21/10/2019 11:08 PM
அடடே... அப்படியா? அன்று ஆண்டாளைச் சொன்னதால்... நேற்று மீனாட்சியின் கோபம்! அடுத்து..?

அன்று ஆண்டாளைச் சொன்னதால்… நேற்று மீனாட்சியின் கோபம்! அடுத்து..?

அவர் கோடிட்டுக் காட்டிய வகையில், என்னால் புரிந்து கொள்ளப் பட்டது, ஆட்சி செய்பவர்களுக்கு ஏதோ அபவாதம் ஏற்படப் போகிறது. அவர் சொன்ன காமாட்சியும் கருமாரியும் என்பது, மாங்காடும் திருவேற்காடாகவும்

-

- Advertisment -
- Advertisement -

வறண்டு போய்க் கிடக்கும் அருவிக் கரை. குற்றாலத்தில் எத்தனை எத்தனை ரசிக்கும் விஷயங்கள் இருக்கும்! கூட்டம்? கடைகள்..! எதுவுமின்றி வெறிச்சோடிக் கிடக்கிறது. ஜனவரி பிப்ரவரியில்கூட இப்படி வரி வரியாய் காய்ந்து கிடக்கிறதே என எண்ணி நடைபோட்டேன்.

குற்றால அருவிக் கரை சித்திரை சபை தெரு பக்கம் நான் சாலையில் இறங்கி பராக்குப் பார்த்தபடியே காலார நடந்தேன்.

அப்போது, தேரடி அருகே சிவப்பு நிற வேட்டி கட்டி, தலையில் முண்டாசு சுற்றி, சக்தி சக்தி என்று ஏதோ பெயரை உச்சரித்த படி ஒருவர் என்னைக் கடந்து சென்றார். சென்றவர், திடீரென நின்று திரும்பிப் பார்த்தார். நானும் கவனித்தேன். வழக்கம் போல், என் முகத்தைக் கண்டுவிட்டு அய்யா டீ வாங்கிக் கொடுங்க, பசிக்குது, சாப்பாடு வாங்கிக் கொடுங்க என்று கேட்கும் சிலரைப் போல் இவரையும் நான் நினைத்துக் கொண்டேன். ஆனால் நெற்றியில் பூசிய சந்தனப் பூச்சும் ஒடுங்கிய கண்களும் ஒரு நொடி என் மண்டையில் என்னை குட்டிக் கொள்ள வைத்தது.

தம்பி எங்கிட்டு போறீய?-

தென்காசிக்குதான்! ஏதோ இன்னிக்கு ஒரு மீட்டிங்காம்! ஆலய பாதுகாப்பு தொடர்பா கூட்டம் போட்டிருக்காங்க! சரி… என்ன பேசுதாவன்னு கேட்டுட்டு வரலாம்னு போய்ட்டிருக்கேன்! – என்றேன்.

கேட்டதும் சிரித்தார்! தம்பி நாட்டுல இன்னும் நெறய்ய நடக்கப் போவுது! ஆண்டாளச் சொல்லி அடங்காம போனதுல மீனாட்சி கோபமாயிட்டா. மீனாட்சி சொன்னத கேக்க மாட்டாங்க… காமாட்சியும் கருமாரியும் கண்ணு தொறப்பாங்க. அப்பவும் புரியாது. வடிவம்மா தாண்டவமாடுவா… சொல்லிவிட்டு நடந்து கொண்டே இருந்தார்.

எனக்கோ அண்மைக் கால சம்பவங்களைப் பார்த்து வந்ததால் அவர் என்ன சொல்ல வருகிறார் என்று அறிய ஆவல். பஸ் ஸ்டாப்பை மறந்து அவர் பின்னேயே சென்றேன்.

என்ன சொல்லுதீய? கொஞ்சம் வெளங்கும்படியா சொல்லுங்களேன்… என்றேன்!

தம்பி உனக்கு தெரியாததா? எல்லாத்தையும் நீயும் பாத்துக்கிட்டேதான வாறே! என்றார்.

இருந்தாலும் அய்யா… கொஞ்சம் தெளிவா சொல்லுங்க… என்றேன்!

