
சென்னையில் இருந்து ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் கடல் வழியாக இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.160 கோடி மதிப்புள்ள கிறிஸ்டல் மெத்தாபேட்டமைன் மற்றும் கஞ்சா ஆயில் போதை பொருளை மத்திய வருவாய் புலனாய்வுத்துறையினர் காருடன் பறிமுதல் செய்தனர்.
இதில் ஈடுபட்ட சென்னை கொடுங்கையூர் பாக்யராஜ் 39, தனசேகர் 32, கைது செய்யப்பட்டனர். சென்னையில் இருந்து இலங்கைக்கு ரூ.பல கோடி மதிப்பில் போதை பொருள் கடத்தப்படுவதாக மத்திய புலனாய்வு துறையினருக்கு தகவல் கிடைத்தது. திருச்சி, மதுரை, தூத்துக்குடி வருவாய் புலனாய்வு துறையினர் கடலோர மாவட்டங்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
நேற்று அதிகாலை ராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடி சுங்க சாவடி அருகே சென்ற காரை மடக்கி சோதனையிட்டனர். அதிலிருந்த இருவரை விசாரித்த போது முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர். காரை சோதனையிட்ட போது 38 கிலோ கிறிஸ்டல் மெத்தாபேட்டமைன், 50 கிலோ கஞ்சா ஆயில் இருந்தது. காருடன் இருவரையும் கைது செய்து ராமநாதபுரம் சுங்கத்துறை இணை ஆணையர் அலுவலகம் கொண்டு சென்றனர்.
நிபுணர்கள் பரிசோதித்ததில் கடத்தியது மெத்தாப்பேட்டமைன் என உறுதியானது. அவற்றை ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே வேதாளை கடல் வழியாக இலங்கைக்கு கடத்த இருந்ததும் தெரிந்தது.
திமுக ஆட்சிக்கு வந்தது முதல் சட்டம் ஒழுங்கு ஓய்வுக்கு சென்றுள்ளதை தினந்தோறும் உணரமுடிகிறது. கஞ்சா பழக்கம் பரவியுள்ளதும், நாள் தோறும் போதைப் பொருள்கள் கடத்திச் செல்லப்படுவதுமே இதற்கு சான்றாகும். கொலை, கொள்ளை, பாலியல் சீண்டல்கள், சிறை மரணம் என திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு சந்தி சிரிக்கிறது என்று பாஜக.,வினர் விமர்சித்துள்ளனர்.