- ‘நாடகத் தென்றல்’ கலைமாமணி அப்பா ரமேஷ்
இந்நாள், நாட்டுப் பற்று மிக்க ஒவ்வொரு இந்திய குடிமகனும், நன்றியுடன் நினைகூர வேண்டிய நாள்; சுதந்திர காற்றை சுவாசித்து ” நாம் அனைவரும் ஒருவர்” என அமைதியாக வாழ வித்திட்ட பெருந்தகை, தேசிய சிந்தனை மிக்க தீர்க்கதரிசிகளில் ஒருவர், சமூக ஆவலர், சுதந்திர போராட்ட மாவீரர் என பன்முகம் கொண்ட ஒப்பற்ற மகா கவி பாரதி மறைந்த நாள்!
ஆம், பாட்டுக்கொரு புலவன் பாரதி மறைந்து இன்றுடன் நூற்று ஓர் ஆண்டுகள் கடந்துவிட்டன! அவரின் பூத உடல் மறைந்திருக்கலாம், ஆனால் அவர்தம் புகழ் உடம்பு என்றும் இவ்வையகத்தில் நிலைத்து நிற்கும்! தனது பதினோராவது வயதிலேயே ” பாரதி” எனும் பட்டப் பெயர் பெற்ற பிறவிப் புலவன் பாரதி !
“யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்”
என்றும், “தேமதுரத் தமிழ் ஓசை உலகமெலாம் பரவும் வகைசெய்தல் வேண்டும்”
எனவும் பாடிய பாரதி மொழியால் தமிழ்ப் பற்றும், இனத்தால் தமிழர் பற்றும், நாட்டால் இந்தியப் பற்றும் ஒருங்கே கொண்ட ஒரு தேசியப் புலவன்!
‘விடுதலை, விடுதலை ‘ என்று வீரமுழக்கம் செய்தவன்!
அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு ? எனும் நிலை மாறி சட்டங்கள் செய்யவும், திட்டங்கள் தீட்டவும் பெண்களால் முடியும் எனும் தொலை நோக்குப்பார்வையுடன் புதமைப் பெண்ணைத் தன் கவிதையிலே வடிவமைத்தவன்!
நாட்டு விடுதலை மட்டுமின்றி சமுதாயத்திற்கும் தோள் கொடுத்தவன் கவி பாரதி!
சமுதாயத்தில் “”தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம் “” என்று மக்கள் பசியின்றி வாழ வேண்டும் என்று விரும்பினவன்!
எல்லோரும் இந்நாட்டு மன்னர் ,நாம் அனைவரும் ஓர் இனம் எனும் சமதர்ம சமுதாயக் கொள்கைக்கு வேரூன்றியவன்!
புரட்சிக் கவி பாரதி இன்று இருந்திருந்தால்? கிரிக்கெட் விளையாடும் போது மட்டும் பொங்கி எழும் தேசப்பற்றை எள்ளி நகைத்திருப்பார். நம்மிடையே எஞ்சி நிற்கும் தேசப்பற்றை தட்டி எழுப்பி தான் ஒரு இந்தியன் என்பதில் பெருமிதம் கொண்டு கொக்கரிக்க செய்திருப்பார்.
“நிமிர்ந்த நன்னடை ,நேர் கொண்ட பார்வை” என்று தான் வர்ணித்த புதுமைப்
பெண்ணுக்கு எதிரான வன்கொடுமைகளை தகர்த்து, நாம் பக்தியுடன் வழிபடும் காளிதேவியும் பெண் தான் என எடுத்துக் கூறி, பெண்ணுக்கு எதிராக பெருகி வரும் கொடுமைகளுக்கு முடிவுகட்டி இருப்பார்.
‘சாதிகள் இல்லயாடி பாப்பா ‘ என்று, அன்று தான் கொடுத்த நம்பிக்கையை பொய் ஆக்கிய சமூகத்தை சாடி இருப்பார். சமூகத்தில் நிலவும் ஏற்றத் தாழ்வை கண்டு வெகுண்டு எழுந்து, அதன் ஆனி வேரை கண்டு பிடித்து, அதை அழித்திருப்பார்.
‘படி படி சங்கத்தமிழ் நூலை படி ‘என்று பாடியவர், நாள் முழுதும் முகநூலிலும், கைப்பேசியிலும் மூழ்கி இருக்கும் இளைய சமுதாயத்தைக் கண்டு துவண்டு இருப்பார்.
வறுமை வாட்டிய போதும், தனது சுயமரியாதையை விட்டுக்கொடுக்காமல் கொள்கைகளை பின்பற்றியவர், இன்று ‘காசு பணம் துட்டு ‘ என்று லஞ்சத்திலும் ஊழலிலும் உழன்று கொண்டிருப்போரை கண்டால் உமிழ்ந்து இருப்பார். காதடைத்து பசியில் வாடுவோனை அருகில் வைத்து, அனைத்தையும் காசாய் பார்க்கும் அற்ப மனிதன் ,வெறும் காகிதத்தை எண்ணி எண்ணி அடுக்கி வைப்பபோனின் ‘கல்’நெஞ்சை தன் ” சொல்” ஈட்டிகளால் துளைத்து இருப்பார், மனித நேயம் காத்திருப்பார்.
இறுதியாக பூமா தேவியின் அலங்கோலத்தை கண்டு சகிக்க முடியாமல்,
‘நிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே’ – நீங்களெல்லாம் சொற்பனம் தானோ என்று நொந்து பாடியிருப்பார்!
இனி பூமியில் அழிந்து கொண்டிருக்கும் ஜீவ ராசிகளை கனவில் மட்டுமே காண இயலும் என்று பாடி விழிப்புணர்வை உணர்த்தி சுற்றுபுற சூழலின் அழிவை அவர் தடுத்திருப்பார்.
அது சரி, இது எப்படி பாரதி இருந்தால் சாத்தியமாகும் ? என நீங்கள் கேட்கலாம்! நடப்பவைகளை மாற்றி அமைக்கும் சக்தி அவர் எழுத்துக்கும், சொல்லுக்கும், செயலுக்கும் இருந்தது. பேனா முனை ,கத்தி முனையை விட கூர்மையானது என்ற சூத்திரத்தை நன்கு அறிந்தவர். அனைவருக்கும் முன்னோடியாக விளங்கக்கூடிய தொலை நோக்கு பார்வை கொண்ட ,தமிழ்தாயின் தவப்புதல்வர். சமூக சீர்திருத்தத்தை கொண்டு வரும் மாயம் இவர் பாடலுக்கு உண்டு.
ஆனால் இன்று நம் நாடு அடிமைபட்டது ஆங்கிலேயரிடம் மட்டுமல்ல, பல சமூக சீர்கேடுகளிடமும் தான். இவைகளிடம் இருந்தும் உண்மையான சுதந்திரம் அடையும் போதுதான், ‘ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று” மனமுருகி பாட முடியும். இதை அடைய நமக்கு பாரதி இன்று வேண்டும்.
ஒவ்வொருவர் நெஞ்சிலும் உறுதி வேண்டும். பாரதியின் இந்த எழுச்சி மிகு பாடலை மனதில் பதியவைத்துக்கொள்வோம்! “இதந்தரு மனையின் நீங்கி இடர்மிகு சிறைப்பட்டாலும், பதந்திரு இரண்டும் மாறிப் பழிமிகுத் திழிவுற்றாலும்
விதந்தரு கோடி இன்னல் விளைந்தெனை அழித்திட்டாலும் சுதந்திர தேவி! நின்னைத் தொழுதிடல் மறக்கிலேனே.”
தேசியப் புலவன் பாரதி கூறியது போல தாங்கொனாத் துயர் நேரிடினும், பொன்,பொருள் சுக வாழ்வு என எதை இழப்பினும், எக்காலத்திலும் நம் உயிர் மூச்சு உள்ளவரை ,நம் ‘ உயிரினும்” மேலான பாரதத் தாயை வணங்க மறவோம்!
நமது சுதந்திரத்தைப் பேணிக்காப்போம்!
பாரதி வழி நடந்தால் பாரத்தாயின் புதல்வர்களான நாம் அனைவரும் ஏற்றம் காண்போம் என்பது உறுதி! வாழிய செந்தமிழ்; வாழ்க நற்றமிழர் ; வாழிய பாரத மணித்திருநாடு; வாழ்க மகா கவி பாரதி புகழ் !