யோகா மற்றும் இயற்கை மருத்துவ மருத்துவமனையின் கைநுட்பத் துறையின் தலைவர் டாக்டர் ஒய் தீபாவுக்கு ஆயுஷ் அமைச்சகத்தின் விருது வழங்கப்பட்டுள்ளது.
இந்த விருதை தெலுங்கானா ஆளுநர் மற்றும் புதுவையின் துணை நிலை ஆளுநர் (பொறுப்பு) டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன் வழங்கியுள்ளார்.
யோகா, இயற்கை மருத்துவம் ஆகியவை காலம் காலமாக இருக்கக் கூடிய மகத்துவ மருத்துவங்களில் ஒன்றாகும். இவை இரண்டுமே உடல் ஆரோக்கியத்துடன் தொடர்புடையதாகும்.
இந்த இரு மகத்துவங்கள் குறித்து ஒரு சிலரே அறிந்திருந்த நிலையில், பலர் அறிந்தும் பயன்படுத்தாமல் இருந்த நிலையில் கொரோனா எனும் கொடிய நோய் இவற்றின் பயன்பாட்டையும் உன்னதத்தையும் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா காலத்தில் இயற்கையில் கிடைக்கும் மஞ்சள், இஞ்சி, நெல்லிக்காய், மிளகு, உள்ளிட்டவற்றை டீ போல் காய்ச்சி வடிகட்டி குடித்தால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என யோகா மற்றும் இயற்கை மருத்துவம் அறிவுறுத்தி வந்தது.
அது போல் பல மருத்துவமனைகளில் வென்டிலேட்டர் உதவியுடன் இருந்த நோயாளிகளுக்கு இவர்கள் கற்று தந்த மூச்சு பயிற்சி, நாடி சுத்தி பிராணயாமா, டயாபிராக்மடிக் சுவாசம் உள்ளிட்டவை அவர்கள் வென்டிலேட்டரை தூக்கி எறிந்துவிடும் இயற்கையாக சுவாசிக்க வழி வகுத்தன.
இந்த நிலையில் கொரோனா நோயாளிகளால் தங்களுக்கும் தொற்று ஏற்படும் அபாயம் இருந்த போதிலும் செவிலியர்கள், மருத்துவர்கள், சுகாதார பணியாளர்கள், காவல் துறையினர் என கொரோனா போராளிகளாக அறியப்பட்டனர்.
அந்த வகையில் ஒவ்வொரு கொரோனா வார்டுகளுக்கும் சென்று இயற்கை பானங்கள், இயற்கை உணவுகள், யோகா. மூச்சுப் பயிற்சி, மூக்கை சுத்தம் செய்யும் பயிற்சி, தொண்டையை சுத்தம் செய்யும் பயிற்சி ஆகியவற்றை கற்றுக் கொடுத்தது.
சென்னை அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவ மருத்துவமனை குழு. இந்த மருத்துவமனையின் கைநுட்பத் துறையின் தலைவர் டாக்டர் ஒய் தீபாவுக்கு ஆயுஷ் அமைச்சகத்தின் சார்பில் கோவிட் காலத்தில் சிறந்த சேவைக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.
இந்த விருதை புதுவை துணை நிலை ஆளுநர் (பொறுப்பு) டாக்டர் தமிழசை சவுந்திரராஜன், டாக்டர் தீபாவுக்கு நேற்று வழங்கினார்.
இதுகுறித்து டாக்டர் தீபா கூறுகையில் இந்த விருதை அளித்த ஆயுஷ் அமைச்சகத்திற்கு நன்றி. டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன் கைகளால் இந்த விருதை வாங்கியதில் பெருமிதம் கொள்கிறேன்.
அதிலும் தமிழிசை அவர்கள் யோகா மற்றும் இயற்கை மருத்துவம் குறித்து பாராட்டி பேசியதை எண்ணி சிலாகித்து போனேன். இந்த மருத்துவ முறையை வாழ்வியல் முறையாக கடைப்பிடித்தாலே அறுவை சிகிச்சை தேவைப்படாது, கேன்சர் உள்ளிட்ட கொடிய நோய்கள் வராமல் தடுக்கலாம் என மிகவும் அழகாக தமிழிசை தெரிவித்தார்.
மேலும் யோகா மற்றும் இயற்கை மருத்துவத்தின் கோட்பாடுகளையும் அவர் தெரிவித்தார்.
கொரோனா காலத்தில் அதாவது 2020 மார்ச் மாதம் வெளிநாடுகளில் இருந்து வந்து தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு இயற்கை முறையில் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கான ஆலோசனைகளை வழங்கினோம். 250-க்கும் மேற்பட்ட கொரோனா சிகிச்சை மையங்களில் 1000- க்கும் மேற்பட்ட யோகா மற்றும் இயற்கை மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்தோம்.
இயற்கையாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இயற்கை பானங்களை கொடுத்து கொரோனாவிலிருந்து மீள்வதற்கான அக்குபிரஸர், அக்குபஞ்சர், சூரிய குளியல், அரோமா தெரபி, நீராவி, சுடு நீர் மூலம் வாய் கொப்பளித்தல், மூச்சு பயிற்சி உள்ளிட்ட சிகிச்சைகளையும் கொடுத்தோம்.
தமிழகம் முழுக்க கொரோனா வார்டுகளில் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை அளித்துள்ளோம். டாக்டர் தமிழசை அளித்த சிறப்புரையில் அவர் கூறிய கருத்துகள் இளைஞர்களை நிச்சயம் யோகா மற்றும் இயற்கை மருத்துவத்தின் பக்கம் திரும்ப வைக்கும்.
இந்த விருதுகள் எங்கள் மருத்துவ முறைக்கான அங்கீகாரம் என்றார் டாக்டர் தீபா. இவருடன் சேர்த்து அந்த மருத்துவமனையின் டாக்டர் அருந்ததி மற்றும் டாக்டர் ராஜலட்சுமி ஆகியோருக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.