
மத்திய பிரதேசத்தில் ராமாயண் விரைவு ரயில் பணியாளர்களின் காவி சீருடைக்கு சாதுக்கள் தரப்பில் இருந்து எதிர்ப்பு தெரிவிக்கப் பட்டது. காவி புனிதமானது என்றும், அது சாதுக்களின் அடையாளன் என்றும், எனவே ரயில்வே உடனடியாக அந்த சீருடையை மாற்ற வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்த நிலையில், ராமாயண் எக்பிரஸ் பணியாளர்களின் சீருடை மாற்றப்பட்டுள்ளதாக இந்தியன் ரயில்வே தெரிவித்துள்ளது.
கடந்த 7ஆம் தேதி தில்லியில் இருந்து புறப்பட்ட ராமாயண் விரைவு ரயிலில் உள்ள பணியாளர்களுக்கு காவி வண்ணத்தில் சீருடை வழங்கப்பட்டது. ஹிந்து மதத்தின் மதிப்புமிகு புருஷராகப் போற்றப்படும் ஸ்ரீராமன் பயணித்த இடங்களுக்கு இந்த ராமாயண விரைவு ரயில் செல்கிறது. அயோத்தி, நாசிக், ராமேஸ்வரம் உட்பட ராமாயணத்துடன் தொடர்புள்ள 15 புனித தலங்களுக்கு இந்த ரயில் செல்கிறது. ஹிந்து மதத்தைக் குறிக்கும் வகையில், இந்த ரயிலின் பணியாளர்களுக்கு மட்டும், பாரம்பரிய வடிவமைப்புடன் கூடிய காவி நிற சீருடை அளிக்கப் பட்டது.
ஆனால் இந்த ரயிலில் பணியாளர்களுக்கு காவி சீருடை அளிக்கப் பட்டது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. காவி உடை என்பது சாதுக்கள் அணிவது, சன்யாச ஆச்ரமத்தை கடைபிடிக்கும் சாதுக்கள், முனிவர்கள் அணிவது மரபு என்றும், மற்றவர்கள் காவி உடை அணியக் கூடாது என்றும் கூறி, பலரும் தங்களது வருத்தத்தை இந்தியன் ரயில்வேயிடம் பதிவு செய்தனர்.

குறிப்பாக, ரயில்வே பணியாளருக்கு காவி உடை அளிப்பது, ஹிந்து மதத்தையும், சாதுக்களையும் இழிவுபடுத்தும் செயல் என மபி.,யில் உள்ள உஜ்ஜைனி அகடா பரிஷத்தின் முன்னாள் பொதுச் செயலர் அவதேஷ்புரி கூறியிருந்தார். காவி சீருடையை மாற்றக் கோரி ரயில்வே அமைச்சருக்கு கடிதமும் எழுதினார்.
இந்நிலையில் சாதுக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு அவர்களின் கோரிக்கையை ஏற்று, பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட காவிச் சீருடை உடனே மாற்றப்படுவதாக இந்தியன் ரயில்வே தெரிவித்துள்ளது.