
நரிக்குடி சொக்கம்பட்டியைச் சேர்ந்தவர் கோமதி (53). இவர் கடந்த ஏப்ரல் மாதம் 8ம் தேதி கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.
சில நாட்களில் உடல்நிலை சரியில்லாமல் மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, கடந்த மே மாதம் 18ம் தேதி இறந்தார். மதுரை மாநகராட்சியில் ஜூன் மாதம் 1ம் தேதி கோமதிக்கு இறப்பு சான்றிதழ் பெறப்பட்டது.
இந்நிலையில், கோமதி அக்டோபர் 23ம் தேதி மல்லாங்கிணர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 2வது தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டதாக அவருடைய மகன் ராஜேந்திரன் செல்போனுக்கு குறுஞ்செய்தி வந்தது. அதற்கான சான்றிதழை ஆன்லைனில் பதிவிறக்கமும் செய்ய, இச்செய்தி அப்பகுதியில் பரவியது.

இதுகுறித்து ராஜேந்திரன் கூறியதாவது: “இறந்தவருக்கு தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கான குறுஞ்செய்தி வந்ததையடுத்து அதிர்ச்சி அடைந்தேன். எங்கேயோ தவறு நடக்கிறது. அதை தடுத்து நிறுத்த வேண்டும் என்பதற்காக தகவல் தெரிவித்தேன்” என்றார்.
மல்லாங்கிணர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார ஆய்வாளர் சீதாராமன் கூறுகையில், “தடுப்பூசி போடும் போது கவனக் குறைவால் செல்போன் எண்ணை தவறாக பதிவேற்றம் செய்திருப்பர். இனி, இதுபோன்ற தவறு நடக்காமல் பார்த்து கொள்ளப்படும்” என்றார்.