spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஅடடே... அப்படியா?முருக பக்தர்களின் தலைமைத் தலம்!

முருக பக்தர்களின் தலைமைத் தலம்!

- Advertisement -
tiruchendur-murugan1
tiruchendur-murugan1

முருக பக்தர்களுக்கு எத்தனை எத்தனையோ தலங்கள் இருப்பினும் சைவ சமயிகளுக்கு சிதம்பரம் போலவும், ஸ்ரீ வைணவர்களுக்கு திருவரங்கம் போலவும் முருக பக்தர்களின் தலைமைத்தலமாக விளங்குவது திருச்செந்தூர்.

கௌமார சைவர்களாக குமார பரமேஸ்வரரை பரம்பொருளாக கொண்டாடும் சைவத்தமிழர்கள் செந்திலம்பதி மேய பெருமானை என்றென்றும் போற்றுவர்.

முருக தலங்களில் சிறப்பானவையாக ஆறுபடை வீடுகள் சொல்லப்பட்டாலும், அவற்றினுள்ளும் சங்க காலத்திலேயே பல்வேறு இலக்கியங்களிலும் பேசப்பட்ட பெருமையும் தேவாரத்தில் குறித்துரைக்கப்பட்ட சிறப்பும் கொண்டது செந்திலம்பதி.

ஜெயந்திபுரம் என்றும் திருச்சீரலைவாய் என்றும் வடமொழி – தென்மொழி நூல்களில் பலவாறாக புகழ்ந்துரைக்கப்படும் இந்த மகாஸ்தலத்தின் தல புராணம் மிகச்சிறப்புடையது.

வென்றிமாலைக்கவிராயர் என்ற பெருமகனார் எழுதிய இப்புராணத்தை இலங்கை தலங்களில் மிகச்சிறப்பாகவும் பக்திபூர்வமாகவும் படனம் செய்து வருவதை காணலாம்.

இப்புராணத்துக்கு எங்கள் ஊரை சேர்ந்த – நூறாண்டுகளுக்கு முன் வாழ்ந்த சங்கர. சிவப்பிரகாசபண்டிதர் உரை எழுதியதோடு அதனை யாழ்ப்பாணம் சைவ பரிபாலனசபை நூலாக வெளியிட்டுள்ளது.

ஆதிசங்கரர் இத்தலத்திலேயே சுப்பிரமண்ய புஜங்கத்தை பாடினார் என்பர். பிறப்பால் ஸ்ரீ வைணவரான பகழிக்கூத்தர் இப்பெருமான் பேரில் பாடிய பிள்ளைத்தமிழ் பிரபந்தம் பிள்ளைத்தமிழ் மரபில் உயர்ந்து நிற்பதாகும்.

பிறவி ஊமையான குமரகுருபரர் இப்பெருமான் சந்நதியில் பேசும் திறனும் கந்தர் கலி வெண்பா என்ற உயர்ந்த பிரபந்தம் பாடும் திறனும் ஒருங்கே வாய்க்கப்பெற்றார்.

வீரபாஹு தேவர் என்ற முருகனின் சேனாபதியால் காக்கப்படும் இந்த ஸ்தலத்தில் கொடுக்கப்படும் பன்னீர் இலை விபூதி அத்புதமான பிரசாதமாக கருதப்படுகிறது.

இத்தலத்தில் அந்தணர்கள் ஓதும் குமாரஸூக்தம் என்ற வேதமந்த்ரங்களை நாமும் பயன்படுத்த வேண்டும் என்ற ஆவல் கொண்டிருந்தார் நம் குருநாதர்களில் ஒருவரான நீர்வேலி இராஜேந்த்ரக்குருக்கள். பெரிதும் முயன்று அதனை கிரந்த லிபியில் நூலாக வெளியிட்டார்.

இந்த பேராலயத்தில் நிகழும் வைகாசி விசாக வசந்தோத்ஸவம், ஆவணிப்பெருவிழா, ஸ்கந்த சஷ்டிப்பெருவிழா, மாசி மஹோத்ஸவம் என்பன மிகச்சிறப்பானவை.

இவற்றில் கந்தசஷ்டி சூரசம்ஹாரம் உலகப்புகழ் பெற்றது. செந்தூர் நவக்கிரக ஸ்தலங்களில் குருஸ்தலம். இங்கே குமரனை வழிபட குரு தோஷம் அகலும் என்பது நம்பிக்கை. அவன் குருதோஷமல்ல எல்லா குற்றங்களையும் அகற்ற வல்ல வடிவேற்பெருமான்.

இங்கே, ஆவணிப்பெருவிழாவும் மாசி மகோத்ஸவமும் அச்வினி நக்ஷத்திரத்தில் ஆரம்பமாகி, உத்தர நக்ஷத்திரம் வரையிலும் பன்னிரு தினங்கள் கொடியேற்றம், திருத்தேருலா என்பவற்றோடு கூடிய பெருவிழாக்களாக நிகழ்கின்றன.

