள்ள வேண்டும். ஆனால் அவர் இக்கூட்டத்தில் கலந்து கொள்ள வரவில்லை.
இதனால் பிரதமர் மோதி, அரை மணி நேரம் காத்திருந்தார். அப்போது அங்கெ திடீரென வந்த மம்தா, பிரதமரிடம் அறிக்கை ஒன்றை அளித்துவிட்டு, தாம் வேறு கூட்டத்துக்கு செல்ல வேண்டி இருப்பதாகக் கூறி புறப்பட்டுவிட்டார். நாட்டின் வரலாற்றில் இதுவரை எந்த முதல்வரும் இதுபோல ஆணவத்துடனும் பொறுப்பற்ற தன்மையுடனும் நாட்டின் பிரதமரிடம் நடந்து கொண்டது இல்லை என்ற கருத்துகள் இப்போது எழுந்துள்ளன.
முதல்வர் மம்தா பானர்ஜியுடன் சேர்ந்து, அம்மாநில தலைமைச் செயலாளர், மாநில அரசு உயர் அதிகாரிகள் என அனைவரும் பிரதமர் நடத்திய கூட்டத்தைப் புறக்கணித்தனர். இந் நிலையில், மேற்குவங்க மாநில தலைமைச் செயலாளர் அலபோன் பந்தோபாத்யாயா அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டு, மத்திய அரசுப் பணிக்கு அழைக்கப்பட்டார்.
1987-ம் ஆண்டின் ஐ.ஏ.எஸ். கேடரான இவர் கோல்கத்தா மாநகராட்சி ஆணையராகவும் மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் ஆட்சியராகவும் பணியாற்றி வந்தவர். அவர் மாற்றப் பட்டதை அடுத்து, மாநில நிதித்துறை செயலாளராக பதவி வகித்து வந்த எச்.கே.திவேதி என்பவர் தற்காலிக புதிய தலைமைச் செயலாளராக நியமிக்கப் பட்டுள்ளார்.
மேற்கு வங்கத்தில் நடந்துள்ள இந்தச் சம்பவம், நாட்டின் நிர்வாக அமைப்பு முறையையே கேள்விக்கு உள்ளாக்கியுள்ளதாக கருத்துகள் எழுந்துள்ளன. மம்தா அவமதித்தது மோதி என்ற நபரை அல்ல, நாட்டின் பிரதமரை என்று சமூக மட்டத்தில் கருத்துகள் பகிரப் படுகின்றன.
அடுத்து வரும் தேர்தலில், தன்னை காங்கிரஸுக்கு மாற்றாக முன்னிலைப் படுத்த விரும்பியுள்ள மம்தா பானர்ஜி, அதற்காக மோடி எதிர்ப்பு என்பதைக் கையில் எடுத்துள்ளார். ஆனால் அதனால் மாநிலம் பல்வேறு வகையில் பாதிக்கப் படும் என்பதை அவர் கொஞ்சமும் நினைத்துப் பார்க்கவில்லை என்பதும், அதிகார வெறியில் நாட்டின் நலனை காவு கொடுத்துள்ள மம்தா பானர்ஜி விரைவில் அதற்கான பலனை அனுபவிப்பார் என்றும் கருத்துகள் பொதுவெளியில் பகிரப்பட்டு வருகின்றன.