கடந்த 2014 மார்ச் மாதம் 8-ஆம் தேதி மலேசியாவிலிருந்து சீனாவின் பீஜிங்குக்குப் புறப்பட்ட எம்.எச்-370 விமானம், புறப்பட்ட சில மணி நேரத்தில் காணாமல் போனது. இதனைத் தொடர்ந்து சர்வதேச அளவில் மிகப் பெரிய நாடுகளும் கடற்படைகளும், விமானப் படைகளும் அந்த விமானத்தைத் தேடிக் கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டன. ஆனால், அந்த விமானத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
அந்த விமானம் கடலில் விழுந்து மூழ்கியதா, நிலத்தில் விழுந்ததா, மலைப் பகுதியில் நொறுங்கியதா என எந்த உறுதியான தகவலும் இதுவரை தெரியவரவில்லை. விமானத்தின் கருப்புப் பெட்டியிலிருந்து சிக்னல்கள் ஏதும் பெறப் படாததால், விமானத்தைக் கண்டுபிடிப்பதில் பெரும் பின்னடைவு ஏற்பட்டது.
இந்நிலையில் எம்.எச்-370 விமானம் கட்டுப்பாட்டை இழந்து இந்தியப் பெருங்கடலுள் விழுந்திருக்கலாம் என இரு வருடங்களுக்கு முன்னர் கூறப் பட்டது. இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் அந்த விமானத்தின் இறக்கைகள் கைப்பற்றப்பட்டன. ஆனால், விமானத்தை மட்டும் கண்டறிய முடியவில்லை.
இந்நிலையில், எம்.எச் 370 விமானத்தைக் கண்டுபிடிப்பது மிகவும் சிரமம் என்று தேடுதலில் ஈடுபட்டு வந்த ஆஸ்திரேலிய, மலேசிய, சீன அதிகாரிகள் 2017 ஆம் ஆண்டு அறிக்கை வெளியிட்டனர். இதைத் தொடர்ந்து விமானத்தைத் தேடும் பணியில் ஈடுபட்ட அமெரிக்காவின் ஓசியன் இன்ஃபினிட்டி நிறுவனம், அந்த விமானத்தைத் தேடும் பணி நிறுத்தி வைக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.
வானில் பறந்து கொண்டிருந்த விமானம் திடீரென காணாமல் போனதும், அந்த விமானத்தில் பயணித்த சுமார் 239 பேரின் நிலையும் என்ன ஆனது என நான்கு ஆண்டுகள் கழித்தும் எந்தத் தகவலும் கண்டறியப் படாமல் போனது மலேசிய மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.




