நாட்டின் மின் உற்பத்தி 70% நிலக்கரியை நம்பியே உள்ள நிலையில், நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக கடந்த சில நாட்களாக மின் நிலையங்களில் உற்பத்தி நிறுத்தம் ஏற்பட்டு உள்ளது.
அதே சமயம் நிலக்கரி விலை உயர்ந்துள்ளதால் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய முடியாமல் உள்ளது.
அக்டோபர் 4ஆம் தேதி கணக்குப்படி இந்தியாவில் நிலக்கரி மூலம் மின்சாரம் தயாரிக்கும் 135 ஆலைகளில் பாதிக்கு மேல் மூன்று நாட்களுக்கு மட்டுமே நிலக்கரி கையிருப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக டெல்லி, ஆந்திரா, பஞ்சாப், ராஜஸ்தான், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் மின் உற்பத்தி பாதிக்கப்படும் என கூறப்படுகிறது. இதனால், பல மாநிலங்கள் இருளில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், பஞ்சாப் மாநிலத்தில் நிலவும் நிலக்கரி பற்றாக்குறை காரணமாக, அக்டோபர் 13ஆம் தேதி வரை தினசரி 3 மணி நேரம் மின் தடை செய்யப்பட உள்ளதாக அம்மாநில மின்சாரத் துறை அறிவித்துள்ளது.