
தென்காசி அருகே இறந்த ஒருவருக்கு கொரோனா இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டதாக குறுஞ்செய்தி வந்துள்ளது பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம், புளியங்குடி அடுத்த டிஎன் புதுக்குடி பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன். 62 வயதாகும் இவர், கூலித் தொழிலாளியாக இருந்து வந்துள்ளார். இவர் கடந்த ஆகஸ்ட் மாதம் 13ஆம் தேதி முதலாவது கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டார்.
இதற்கிடையே, உடல்நிலை சரியாமல் இருந்த மாரியப்பன் கடந்த அக்டோபர் மாதம் 8ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த நிலையில், நேற்று மாரியப்பன் மகன் மாரிசெல்வதற்கு, மாரியப்பன் இரண்டாவது தவணை கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதாக குறுந்தகவல் ஒன்று வந்துள்ளது.
இதனை பார்த்த மாரிச்செல்வம் மற்றும் உறவினர்கள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர்.
இறந்த ஒருவருக்கு கொரோனா தடுப்பூசி இரண்டாவது தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டு உள்ளதாக குறுஞ்செய்தி வந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த செய்தி தென்காசி முழுக்க தீவிரமாக பரவவே, பலரும் மேலும் இது போன்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர்.