நாட்டுல பெரிய குழப்பம் வரப் போவுது. மந்தன் வேலைய காட்ட ஆரமிச்சிட்டான். பாபநாசம் மலைல அகத்தியர் லோபாமுத்ராவை சிதைச்சிட்டாங்க. அதுக்கு உரிய தண்டனையை எல்லாரும் அனுபவிக்கணும். ஆண்டாள பூமியின் குழந்தைன்னு சொல்லுவோம். பூமித்தாயே பிறப்பெடுத்ததா சொல்வாஹ . அந்த பூமித் தாயை அவமரியாதை செய்து ஒருத்தன் மட்டுமில்ல, வேடிக்கை பார்த்த பல பேரு மந்தனின் கோவத்துக்கு ஆளாகிட்டாங்க. அவன் நியாயவான். தண்டனை கொடுக்குறவன். பூமித் தாயை மோசமா பேசினதுனால அப்படி பேசினவங்களும் உடந்தையா இருந்தவங்களும் இனி பூமியை இழப்பாங்க. வீடு மனை எல்லாம் பிரச்னைல சிக்கும். ஆட்சி செய்யிறவங்க அதை உடனே சரி செய்து பரிகாரம் செய்திருக்கணும். அதை செய்யாததால அவங்களுக்கு தன்னோட கோபத்தை தீ உருவத்துல கோபாக்னியா மீனாட்சி வெளிப்படுத்திட்டா. அதையும் அலட்சியமா எடுத்துக்கிட்டு போவாங்க… அப்புறம் பாருங்க… ஆளும் இடத்துலயே அனல் கக்கும்!… என்று சொல்லி, என் முகத்தையோ, நான் பின் தொடர்ந்து கேட்டு வருவதையோ விரும்பாதது போல் தெரிந்தது. அப்படியே விறுவிறுவென நடந்தார். அவர் வேகத்துக்கு என்னால் ஈடு கொடுக்க இயலவில்லை. கணப் பொழுதில் திருப்பத்தில் திரும்பிவிட்டார். நானும் தொடர்ந்து சென்று பார்த்த போது அவரைக் காணவில்லை.

எனக்கு ஆச்சரியமாகவும் அதே நேரம் பிரமிப்பாகவும் இருந்தது. நான் ஏதோ சித்தர் தரிசனம் என்று தொடரெல்லாம் எழுதியிருக்கிறேன். ஆனால் அப்படி சித்தர் எவரையும் சந்தித்ததோ, அல்லது உணர்வு பூர்வமாக அறிந்ததோ இல்லை. ஆனால் வழக்கமான ஏதோ ஓர் உதவி கேட்பாளரைப் போல் நினைத்து ஒதுங்கிய என்னை அழைத்து ஏதோ சொல்லி என் மூளையைக் கிண்டிவிட்டு நகர்ந்து விட்டார் அவர். அவரை இதற்கு முன் இங்கே பார்த்த நினைவும் இல்லை. என் நண்பர்களிடம் விசாரித்துக் கொண்டிருக்கிறேன். அவர் யார்? பார்த்திருக்கிறீர்களா என்று!

ஆனால் அவர் கோடிட்டுக் காட்டிய வகையில், என்னால் புரிந்து கொள்ளப் பட்டது, ஆட்சி செய்பவர்களுக்கு ஏதோ அபவாதம் ஏற்படப் போகிறது. அவர் சொன்ன காமாட்சியும் கருமாரியும் என்பது, மாங்காடும் திருவேற்காடாகவும் இருக்கலாம். வடிவம்மா என்று ஏதோ சொன்னார். அது திருவொற்றியூர் வடிவுடையம்மனாக இருக்கலாம். இந்த நபரும் குற்றாலம் பராசக்தி பீடத்தை வலம் வந்துவெளியில் வந்தாரோ என்னவோ?!

தெரியவில்லை! பெண் தெய்வங்களுக்கு ஏற்படும் அபவாதத்தால், பெண்களாலேயே சிலருக்கு அழிவு ஏற்படப் போகிறதோ என என் உள் மனம் சொல்கிறது!

Sponsors

- Advertisement -
- Donate via PayTM -
Tamil Dhinasari News..! We are in the path of protecting our Hindu dharma! Please consider supporting us to run this Tamil web portal continuously.

6 கருத்துக்கள்

-Advertisement-

சினிமா:

-Advertisement-
-Advertisement-
- Advertisement -

You might also likeRELATED
Recommended to you

%d bloggers like this: