
ராமாயண எக்ஸ்பிரஸ் ரயில் ஊழியர்களின் காவி நிற சீருடைக்கு கடும் எதிர்ப்பு எழுந்ததை அடுத்து சீருடையின் நிறம் மாற்றப்படுவதாக ஐ.ஆர்.சி.டி.சி., தெரிவித்துள்ளது.
கடவுள் ராமரின் வாழ்க்கையுடன் தொடர்புடைய 15 இடங்களுக்கு புனித பயணம் அழைத்து செல்லும் ராமாயண எக்ஸ்பிரஸ் ரயில் சேவை கடந்த 7ம் தேதியன்று துவங்கப்பட்டது.
தில்லி சப்தர்ஜங் ரயில் நிலையத்தில் துவங்கி அயோத்தியா, பிரயாக்ராஜ், நந்திகிராம், ஜனக்புர், நாசிக், ஹம்பி, ராமேஸ்வரம் உட்பட 15 கோவில்களுக்கு 17 நாட்களில், 7,500 கி.மீ., தொலைவுக்கு இந்த புனிதப் பயணம் மேற்கொள்ளப்படுகிறது.
இந்த ரயிலிலேயே உயர்தர உணவகம், நுாலகம், நவீன குளியலறை உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. பக்தர்கள் பயணிக்கும் ரயில் என்பதால், உணவகங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு தலைப்பாகையுடன் கூடிய காவி சீருடை வழங்கப்பட்டது. அவர்கள் கழுத்தில் ருத்ராட்ச மாலைகள் அணிந்து துறவிகளைப் போல தோற்றம் அளித்தனர்.

இதற்கு ஹிந்து மத தலைவர்கள் மத்தியில் கடும் கண்டனம் எழுந்தது.”ரயில் உணவக ஊழியர்களுக்கு காவி சீருடை வழங்கப்பட்டிருப்பது ஹிந்து மதத்தையும், துறவிகளையும் அவமானப்படுத்தும் செயல்.”காவி நிற உடை மாற்றப்படவில்லை எனில், ராமாயண எக்ஸ்பிரஸ் ரயிலை தடுத்து, போராட்டம் நடத்துவோம்,” என, மத்திய பிரதேசத்தின் உஜ்ஜயின் அகாரா பரிஷத்தின் முன்னாள் பொது செயலர் அவ்தேஷ்புரி கண்டனம் தெரிவித்தார்.
இதையடுத்து, ‘காவி சீருடையை மாற்றி, உணவக ஊழியர்கள் அணியும் வழக்கமான சீருடை வழங்கப்படும்’ என, ஐ.ஆர்.சி.டி.சி., எனப்படும் இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் நேற்று அறிவித்தது.