
சிவகாசி தாலுகா அலுவலக சர்வேயர் பிரிவில்
புரோக்கர்கள் ஆதிக்கம் அதிகரித்தது வருவதாக புகார் தெரிவிக்கும் மக்கள்
மாவட்ட நிர்வாகம் தலையிட கோரிக்கை முன் வைத்துள்ளனர்.
சிவகாசி தாலுகா அலுவலகத்தில் இயங்கும் சர்வேயர் பிரிவில் புரோக்கர்கள் ஆதிக்கம் இருப்பதால் மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு அதிமுக ஆதரவு பணியாளர்களை உடனடியாக பணியிடம் மாற்றம் செய்ய வேண்டும் என்று கோரி்க்கை எழுந்துள்ளது.
சிவகாசி தாலுகா அலுவலகத்தில் சர்வேயர் பிரிவு இயங்கி வருகின்றது. இங்கு வீட்டுமனை பட்டா, நில பட்டா, பட்டா பெயர் மாற்றம் பெற தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். பட்டா பெறுவதற்கு, பத்திரத்தின் நகல், மூலப்பத்திரம், வில்லங்கச்சான்று, வீட்டுவரி ரசீது, நிலமாக இருந்தால் நிலவரி ரசீது ஆகியவற்றை ஸ்கேன் செய்து, தாலுகா அலுவலகத்தின் வாயிலாக, பொது இ-சேவை மையத்தில் விண்ணப்பிக்கின்றனர். ஆனால் சாதாரண நடுத்தர பொதுமக்கள் எளிதாக பட்டா பெற முடியாத நிலை இருக்கின்றது. பட்டா பெறுவதற்கு, மக்களும் விவசாயிகளும் கடும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். .பட்டா கேட்டு தாலுகா அலுவலகத்துக்கு செல்வோர், இ-சேவை மையத்தில், சுயமாக விண்ணப்பிப்பதற்கு முயற்சிப்பவர்கள் என்று யாராக இருந்தாலும், அவர்கள் புரோக்கர்களின் மூலம் சென்றால் எளிதாக பட்டா வாங்க முடியும் என்ற சூழ்நிலை நிலவுகின்றது. குறிப்பாக இந்த சர்வேயர் பிரிவில் பணிபுரியும் சில பணியாளர்கள் 3 வருடங்களுக்கு மேலாக பணியாற்றி வருகின்றனர். இவர்கள் கடந்த அதிமுக ஆட்சியில் அப்போது ஆட்சியாளர்களால் ஆசியோடு வந்தவர்கள். எனவே இப்போதும் அதிமுக புரோக்கர்களின் ஆதிக்கமே நீடிக்கின்றது. சர்வேயர் பிரிவில் அதிமுக வேஷ்டி கட்டிய புரோக்கர்களை அதிகமாக காணமுடிகின்றது. இந்த புரோக்கர்களை பிடித்தால் மட்டுமே எளிதாக பட்டா வாங்க முடியும் என்ற நிலை உள்ளது. 3 வருடங்களுக்கு மேலாக பணியாற்றும் ஊழியர்கள், அதிமுக ஆதரவு ஊழியர்களை அடையாளம் கண்டு உடனடியாக பணியிடம் மாற்றம் செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் பாலசுப்பிரமணியன் கூறும்போது, சிறுகச் சிறுக பணம் சேர்த்து ஒரு வீட்டு மனை வாங்கினால், அதற்குப் பட்டா மாற்றம் பெற முடியவில்லை. குடும்பச் சொத்தைப் பாகப்பிரிவினை செய்தாலும் உரியவர்களுக்கு முறையாகப் பட்டா கிடைப்பதில்லை. சர்வேயர் பிரிவில் புரோக்கர்களுக்கு மட்டுமே வேலை நடக்கின்றது. பட்டா பெற முடியாமல் 20திற்கும் மேற்பட்ட மக்கள் என்னிடமே புகார் தெரிவித்துள்ளனர். பட்டா கேட்டு தினமும் 50திற்கும் மேற்பட்டோர் சிவகாசி சர்வேயர் பிரிவிற்கு வருடக்கணக்கில் அலைந்து வருகின்றனர். பொதுமக்களை அலக்கழிக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி விரைவில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். பூவநாதபுரம், திருத்தங்கல் கண்ணகி காலனி் பகுதியில் நூற்றுக்கணக்கான மக்களுக்கு பட்டா வழங்கப்பட்டது. இந்த பட்டாவை அரசின் கிராம நிர்வாக கணக்கில் சேர்க்காமல் அதிகாரிகள் இழுத்தடித்து வருகின்றனர். இதனால் அந்த பகுதி மக்கள் மின் இணைப்பு, ரேசன் கார்டு உட்பட பல்வேறு அரசின் திட்டங்களை பெற முடியாமல் தவித்து வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு சிவகாசி பகுதி மக்களுக்கு புரோக்கர்கள் தலையீடு இன்றி எளிதாக பட்டா கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.