
உத்தர பிரதேசத்தில் மாடுகளுக்காக ஆம்புலன்ஸ் சேவை மற்றும் உதவிகளுக்கான அழைப்பு மையங்களின் சேவை துவக்கப்பட உள்ளது.
பாஜக ஆளும் உ.பி.யின் முதல்வர் ஆதித்யநாத் ஆட்சியில் மாடுகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இதற்கு இந்துக்கள் இடையே பசுமாடுகள் புனிதமாகக் கருதப்படுவது காரணம்.
இதனால், மனிதர்களுக்கானதை போல், மாடுகளுக்கும் சிகிச்சை வசதிகள் அளிக்க ஆம்புலன்ஸ் மற்றும் அழைப்பு மையங்கள் சேவை உ.பி.யில் டிசம்பர் முதல் துவக்கப்படுகிறது.
இது குறித்து மதுராவில் செய்தியாளர்களிடம் தனது அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர் நாராயண் சவுத்ரி, ”24 மணி நேரங்களுக்கான இந்த ஆம்புலன்ஸ் சேவைக்கானஎண் 115 மற்றும் உதவிகளுக்கான அழைப்பு மையங்கள் எண் 112ஆகும்.
மாநில அளவில் ஒருங்கிணைந்த அழைப்பு மையம் தலைநகர் லக்னோவில் அமைக்கப்படும். ஒவ்வொரு ஆம்புலன்ஸிலும் ஒரு கால்நடை மருத்துவரும், இரண்டு உதவியாளர்களும் இருப்பார்கள். அழைப்பு வந்த சுமார் 20 நிமிடங்களுக்குள் சேவை கிடைக்கும்” எனத் தெரிவித்தார்.
இதுபோன்ற கால்நடைகளுக்கான சேவை வேறு எந்த மாநிலங்களிலும் இல்லை எனக் கருதப்படுகிறது. இத்துடன் இலவசமாக உயரிய வகைப் பசு மாடுகளுக்கான இன உற்பத்தி நிலையமும், அனைத்து பசுக்களையும் அதிகபால் தருவதாக மாற்றும் தொழில்நுட்பமும் துவக்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
இவை துவக்கக் கட்டமாக சோதனை அடிப்படையில் மதுரா உள்ளிட்ட உத்தர பிரதேச மாநிலத்தின் எட்டு மாவட் டங்களில் துவக்கப்படுவதாகவும் அமைச்சர் நாராயண் சவுத்ரி தெரிவித்துள்ளார்