
- ஜெயஸ்ரீ எம். சாரி
ஒவ்வொரு மனிதருக்கும் அவரவர் பெயர் பற்றிய பெருமை இருக்கும். பலரில் சிலர் ராசிக்காக பெயரின் எழுத்துகளை தங்களுக்கு ஏற்றவாறு மாற்றுவார்கள்.
தனிமனிதருக்கே இவ்வாறு ‘பெயர் மயக்கம்’ இருப்பதால் கடைகளுக்கு பெயர் வைப்பதிலும் அதிகம் கவனம் செலுத்துவதை நாம் அறிகிறோம்.
பொதுவாக பயணங்களின் போது கடைகளின் பெயரை படித்ததை நினைவு கூறும் தருணமாய் இந்தக் கட்டுரை.
ஒரு குக்கிராமத்தில் இருந்த ஹோட்டல்களின் பெயரோ ‘ஹோட்டல் டெம்ப்டேஷன்’ மற்றும் ‘ஹோட்டல் டிலிஷியஸ்’.
ஒரு நகரத்தில் இருக்கும் பாலர் பள்ளியின் பெயரான ‘க்ளே ஸ்கூல்’ என்பதிலேயே மயங்கி பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அந்தப் பள்ளிக்கே முதலுரிமை கொடுத்து விடுவார்களோ?
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் வாய் நாடி வாயப்பச் செயல் – என்பதை கற்றவராய், நோயாளிகளின் எண்ண நாடியை அறிந்தவராய் இருக்கும் ஒரு மருத்துவரோ அவரின் மருத்துவமனைக்கு வைத்த பெயரோ ‘ரெமிடி ஹாஸ்பிடல்’.
மனிதரின் மனதை அறிந்த மருத்துவரை அடுத்து, ஒரு விலங்கின மருத்துவர் அவரின் மருத்துவமனைக்கு வைத்த பெயரோ ‘ மியாவ்’ மருத்துவமனை.
நடக்க இனிமையாக அருமையாக இருக்க வேண்டுமானால், எங்கள் கடையின் காலனிகளை வாங்கி அணியுங்கள் என விளம்பரப்படுத்திய முதலாளியின் கடையின் பெயர் ‘ஈஸி வாக்.’
நவீன வசதிகளுடன் கூடிய பலசரக்கு கடையை வைத்த முதலாளி, வாடிக்கையாளர்களை உணர்வுபூர்வமாக கவர்ந்திழுக்க தன் கடைக்கு வைத்த பெயரோ ‘அப்பா சூப்பர் மார்க்கெட்.’
சிறிய கடையிலும் நீண்ட வாடிக்கையாளர்களை தன்னகத்தே கொண்ட கடையின் பெயர் ‘ டவரா காஃபி ஷாப்.’
தோட்டத்திலேயே உட்கார்ந்து பழச்சாறை ரசித்து அனுபவிக்க செய்யும் விதமாக இருக்கும் கடையின் பெயர் ‘ ஜூஸ் கார்டன்’.
வாணிபத்தையும் ஒரு ரசனையுடன் செய்ய முடியும் என்பதற்கு உதாரணங்களாக இப்பெயர்கள் உள்ளதை மறுக்க முடியவில்லை.