
லால்குடி அருகே உர கடையில் வெளிமாநில கொள்ளையன் கொள்ளை முயற்சியில் ஈடுப்பட முயன்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே நெருஞ்சலக்குடி ஊராட்சி மாந்துறை மெயின்ரோட்டில் சகாயம் உரக்கடை செயல்பட்டு வருகிறது. இந்த உரக்கடையை நகர் கிராமத்தைச் சேர்ந்த சகாயம் மகன் ஜான் பல ஆண்டுகளாக நடத்தி வருகிறார்.
இந்நிலையில் நேற்று இரவு மர்ம நபர் கேட்டின் பூட்டை உடைத்து கடையின் உள்ளே சென்று கல்லாவின் பூட்டை உடைத்து திறந்து கொள்ளையடிக்க முயன்று உள்ளார்.
அதில் சில்லரையாக காசுகள் மட்டுமே இருந்ததால் அதனை எடுக்காமல் ஏமாற்றமடைந்து அங்குள்ள கம்பியில் கடையின் பூட்டை தொங்க விட்டு தப்பி சென்றுள்ளார்.
இன்று காலை வழக்கம்போல் கடையைத் திறக்க வந்த ஜான் நடந்த சம்பவத்தை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் லால்குடி காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு கடையிலுள்ள சிசிடிவி கேமராவில் பதிவான வெளிமாநில திருடனின் புகைப்படங்களை வைத்துக்கொண்டு வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மேலும் இந்த உர கடையில் இதற்கு முன் மூன்று முறை இதே போன்ற திருட்டு சம்பவங்கள் நடந்துள்ளன. முதல் முறை ரூ.13000, இரண்டாவது முறை ரூ.27,000, மூன்றாவது முறை ரூ.7000 ரூபாய் பணமும் திருடு போயுள்ளது.
அதிர்ஷ்டவசமாக இந்த முறை கல்லாவில் பணம் இல்லாததால் கொள்ளை முயற்சியில் தோல்வியடைந்து ஏமாற்றத்துடன் தப்பிச் சென்றனர்.