கடலூரை அடுத்து நெல்லை; தொடரும் திமுக., எம்பி.,க்களின் ரவுடித்தனங்கள்: பாஜக., தலைவர் கே.அண்ணாமலை கண்டனம்!
திருநெல்வேலி திமுக., நாடாளுமன்ற உறுப்பினர் பாஜக., நிர்வாகி மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய தொடர்பாக காவல்துறை உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுளளார்,
அவர் இது குறித்து தெரிவித்துள்ளதாவது…
திருநெல்வேலி திமுக எம் பி ஞானதிரவியம் நேற்று இரவு வள்ளியூரை அடுத்த காவல்கிணறு அருகே ஏ வி எம் ஹோட்டல் ஒன்றில் சாப்பிட்டுக் கொண்டிருந்த, பாரதிய ஜனதா கட்சி நிர்வாகி, ஆவரைகுளம் பாஸ்கரனை, அவரே நேரடியாகச் சென்று கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளார்.
அவரை அடித்து நொறுக்கியது மட்டுமின்றி, அங்கிருக்கிற கேமராக்களையும் அடித்து நொறுக்கி சிசிடிவி கேமராவை எடுத்துச் சென்று விட்டார்கள். இதை எல்லோரும் பார்த்துக் கொண்டிருக்கிற நிலையில், அத்துடன் விடாமல் கடைக்கு வெளியே காரில் உட்கார்ந்து கொண்டு பாஸ்கரன் வெளியே வரும்வரை மேலும் தாக்குதல் நடத்த தயாராக இருந்திருக்கிறார்.
பாஸ்கரன் வெளியே சென்றால் உயிருக்கு ஆபத்து என்று கடையில் காத்திருந்து, பின்னர் மருத்துவமனைக்குச் செல்ல பயந்து நேரடியாக தன் வீட்டுக்குச் சென்றிருக்கிறார்.
நெல்லைக்கு செல்லும் வழியில் அவர் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்ற நிலையில் அவர் மருத்துவமனைக்கு உடனடியாக செல்லவில்லை. இன்று மாவட்ட தலைவர் மகாராஜன் மற்றும் நிர்வாகிகள் அவரை அழைத்துக்கொண்டு திருநெல்வேலி ஹை கிரவுண்ட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்திருக்கிறார்கள்.
திமுக., எம்பி களின் அராஜகம் தமிழகத்தில் தலைவிரித்தாடுகிறது. கடலூர் திமுக எம் பி ரமேஷ் என்பவர் மீது இப்போது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இப்போது திருநெல்வேலி எம்பி ஞானதிரவியம் ஒருவர் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் தாக்குதல் தொடுத்திருக்கிறார். இவர் மீதும் கடுமையான வழக்கு பதிவு செய்து காவல்துறை சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களை கேட்டுக்கொள்கிறேன்.
அரசியல் அதிகாரம் என்பது நிலையில்லாதது பிரியாணி கடை முதல் டீக்கடை வரை திமுகவின் அராஜகத்தை ரவுடிசத்தை தமிழக மக்கள் நன்கு அறிந்து வைத்திருக்கிறார்கள். திமுக எதிர்க்கட்சியாக இருந்தாலும் வன்முறை கலாச்சாரத்தில் ஈடுபடுகிறார்கள். ஆளுங்கட்சியாக வந்தபிறகும் கூட அதே பழக்கத்தை தான் தொடர்கிறார்கள்.
ஆட்சி மாறினாலும் காட்சி மாறினாலும்
இவர்களுடைய வன்முறை கலாச்சாரம் மட்டும் மாறவில்லை. இப்போது திமுசு நாடாளுமன்ற உறுப்பினர்களே இதுபோன்ற வன்முறை கலாச்சாரத்தை கையில் எடுப்பது தமிழகத்தின் அமைதிக்கு மிக மிக ஆபத்தை விளைவிக்கும் என்பது உறுதி.
