
பயணியர் மற்றும் சரக்கு ரயில் சேவை பிரிவுகளுக்கு அடுத்தபடியாக, ‘பாரத் கவுரவ்’ என்ற பெயரில் நாட்டின் கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் சுற்றுலாவுக்கு என பிரத்யேகமாக தனிப் பிரிவை துவக்க ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
இதற்கு 190 ரயில்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாகவும், அவற்றை தனியார் மற்றும் ஐ.ஆர்.சி.டி.சி., இயக்க உள்ளதாகவும் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேற்று அறிவித்தார்.
நாடு முழுதும் 67 ஆயிரத்து 956 கி.மீ., தொலைவுக்கு ரயில் சேவை உள்ளது. இதில் பயணியர் போக்குவரத்து பிரிவில் 13 ஆயிரத்து 169 ரயில்களும், சரக்கு போக்குவரத்து பிரிவில் 8,479 ரயில்களும் இயக்கப்படுகின்றன.
நாள் ஒன்றுக்கு 2.3 கோடி மக்கள் ரயில் சேவையை பயன்படுத்துகின்றனர். 30 லட்சம் டன் சரக்கு போக்குவரத்து நடக்கிறது.
இந்நிலையில் ரயில் சேவையை தனியார் மயமாக்கும் முயற்சியில் மத்திய அரசு இறங்கியது. நாடு முழுதும் 109 வழித்தடங்களில் 151 ரயில்களைத் தனியார் மயமாக்க மத்திய அரசு தீர்மானித்தது.
அவற்றில் சென்னையிலிருந்து திருச்சி, மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, கோவை, மும்பை, தில்லி, கோல்கட்டா, ஜெய்ப்பூர், ஐதராபாத், பெங்களூரு உள்ளிட்ட நகரங்களுக்கு இயக்கப்படும் 12 ரயில்கள், கன்னியாகுமரியிலிருந்து எர்ணாகுளத்திற்கு இயக்கப்படும் ரயில் ஆகிய 13 ரயில்களைத் தனியார் மயமாக்குவதற்கான ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டன.
இந்திய அளவில், தில்லி மற்றும் மும்பையில் சில ரயில்களை மட்டும் இயக்க ஐ.ஆர்.சி.டி.சி., எனப்படும், இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் முன்வந்துள்ளது.
இந்நிலையில் தனியார் மயமாக்கல் திட்டத்தில் ஏற்பட்டுள்ள பின்னடைவை சரி செய்ய, மாற்று திட்டம் ஒன்றை மத்திய அரசு நேற்று அறிவித்தது.
இது குறித்து ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
ரயில்வே துறையில் தற்போது செயல்பட்டு வரும் பயணியர் மற்றும் சரக்கு போக்குவரத்து பிரிவுகளை தவிர்த்து நாட்டின் கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக சுற்றுலாவுக்கு என பிரத்யேக பிரிவு துவங்கப்பட உள்ளது. இதற்கு, ‘பாரத் கவுரவ்’ என பெயரிடப்பட்டு உள்ளது.
இதற்காக 190 ரயில்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த ரயில்களை தனியார் மற்றும் ஐ.ஆர்.சி.டி.சி., இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்த ரயில்களை இயக்க விருப்பமுள்ள தனியார் நிறுவனங்களிடம் இருந்து நேற்று முதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பல்வேறு நிறுவனங்களும் ஆர்வம் காட்டி வருகின்றன .
ரயில் பராமரிப்பு மற்றும் நிறுத்துமிடம் ஆகியவற்றில் ரயில்வே நிர்வாகம் உதவி செய்யும். ரயில்களை இயக்குவது மட்டுமே தனியார் நிறுவனங்களின் பணியாக இருக்கும்.
இது வழக்கமான அட்டவணைப்படி இயங்கும் ரயில்கள் அல்ல. இந்த ரயில்களுக்கான கட்டணங்களை தனியார் நிறுவனங்கள் முடிவு செய்து கொள்ளலாம். ஆனால் அசாதாரண விலை நிர்ணயிக்காத வண்ணம் ரயில்வே நிர்வாகம் கண்காணிக்கும்.
தமிழகம், கர்நாடகா, ராஜஸ்தான், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்கள், ‘பாரத் கவுரவ்’ ரயில் சேவையில் ஆர்வம் காட்டி உள்ளன. நம் நாட்டின் பாரம்பரியத்தை மக்கள் புரிந்து கொள்ளவும், பாராட்டவும், முன்னோக்கி எடுத்துச் செல்லவும், ‘தீம்’ எனப்படும், கருத்து அடிப்படையிலான ரயில்கள் இயக்கப்பட வேண்டும் என்ற பிரதமர் மோடியின் ஆலோசனையை பின்பற்றி இந்த திட்டம் உருவாக்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.
தில்லியில் துவங்கி, உ.பி.,யின் ஆக்ரா – லக்னோ – அயோத்தி வழியாக, வாரணாசி வரையிலான 938 கி.மீ., தொலைவுக்கு 2.3 லட்சம் கோடி ரூபாய் செலவில், ‘புல்லட்’ ரயில் சேவை துவங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.’
திட்டப்படி பணிகள் நடைபெற்றால் 8 ஆண்டுகளில் மொத்த பணிகளும் முடிந்து புல்லட் ரயில் சேவை துவங்கப்படும்’ என, அதிகாரிகள் தெரிவித்தனர்.
தில்லி – வாரணாசி இடையிலான ரயில் பயணம் தற்போது 11 – 12 மணி நேரமாக உள்ளது .புல்லட் ரயில் சேவை துவங்கப்பட்டால், மூன்று மணி நேரத்தில் தில்லியில் இருந்து வாரணாசி சென்று அடைய முடியும்.