
இடது கால் முறிவு ஏற்பட்ட நபருக்கு வலது காலில் கட்டு போட்டு அதே கட்டுடன் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த அதிர்ச்சி சம்பவத்தை தென்காசி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் செய்துள்ளதாக புகார்கள் எழுந்தன.
எனினும் இது குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவமனை நிர்வாகம் விளக்கமளித்தால் மட்டுமே நடந்தது என்ன என்பது குறித்து முழுமையாக தெரியும்.
தென்காசி மாவட்டம், கீழப்புலியூர் பகுதியைச் சேர்ந்தவர் மாடசாமி. இவர் தனது வீட்டு மாடியில் இருந்து கால் தவறி விழுந்துள்ளார். உடனே உறவினர்கள் அவரை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.
அவருக்கு எக்ஸ்ரே ஸ்கேன் எடுத்து பரிசோதித்தபோது மாடசாமியின் இடது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து அவருக்கு காலில் சிகிச்சை அளித்து மாவு கட்டுப் போட்டனர். ஆனால் மாடசாமியின் இடது காலுக்கு பதில் வலது காலில் கட்டு போடப்பட்டிருப்பதை பார்த்து உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
அதாவது மருத்துவர்கள் கவனக்குறைவாக மாடசாமியின் இடது காலில் கட்டு போடுவதற்கு பதில் வலது காலில் கட்டு போட்டுள்ளனர். இதுகுறித்து மாடசாமி உறவினர்கள் மருத்துவர்களிடம் கேட்டபோது, தெரியாமல் நடந்துவிட்டது என்றும் எலும்பு முறிவு அதிகமாக இருப்பதால் மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுங்கள் என்றும் கூறியதாக தெரிகிறது.
இதையடுத்து வலது காலில் போடப்பட்ட கட்டை அவிழ்த்து முறைப்படி இடது காலில் போட்டு அனுப்பும்படி உறவினர்கள் கேட்டுள்ளனர். ஆனால் அதற்கும் மருத்துவர்கள் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து தவறாக போடப்பட்ட கட்டுடன் மாடசாமியை அவரது உறவினர்கள் திருநெல்வேலி அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர்.
அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். தென்காசி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் மருத்துவர்களின் கவன குறைவால் எலும்பு முறிவு ஏற்பட்ட நபருக்கு தவறுதலாக கட்டுப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் எந்தவித விளக்கத்தையும் அளிக்கவில்லை.