இதுபோன்ற நேரத்தில் அரசியல் பாரபட்சம் பார்க்காமல் காவல்துறை தனது கடமையை சரியாக செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். ஞானதிரவியம் மீது வழக்குப்பதிவு செய்து சட்டப்படி சரியான நடவடிக்கை எடுக்காவிட்டால் பாரதிய ஜனதா கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கையை அறிவிக்க வேண்டியதிருக்கும், என்பதை காவல்துறைக்கு தெரிவித்துக்கொள்கிறேன்… எனறு அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
K.Annamalai @annamalai_k சட்டத்தை கையில் எடுத்து சரமாரி தாக்குதல் & அராஜகம் செய்யும் ஆளும் கட்சி @arivalayam எம்பி கள்! இப்போதுதான் கடலூர் எம்பி மீது கொலைக்குற்றம்… அதற்குள் திருநெல்வேலி திமுக எம்பி ஞானதிரவியம் நேரடியாக பாஜக நிர்வாகி ஆவரைகுளம் பாஸ்கரை கொல்ல முயற்சி! என்ன நடக்கிறது? @CMOTamilnadu
இந்நிலையில் பாஸ்கர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். காயமடைந்த பாஸ்கரை திமுக.,வினரின் அழுத்தம் காரணமாக அவசர அவசரமாக மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்வதில் குறியாக இருப்பதை அறிந்து மருத்துவமனைக்கு நேரில் சென்று நிர்வாக அதிகாரிகளிடம், எக்காரணம் கொண்டும் பா.ஜ.க நிர்வாகி பாஸ்கரை உரிய சிகிச்சை அளிக்காமல் டிஸ்சார்ஜ் செய்யக் கூடாது. மீறி டிஸ்சார்ஜ் செய்தால் நான் இங்கேயே அமர்ந்து தர்ணா செய்வேன் என முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் எச்சரித்தார்.
அவர் எச்சரிக்கையை அடுத்து திமுக., எம்பி ஞானதிரவியம் மற்றும் கும்பலால் தாக்குதலுக்கு உள்ளான பாஸ்கருக்கு சிகிச்சை தொடர்ந்தது. அதே நேரம், தாக்குதலில் ஈடுப்பட்டதாகச் சொல்லி சிலர் மீது மட்டும் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆனால் திமுகவின் எம்.பி. ஞானதிரவியம் மீது FIR பதிவு செய்யும் வரை இந்த இடத்திலிருந்து நகர மாட்டேன் என போலீசாரிடம் திட்டவட்டமாக பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். அவருடன் திருநெல்வேலி மாவட்ட தலைவர் மஹாராஜன் மற்றும் பா.ஜ.கவின் பொறுப்பாளர்கள் உடன் இருந்தனர்.
இதனிடையே பா.ஜ.க நிர்வாகி பாஸ்கரை தாக்கிய திமுக எம்.பி ஞானதிரவியம் மற்றும் அவருடன் தாக்குதலில் ஈடுபட்ட ரவுடிக்கும்பல் மீது எஃப் ஐ ஆர் பதிவு செய்ய வலியுறுத்தி திருநெல்வேலி ஜங்ஷனில் உள்ள பாரதி சிலை அருகே அமர்ந்து அறப்போராட்டத்தை தொடங்கினார் முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன். அவரைக் கைது செய்த போலீஸார், பி1 காவல்நிலையத்தில் வைத்தனர். இதை அடுத்து, நல்ல தீர்ப்பு கிடைக்கும் வரை தொடர்ந்து போராட்டம் நடைபெறும் என பாஜக.,வினர் தெரிவித்தனர்.
பொன்னார் கைதை கண்டித்து மாபெரும் மறியல் போராட்டம் 10:30 மணிக்கு நாகர்கோவில் வடசேரி சந்திப்பில் நடைபெறும் என்று குமரி மாவட்ட பாஜக.,வினர் தெரிவித்தனர்.
இதை அடுத்து, நெல்லை மாவட்டம் காவல்கிணறு பகுதியில் பாஜக., பிரமுகர் ஆவரைகுளம் பாஸ்கரன் என்பவரை தாக்கியதாக நெல்லை திமுக எம்.பி., ஞானதிரவியம் மீது பணகுடி போலீசார் 147, 294 B, 323, 506 Part 2 ஆகிய 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், பொன்.ராதாகிருஷ்ணனை கைது செய்ததைக் கண்டித்து, இன்று பாஜக.,வினர் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.