
பாரதியாரின் கண்ணன் பாட்டு – பகுதி – 43
– முனைவர் கு. வை பாலசுப்பிரமணியம் –
கண்ணம்மா என் காதலி – 6
பாயுமொளி நீயெனக்கு
காதலைப் பாடுவதில் கவிஞர்கள் தங்களின் திறமையின் உச்சத்தைத் தொடுவர். “பாயுமொளி நீயெனக்கு” எனத் தொடங்கும் இப்பாடலில் பாரதியார் பலவகையான உருக்காட்சிகளைப் பட்டியலிட்டுக் காட்டுகிறார். தமிழ்த் திரையுலகில் தன்னுடைய பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது இப்பாடல். இப்பாடலின் சில பத்திகள் நேரடியாகவே “ஏழாவது மனிதன்” திரைப்படத்தில் இடம் பெறுகிறது. ‘நீ இதுவானால், நான் அது ஆவேன்’ எனப் பாடும் முறை திரைப் படப் பாடல்களில் இன்றும் பின்பற்றப் படுகிறது. “உன் சமையல் அறையில் நான் உப்பா சக்கரையா?” என்ற பாடலைக் கேட்கும் போதெல்லாம் எனக்கு பாரதியாரின் இந்தப் பாடல்தான் நினைவுக்கு வரும். இனி, பாடலைக் காணலாம்.
பாயு மொளி நீ யெனக்குப் பார்க்கும் விழி நானுனக்கு;
தோயும் மது நீ யெனக்குத் தும்பியடி நானுனக்கு;
வாயுரைக்க வருகுதில்லை, வாழிநின்றன் மேன்மை யெல்லாம்;
தூயசுடர் வானொளியே! சூறையமுதே! கண்ணம்மா! 1
வீணையடி நீ யெனக்கு, மேவும் விரல் நானுனக்கு;
பூணும் வடம் நீ யெனக்கு, புது வயிரம் நானுனக்கு;
காணுமிடந்தோறு நின்றன் கண்ணி னொளி வீசுதடி!
மாணுடைய பேரரசே! வாழ்வு நிலையே! கண்ணம்மா! 2
வான மழை நீ யெனக்கு, வண்ணமயில் நானுனக்கு;
பான மடி நீ யெனக்குப் பாண்டமடி நானுனக்கு;
ஞான வொளி வீசுதடி, நங்கை நின்றன் சோதிமுகம்;
ஊனமறு நல்லழகே! ஊறு சுவையே கண்ணம்மா! 3
வெண்ணிலவு நீ யெனக்கு, மேவு கடல் நானுனக்கு;
பண்ணுசுதி நீ யெனக்குப் பாட்டினிமை நானுனக்கு;
எண்ணியெண்ணிப் பார்த்திடிலோர் எண்ணமிலை நின்சுவைக்கே;
கண்ணின் மணி போன்றவளே! கட்டியமுதே! கண்ணம்மா! 4
வீசு கமழ் நீ யெனக்கு, விரியுமலர் நானுனக்கு;
பேசுபொருள் நீ யெனக்குப் பேணு மொழி நானுனக்கு;
நேசமுள்ள வான்சுடரே! நின்னழகை யேதுரைப்பேன்?
ஆசை மதுவே, கனியே, அள்ளு சுவையே கண்ணம்மா! 5
காதலடி நீ யெனக்குக் காந்தமடி நானுனக்கு;
வேதமடி நீ யெனக்கு, வித்தையடி நானுனக்கு;
போதமுற்ற போதியிலே பொங்கிவருந் தீஞ்சுவையே!
நாதவடி வானவளே! நல்ல உயிரே கண்ணம்மா! 6
நல்லவுயிர் நீ யெனக்கு, நாடியடி நானுனக்கு;
செல்வமடி நீ யெனக்கு, சேம நிதி நானுனக்கு;
எல்லையற்ற பேரழகே! எங்கும் நிறை பொற்சுடரே!
முல்லை நிகர் புன்னகையாய்! மோதுமின்பமே! கண்ணம்மா! 7
தாரையடி நீ யெனக்குத் தண்மதியம் நானுனக்கு;
வீரமடி நீ யெனக்கு, வெற்றியடி நானுனக்கு;
தாரணியில் வானுலகில் சார்ந்திருக்கும் இன்பமெல்லாம்
ஓருருவமாய்ச் சமைத்தாய்! உள்ளமுதே! கண்ணம்மா! 8
முதல் வரியிலேயே பாரதியார் நமக்கு ‘ஒளியியல்’ பற்றி ஒரு பாடம் எடுக்கிறார். பாயு மொளி நீ யெனக்குப் பார்க்கும் விழி நானுனக்கு; என்ற வரியில் ஒரு அறிவியல் செய்தி இருக்கிறது. நாம் காண்பதை ரசிப்பதற்கு நமக்கு அளிக்கப்பட்டிருக்கும் அதிசய உறுப்பு கண் ஆகும். நமது கண் ஒரு நிழற்படக் கருவியைப் போன்று அதாவது ஆங்கிலத்தில் காமிராவைப் போன்று இயங்குகிறது. ஒளியின் உதவியுடன் ஒரு நிழற்படக் கருவி பொருட்களைப் படம் பிடிப்பதைப் போல, நமது கண்ணும், ஒளியின் உதவியுடன் பொருட்களின் உருவத்தை கணப்பொழுதில் படம் பிடித்து, மனதில் பதிவு செய்து, பின்பு அதை மூளையில் விருத்திச் செய்கிறது. ஒளி இல்லையென்றால் நம்மால் காமிரா இருந்தாலும் புகைப்படம் எடுக்க முடியாது; கண்ணால் பார்க்க முடியாது. அகச்சிவப்பு கதிர்கள் கொண்டு இரவிலும் நாம் பார்க்கலாம். ஆனால் பொருட்கள் அந்த அளவிற்குத் தெளிவாக இருக்காது.