நம் இலங்கை நல்லூர் கந்தனின் மஹோத்ஸவமும் செந்தூரின் ஆவணி மஹோத்ஸவமும் சங்கமிக்க காணலாம். நல்லூரிலும் தேவியர் தனி வாகனத்திலும் சுவாமி தனிவாகனத்திலும் எழுந்தருளல் முதலிய பல திருச்செந்தூர் மரபுகள் ஆலய பரிபாலகர்களால் உள்வாங்கப்பட்டு பேணப்பட்டு வருவதையும் அவதானிக்கலாம்.

செந்தூரில் ஆறுமுகநயினார் என்ற ஷண்முகப்பெருமானுக்கான முதன்மை தனித்துவமானது. எப்படி சிதம்பரத்தில் நடராஜரோ, ஸ்ரீரங்கத்தில் ரங்கராஜரோ, அது போல செந்தூரில் ராஜராஜராக ஷண்முகர் தென்திசை நோக்கி அருள்கிறார்.

ஆவணி மற்றும் மாசி மகா உத்ஸவங்களில் ஏழாம் நாள் ஆறுமுக சிவனார் எழுந்தருளும் அதியத்புத வைபவத்தைக் காணலாம். சிவப்பு சாத்தி, வெள்ளை சாத்தி, பச்சை சாத்தி அவர் தாமே முத்தொழிலாற்றும் முதல்வர் என வெளிப்படுத்தக்காணலாம்.

இதை விட, செந்தூரின் சிறப்பு இத்தலத்தில் சைவ சித்தாந்திகள், ஸ்ரீ வைஷ்ணவர்கள், ஸ்மார்த்த மரபினர், மாத்வர்கள் என்று இந்து தர்மத்தின் பல்வகை மரபாருக்கும் பல உரிமைகள் வழங்கப்பட்டுள்ளமையாகும்.

பல தலத்திலும் அரசர்களே கோபுரங்களை எழுப்ப, இத்தலத்து இராஜகோபுரத் திருப்பணி திருவாவடுதுறை ஆதீன துறவிகளால் மேற்கொள்ளப்பட்டதாகச் சொல்வர்.

இத்தலத்தில் மூலவரை திருமேனி தீண்டிப் பூசிப்பவர்கள் போற்றி (போத்திமார்) என்றழைக்கப்படும் மாத்வ மரபு மலையாள அர்ச்சகர்கள்.

உத்ஸவரான ஷண்முகநாதரை அர்ச்சிப்பவர்கள் ஆதிசைவ மரபில் வந்த சிவாச்சார்யர்கள்.

கோயிலின் வடபால் விளங்கும் ஏழுமலையானுக்கு ஸ்ரீ வைஷ்ணவ முறையில் பட்டாச்சார்யர்களால் பூசை நடக்கிறது.

murugan thiruchendur
murugan thiruchendur

இவர்களை விட, ஆலய ஸ்தானீகர்களாக பெருமானின் உத்தரவில் பாடப்பட்ட அதிசயம் நிகழ்த்தும் திருச்செந்தூர் புராணம் விதந்துரைக்கும் த்ரிசுதந்திரர்கள் என்ற செந்திலாயிரவர் என்றழைக்கப்படும் அந்தணர்கள் காணப்படுகின்றனர்.

இவ்வாறு எல்லா மரபையும் அரவணைக்கும் பெருமானாக- சனாதன தர்மத்தின் நிலைக்களனாக விளங்குகிறான் செந்திலாதிபன்.

செந்திலாண்டவனிடம் ஈழத்துச் சைவர்கள் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தமைக்கு இன்னும் பலப்பல சான்றுகள் உண்டு.

சுனாமி வந்த போது கடலோரம் விளங்குகிற செந்தூரில் மட்டும் கடல் பின்வாங்கியது. அருகிலுள்ள ஊர்கள் எல்லாம் கடற்கோளால் நாசமாக கடலலை தழுவும் செந்தூர் அதிசயம் நிகழ்த்தியது.

புகழ்பெற்ற கந்தசஷ்டி கவசத்தில் ஆறு கவசம் இருப்பினும் செந்தூர் கவசமே பலராலும் பாடிப் பயன்பெறும் மரபை பார்க்கலாம்.

இத்தகு செந்தில் மேய வள்ளி மணாளனுக்கான ஆவணி மகா உத்ஸவம் ஆரம்பமாகியுள்ளது. அவனருள் வேண்டி நாமும் பிரார்த்திப்போம்.

அந்தண்மறை வேள்வி காவற் கார
செந்தமிழ்சொல் பாவின் மாலைக் கார
அண்டருப கார சேவற் கார …… முடிமேலே
அஞ்சலிசெய் வோர்கள் நேயக் கார
குன்றுருவ ஏவும் வேலைக் கார
அந்தம்வெகு வான ரூபக் கார …… எழிலான
சிந்துரமின் மேவு போகக் கார
விந்தைகுற மாது வேளைக் கார
செஞ்சொலடி யார்கள் வாரக் கார …… எதிரான
செஞ்சமரை மாயு மாயக் கார
துங்கரண சூர சூறைக் கார
செந்தினகர் வாழு மாண்மைக் கார …… பெருமாளே…
என்று அருணகிரிநாதர் பாடும் செந்திற் பெருமான் எம் துயர் தீர மயில் மிசை விரைந்து வந்தருளட்டும்.

  • தியாக. மயூரகிரிக் குருக்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe