
மதுரை அழகர் கோயில் 18ம் படி கருப்பண்ணசாமிக்கு திருப்புவனத்தை சேர்ந்த பக்தர் ஒருவர் 200 கிலோ எடை, 18 அடி நீள அரிவாளை நேர்த்திக்கடனாக வழங்கியுள்ளார்.
சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தி, திருப்புவனம் உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் அரிவாள் தயாரிக்கப்பட்டது. போலீசார் கெடுபிடி காரணமாக, திருப்பாச்சேத்தி அரிவாள் எனப்படும் வீச்சரிவாள் தயாரிக்கப்படுவது முற்றிலும் தடை செய்யப்பட்டது.
தற்போது விறகு, செடி, கொடிகளை வெட்டுவதற்கு பயன்படுத்தப்படும் ஒரு அடி நீள அரிவாள் மட்டும் தயாரிக்கப்படுகிறது. மேலும், ஆடி மற்றும் புரட்டாசி மாதங்களில் கோயில்களில் நேர்த்திகடனுக்காக செலுத்தப்படும் அரிவாள் அதிகளவில் தயாரிக்கப்படுகிறது.
மதுரை அழகர் கோயில் பதினெட்டாம் படி கருப்பண்ணசாமி, மாரநாடு கருப்புசாமி, சோணை சாமி போன்ற பல்வேறு காவல் தெய்வங்களுக்கு நேர்த்திக்கடனாக ஒரு அடி முதல் 18 அடி உயரம் வரை அரிவாள்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது.
திருப்பாச்சேத்தியில் இருந்து பெரும்பாலான அரிவாள் செய்யும் தொழிலாளர்கள் திருப்புவனத்திற்கு வந்து விட்டனர். திருப்புவனத்தில் தற்போது 12 அரிவாள் பட்டறைகள் செயல்படுகின்றன.
திருப்புவனத்தை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் மதுரை அழகர் கோயில் 18ம் படி கருப்பண்ணசாமிக்காக 18 அடி நீளமும், 200 கிலோ எடையும் கொண்ட ராட்சத அரிவாளை நேர்த்திக்கடனாக வழங்கியுள்ளார்.
பொதுவாக உயரமான அரிவாள் செய்யும் போது எடையை குறைத்து விடுவார்கள். தற்போது இந்த ராட்சத அரிவாள் 18 அடி நீளமும், 200 கிலோ எடையும் கொண்டது.
அழகர் கோயிலில் தனியாக மேடை அமைத்து ராட்சத அரிவாள் வைக்கப்பட உள்ளது. முக்கியமாக, நான்கு திசைகளிலும் இரும்பு கம்பிகள் வைத்து இழுத்து கட்டப்பட்டு நிலை நிறுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.