திருப்புகழ்க் கதைகள் 191
– முனைவர் கு. வை. பாலசுப்பிரமணியன் –
குழல் அடவி – பழநி 4
சேதுபந்தனம் (தொடர்ச்சி)
அணில்கள் சேது பந்தனம் பணியில் தங்களையும் ஈடுபடுத்திக் கொள்வதைப் பார்த்த இராமபிரான், “தம்பி, நானும் அதைத்தான் கவனித்துக் கொண்டிருக்கிறேன். இந்த அணில்கள், நம் மீது கொண்டிருக்கும் அன்பைப் பார்த்தாயா? பாலம் அமைப்பதற்கு தன்னால் இயன்ற உதவியைச் செய்கின்றன” என்று கூறினார்.
பிறகு கனிவோடு அந்த அணில்களை உள்ளங்கையில் தூக்கிப் பரிவோடு அதன் முதுகில் தனது மூன்று விரல்களால் வருடிக் கொடுத்தார் இராமபிரான். ஶ்ரீராமபிரானின் கை விரல்கள்பட்ட தடம் அப்படியே அணில்களின் முதுகில் பதிந்தன. இராமபிரானால் அன்போடு ஆசீர்வதிக்கப்பட்ட அவ்வகை அணில்கள் இந்தியா, இலங்கை போன்ற பகுதிகளில் இன்றளவும் அதிகம் காணப்படுகின்றன. ஆனால் அணில்கள், இராமர் பாலம் அமைப்பதற்கு உதவிய கதையானது, வால்மீகி இராமாயணத்தில் கிடையாது; இது மிகவும் பக்தி மயமாக எழுதப்பட்ட துளசிதாசரின் ராமாயணத்தில் உள்ள தகவல்.
எல்லாம் வல்ல பரம்பொருளான இராமபிரான் கடலின் மீது பாலம் அமைக்காமல், தனது சர்வ வல்லமையால் இலங்கைக்கு சென்றிருக்க முடியாதா? என நாம் எண்ணலாம். தனுர் வேதத்தில் (வில்வித்தை) கரைகண்ட ஸ்ரீராமபிரானால் கடலின் மீது அம்புகளைக் கொண்டே பாலம் அமைத்து, அதன் மீது சென்றிருக்கலாமே? இந்த சந்தேகத்தை மகாபாரதத்தில் அர்ச்சுனன் அனுமாரிடம் கேட்பதாக ஒரு நிகழ்ச்சி வரும். கடலின் மீது பாலம் அமைத்து இராமபிரான் இலங்கைக்குச் சென்றதன் காரணம், சீதாதேவியை மீட்கும் புனிதப் பணியில் வானரங்கள், கரடிகள், அணில்கள் என பலதரப்பட்ட உயிர்களின் பங்களிப்பும் இருக்க வேண்டுமென்பதே என்பதால்தான்.
இராமாயணம் என்பது உண்மைச் சம்பவம் கதையல்ல என்பதனைக் காட்ட இந்தப் பாலம் இன்றும் சாட்சியாக இருக்கிறது. இவ்வாறு ஐந்து நாட்கள் தொடர்ந்து கட்டப்பட்ட பாலமானது, நூறு யோஜனை நீளமும் முப்பது யோஜனை அகலமும் இருந்தது. (யோஜனை_அக்கால அளவீடு; தற்காலத்திய அளவின்படி 30 மைல் நீளமும், 3 மைல் அகலமும் கொண்டது) இலங்கையில் இருந்த சுவேல மலை வரை அந்தப் பாலமானது சமுத்திரத்தின் மீது அமைக்கப்பட்டது.
முதலில் பெரிய மரத்துண்டுகளைக் கடலில் போட்டு, அதன் மீது பெரிய பாறைகளைப் போட்டு, அதன் மீது சிறிய பாறைகளை அடுக்கி, அதன் மீது சிறு கற்களைக் கொட்டி, அதன் மீது மணலைக் கொட்டி பாலத்தை அமைத்தனர் வானரங்கள். சமுத்திரத்திற்கு மேலே மூன்றடி உயரத்தின் மேலே பாலமானது அமைக்கப்பட்டது. இதுவே “சேதுபந்தனம்” என்ற இராமர் பாலம் அமைத்த வரலாறு. இராமர், கடலைக் கடப்பதற்கு முதலில் சமுத்திர ராஜனின் அனுமதியை வேண்டி மூன்று நாட்கள், தர்ப்பைப் புல்லின் மீது படுத்திருந்து உணவு உண்ணாமலும், நீர் அருந்தாமலும் தவம் செய்தார்.
சமுத்திரராஜன் வரவில்லை என்பதால், கடும் சினத்தோடு கடலை வற்றச் செய்து விடுவேன்; என்று அம்பெய்யப் போனபோதே, பயந்து வந்த சமுத்திரராஜனின் அறிவுரையின்படி, மரங்களையும், பாறைகளையும் கொண்டு சமுத்திரத்தின் மீது பாலம் அமைக்கச் செய்தார் இராமர்.
இதுவே இராமர் பாலம் எழுந்த வரலாறு. இராமர் பாலம்கட்ட ஆரம்பிப்பதற்கு முன்னர் விநாயகரையும், சிவபெருமானையும் வழிபட்டதாக வால்மீகிராமாயணம் கூறுகிறது. எத்தனையோ இராமாயணங்கள் இருந்தாலும் வால்மீகி இராமாயணம் மட்டுமே இதிஹாசம். இதிஹாசம் என்றால் “இது இப்படி நடந்தது” என்று பொருள்.
தான் கண்ணால் கண்டவற்றை அப்படியே எழுதி வைத்த புனிதமான வரலாறே இராமாயணம். வால்மீகி முனிவர் வாழ்ந்திருந்த காலத்தில் நடந்த புனிதமான வரலாற்றை நாரதர் கூற, அவற்றை அப்படியே வால்மீகி முனிவர் எழுதிவைத்தார். எனவே வால்மீகிராமாயணம் மட்டுமே நடந்த வரலாறு.