கடமையைச் செய்த அதிகாரிக்கு தமிழக அரசு தண்டனை: அண்ணாமலை கண்டனம்!

Published:

annamalai

தனது கடமையை சரியாகச் செய்த ஓர் அதிகாரிக்கு தமிழக அரசு தண்டனை அளித்து, தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்று கண்டனம் தெரிவித்துள்ளார் பாஜக., மாநிலத் தலைவர் அண்ணாமலை.

ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத்தின் மதுரை வருகையை ஒட்டி சாலைகளை சீரமைக்க உத்தரவிட்ட மதுரை மாநகராட்சி உதவி ஆணையர் சண்முகம் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. தமிழக அரசின் இந்தப் பாரபட்சமான போக்கைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளார் தமிழக பாஜக., தலைவர் அண்ணாமலை.

அவரது அறிக்கையில்…ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் அகில இந்திய தலைவர் மோகன் பகவத் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து அமைப்பின் நிர்வாகிகளையும் பொதுமக்களையும் சந்திப்பது வழக்கமான ஒன்று. இவருக்கு உயர்மட்ட பாதுகாப்பான இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்படுகிறது. உலகின் பெரிய சேவை அமைப்புகளில் ஆர்.எஸ்.எஸ்., முதன்மையாக திகழ்கிறது. அரசியலுக்கு அப்பாற்பட்டு இந்திய தேசத்தின் வளர்ச்சிக்கும், இந்திய மக்களின் உயர்வுக்கும் சேவை ஆற்றுகிற அமைப்பாக ஆர்எஸ்எஸ் விளங்குகிறது.

ALSO READ:  சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!

மோகன் பாகவத், மதுரை, கன்னியாகுமரி பகுதிகளில் 22 முதல் 26-ம் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இவர் மதுரை வருகைக்கான ஏற்பாடுகளை அங்குள்ள அரசு அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர். நாட்டின் ‛அதி உயர் பாதுகாப்பு’ கொண்ட தலைவர் வருகையின்போது வழக்கமாக என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமோ அதை பின்பற்றி மதுரை மாநகராட்சி நிர்வாகிகள் செயல்பட்டுள்ளனர். இதற்கென மதுரை மாநகராட்சி துணை ஆணையர் சண்முகம், மாநகராட்சி அதிகாரிகளுக்கு பராமரிப்பு பணிகள் குறித்து கடிதம் அனுப்பியுள்ளார். இதற்காக தமிழக அரசு அவரை பணி விடுவிப்பு செய்துள்ளது மிகவும் வருந்ததக்கது, கண்டிக்கத்தக்கது.

யார் யார் வந்தால் என்னென்ன பராமரிப்பு, பாதுகாப்பு என்பதற்கு தமிழக அரசு தனியாக பட்டியல் வைத்திருக்கிறதா? பாதுகாப்பு பட்டியலில் இருக்கும் தலைவர்கள் வரும்போது அவர்களுக்கு உரிய வசதி செய்து கொடுப்பது சட்ட விரோதமா? இந்த நடவடிக்கையின் மூலம் அரசு அதிகாரிகள் எந்த வகையில் செயல்பட வேண்டும் என தமிழக அரசு விரும்புகிறது என்று புரியவில்லை.

ALSO READ:  கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

திமுக.,வின் சாமானியத் தலைவர்கள் சென்றால் கூட, மாநகராட்சி அதிகாரிகளே நேரில் சென்று சாலை சீரமைப்பு, அனைத்து விதமான பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப் படுகிறது. ஆனால், அரசு தாங்கள் விரும்பாத அமைப்பின் மிக முக்கியமான தலைவர் வருகைக்கான ஏற்பாடுகளை வழக்கம்போல் செய்த அதிகாரிக்கு தண்டனை கொடுப்பது நியாயமா? மேலும் இத்தகைய நடவடிக்கை தவறான முன்னுதாரணம் ஆகிவிடும்.

தமிழக அரசு நேர்மையாக பாரபட்சமின்றி நடந்து கொள்வதை உறுதி செய்ய வேண்டும் என்றால் துணை ஆணையர் சண்முகம் பணிவிடுவிப்பு ரத்து செய்யப்பட வேண்டும். இல்லையென்றால் திமுக ஆட்சியின் ஒருதலைப்பட்சமான செயலையும், அதிகாரிகளை பழிவாங்கும் செயலையும் மக்கள் மன்றத்திற்கு எடுத்துச்செல்வோம்… என்று தெரிவித்துள்ளார்.

Related articles

Recent articles

spot_img