கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள செம்பாகுறிச்சி வனப்பகுதியில் அதிகளவில் குரங்குகள் உள்ளன.
வனப்பகுதி அருகே நெடுஞ்சாலை இருப்பதால், குரங்குகள் அவ்வப்போது சாலையைக் கடந்து அங்கும் இங்கும் செல்வதை வாடிக்கையாக வைத்திருகின்றன.
அதனால், சில சமயங்களில் எதிர்பாராத விதமாக விபத்திலும் சிக்கிக் கொள்கின்றன. இந்த நிகழ்வு அப்பகுதியில் வாடிக்கையாக நடக்கும் ஒன்றாகவும் உள்ளது.
இந்நிலையில், அவ்வாறு ஒரு குரங்கு சாலையை கடக்க முயற்சிக்கும்போது, வாகனம் ஒன்றில் அடிபட்டு படுகாயங்களுடன் கிடந்துள்ளது. இதனைப் பார்த்த அந்த வழியாக வந்த வாகன ஓட்டி ஒருவர் அடிப்பட்ட குரங்கை அருகில் உள்ள அடிபம்புக்கு எடுத்துச் சென்று தண்ணீர் கொடுத்து முதலுதவி செய்தார். இதனை அவ்வழியாக சென்ற சக வாகன ஓட்டிகள் வீடியோ பதிவு செய்து இணையத்தில் பதிவிட்டனர்.
அடிப்பட்ட குரங்குக்கு மனிதாபிமான அடிப்படையில் ஆபத்பாந்தவனாக மாறிய அந்த நபரை சமூகவலைதள வாசிகள் மனதார பாராட்டியுள்ளனர். அதேநேரத்தில், அப்பகுதியில் அடிக்கடி குரங்குகள் விபத்தில் சிக்குவதை தடுக்க வனத்துறை ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
குரங்களுகள் விபத்தில் சிக்காமல் இருக்க வேண்டுமானால் காப்பகம் அமைத்தால் மட்டுமே உரிய தீர்வு கிடைக்கும் என்றும் கூறியுள்ளனர்.