ஒரு வைரஸை நாம் நம் கண்ணால் பார்க்க முடியாது. ஏனெனில் அது அளவில் மிகச் சிறியது. ஒளியின் அலை நீளம் 700 நேனோ மீட்டரிலிருந்து 400 நேனோமீட்டர் வரை. ஒரு நுண்ணோக்கியின் உதவியுடன் 400 நேனோமீட்டர் வரை அளவுள்ள பொருட்களைக் காணலாம். இந்த 400 நேனோமீட்டருக்குக் குறைவான அளவுள்ள பொருட்களின் மீது ஒளி விழும்போது நாம் அவற்றப் பார்க்க முடியாது. எனவே இத்தகைய வைரஸ் போன்ற பொருட்களை பார்க்க எக்ஸ் கதிர்கள் என்ற ஒளி தேவைப்படுகிறது. எலக்ட்ரான் நுண்ணோக்கி என்ற கருவி தேவைப்படுகிறது.
பாரதியார் இந்த அறிவியல் செய்தியை மிக அழகாக இப்பாடலின் முதல் வரியான “பாயு மொளி நீ யெனக்குப் பார்க்கும் விழி நானுனக்கு” என்ற வரியில் கூறுகிறார். அதுபோல தும்பிக்கு தேன் எடுப்பதுதான் வேலை. அதனால் அடுத்த வரியில் தோயும் மது நீ யெனக்குத் தும்பியடி நானுனக்கு என்று கூறுகிறார். இதற்கு மேல் என்னால் எதுவும் சொல்ல முடியவில்லை எனவே நாயகன், வாயுரைக்க வருகுதில்லை, வாழிநின்றன் மேன்மை யெல்லாம்; தூயசுடர் வானொளியே! சூறையமுதே! கண்ணம்மா என்று பாடுகிறார்.
சூறையமுதே என்ற சொல்லின் பயன்பாடு மிக அற்புதமானது. சூறைத்தேங்காய் கேள்விப்பட்டிருக்கிறோம்; சூறையமுது கேள்விப்பட்டிருக்கிறோமா? சூறையமுதே என்றால் இரைந்திருக்கும் அமுது. இந்த அமுதை யார் வேண்டுமானாலும் வாரி செல்லலாம். கண்ணன் தரும் அமுது அப்படிப்பட்டது என்கிறார் பாரதியார். பாரதியாரின் கவி நயமும் அப்படித்தான். யாரும் சொந்தம் கொண்டாடலாம்.
பிரிக்க முடியாதவைகளையே உதாரணமாகக் கொண்டு, அவைபோலவே தானும் கண்ணனும் இருப்பதாகப் பாடுகிறார். இப்பாட்டு சிருங்கார ரசம் பொருந்தியதெனினும் ஒரு விள்ளலும் இதில் விரசமில்லை. இப்படியும் ஒருவரால் பாடமுடியுமா என்று இப்பாடல் இருக்கிறது. பாரதியின் வரிகள் மனதை குடைந்து அதனால் தாவ முடியாத உயரத்தை காட்டுகிறது.

ஒளி-விழி, தேன்-தும்பி, வீணை-விரல், வடம்-வயிரம், மழை-மயில், பானம்-பாண்டம், நிலவு-கடல், மெட்டு-இனிமை, மணம்-மலர், பொருள்-மொழி, காதல்-காந்தம், வேதம்-வித்தை, உயிர்-நாடி, செல்வம்-நலநிதி, நக்ஷத்ரம்-அதன் சந்திரன், வீரம்-வெற்றி என்று தான் கண்ணம்மாவுடன் பிரிக்க முடியாதபடிக்கு இருப்பதாக நாயகன் சொல்கிறான்.
போதமுற்ற பொழுதினிலே பொங்கி வரும் தீஞ்சுவையே, நல்ல உயிரே, இன்பமெலாம் ஓருருவாய் சுமந்தாய், ஆசை மதுவே கனியே அள்ளு சுவையே என்றெல்லாம் சொன்னதினால் அன்புதான் கண்ணன் அல்லது கண்ணம்மா என்று நீக்கமற மகா கவி பாரதியார் நிரூபிக்கிறார். எண்ணியெண்ணி பார்க்கையிலே எண்ணமிலை நின்சுவைக்கே என்கிறார். அது அப்படியே இப்பாட்டிற்கும் பொருந்தும். உள்ளமுதே கண்ணம்மா என்று பாட்டை முடிக்கிறார்.