கனடாவில் வீட்டை விற்க மனமில்லாமல் வேறு ஒரு இடத்திற்கு வீட்டை படகில் வைத்து இழுத்துச் சென்ற சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
டேனியல் பென்னே என்பவரும் அவரது காதலரும் கிரேக்கும் தான் இந்த அசாத்திய வேலையை செய்துள்ளனர். கனடாவில் டேனியலும், கிரேக்கும் இரண்டு அடுக்குமாடி வீட்டில் வசித்து வந்தனர். அவர்களுக்கு வேறு ஏரியாவில் சென்று தங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
அதனால் பழைய வீட்டில் இருந்து மாறாமல், வீட்டையே தங்களுடன் கொண்டு செல்ல முடிவு செய்தனர். தரை வழியாக வீட்டை நகர்த்தி செல்வது முடியாத காரியம் என்பதால் தன் வீட்டில் அருகேயுள்ள நதியை அவர்கள் பயன்படுத்த திட்டமிட்டனர்.
வீட்டை முற்றிலும் பெயர்த்து எடுத்து மிதக்கும் டயர்களின் மூலம் தண்ணீரில் நிலைநிறுத்தினர். பின்னர் படகுகள் இழுக்க, 3 படகுகள் தள்ள வீட்டை மெல்ல மெல்ல தண்ணீரில் நகர்த்தி கொண்டு சென்றனர்.
வீட்டை நகர்த்திச் செல்ல 8 மணி நேரம் ஆனது என்றும் வீட்டை நகர்த்திச் செல்லும் போது ஒரு படகு உடைந்துவிட்டது, அது பெரிய பதட்டத்தை உண்டாக்கிவிட்டது என்று தனது அனுபவத்தை டேனியல் பகிர்ந்து கொண்டுள்ளார்.
இது நிஜமா என்பதை இப்போதும் நம்ப முடியவில்லை என்று கூறியுள்ள அவர், ஆனால் நாங்கள் அதை செய்துகாட்டியுள்ளோம், ஒரு வரலாறையே உருவாக்கியுள்ளோம் என்று கூறியுள்ளார். இந்த தம்பதிக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.