
டிஜிட்டல் உலகில் எல்லாமே கைக்குள் வந்துவிட்ட நிலையில் உடல் நலம் பற்றிய கவலை மக்களுக்கு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்துகொண்டே வருகிறது. குழந்தைகளுக்கு டி.வி பார்த்து சாப்பாடு ஊட்டுவது தவறு, அவர்களை டி.வி பார்க்க அனுமதிக்கக் கூடாது என்ற காலம் மலையேறிப் போய்விட்டது.
ஸ்மார்ட் போன் பயன்பாடு என்பது கட்டாயமாகிவிட்டது. ஆன்லைன் வகுப்பு என்ற பெயரில் குழந்தைகளுக்கு கூட ஸ்மார்ட் போனை கொடுக்கும் நிலை வந்துவிட்டது. இன்றைக்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் நீண்ட நேரம் பொழுதைக் கழிப்பது ஸ்மார்ட் போன் முன்னிலையில்தான். இதனால் ஏற்படக் கூடிய பாதிப்புகள் பற்றிப் பார்ப்போம்.
நீண்ட நேரம் உடல் உழைப்பு இன்றி ஒரே இடத்தில் அமர்ந்து, படுத்த நிலையில் இருப்பதன் மூலம் உடல் பருமன் ஏற்படும்.
வாழ்வியல் மாற்றம்தான் உடல் பருமன் ஏற்பட முக்கிய காரணம். நீண்ட நேரம் மொலைபல் போனில் விளையாடுவது, யூடியூப் வீடியோ பார்ப்பது, டி.வி சீரியல் பார்ப்பது உடல் உழைப்பைக் குறைத்து உடல் பருமனை ஏற்படுத்திவிடுகிறது.
உடல் பருமன் காரணமாக சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் என பல நோய்கள் வரிசைகட்டி வருவதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது.
நீண்ட நேரம் மொபைல் போன் பார்ப்பது பார்வைத் திறனை மழுங்கடிக்கும். நீண்ட நேரம் கண்கள் சிமிட்டாமல் பார்க்கும் போது கண்களுக்கான ஊட்டச்சத்துக் குறைபாடு ஏற்படுகிறது.
இதனால் கண்கள் உலர்தல், கண் எரிச்சல், பார்வைத் திறன் குறைபாடு என பல பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது.
டிஜிட்டல் உலகின் மீது அதீத கவனம் ஏற்படுவதால் தூக்கம் தடைப்படுகிறது. மேலும் ஸ்மார்ட் போனில் இருந்து வெளிப்படும் நீல வெளிச்சம் தூக்கமின்மையை ஏற்படுத்துகிறது. தூக்கமின்மை காரணமாக மீண்டும் மொபைல் போனை பார்க்க மனம் தூண்டப்படுகிறது.
நீண்ட நேரம் குனிந்து மொபைல் போனை பார்ப்பதால் கழுத்து எலும்பு தேய்மானம் அதிகரிக்கிறது. இதனால் கழுத்து வலி, முதுகு வலி, தோள்பட்டை வலி ஏற்படலாம். மேலும், கையில் மொபைல் போனை தாங்கிக் கொண்டே இருப்பது கைகளையும், விரல்களையும் வலுவிழக்கச் செய்யும்.
அதீத ஸ்மார்ட் போன் பயன்பாடு அனைத்துக்கும் மேலாக உறவு நிலையில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. அருகில் உள்ள அம்மா, அப்பா, கணவன், மனைவி, மகன், மகளுடன் பேசுவதற்கான வாய்ப்பை ஸ்மார்ட் போன் குறைத்துவிடுகிறது.
ஸ்மார்ட் போனை பயன்படுத்தும் போது நேரம் போனதே பலருக்கும் தெரிவதில்லை. இதனால் அன்புக்கினியவர்களுடன் உரையாட முடியாமல் போகிறது. இது உறவு முறிவு வரையிலும் கொண்டு செல்லலாம்.