
பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு, தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழ் திரையுலகில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள குஷ்பு, முதலில் திமுக, காங்கிரஸ் கட்சிகளில் பதவி வகித்த நிலையில் பின்னர் பாஜகவில் இணைந்து தற்போது அக்கட்சியில் செயற்குழு உறுப்பினராக உள்ளார். நடிகை குஷ்பு, 2020 அக்டோபர் 12-ன் தேதி டெல்லியில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, தேசிய பொதுச் செயலாளர் சி.டி. ரவி முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்.
அதைத் தொடர்ந்து, அரசியல் அரங்கில் பல்வேறு அதிரடிகளை மேற்கொண்டு வந்தார். அதைத் தொடர்ந்து, கடந்த சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் 20 தொகுதிகளில் பா.ஜ.க போட்டியிட்டது. அதில், கட்சியில் இணைந்த சில மாதங்களிலேயே, குஷ்பு ஆயிரம் விளக்கு தொகுதியில் வேட்பாளராக களமிறக்கப்பட்டது குறிப்பிடதக்கது.
இந்த நிலையில், பா.ஜ.க தேசிய செயற்குழு உறுப்பினரும், நடிகையுமான குஷ்பு தேசிய மகளிர் குழுவின் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இது தொடர்பாக பேசிய குஷ்பு, “தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டதற்கு, பிரதமருக்கும், தேசிய மகளிர் ஆணையத்துக்கும் நன்றி. எனக்கு இது மகிழ்ச்சியளிக்கிறது. ஒவ்வொருநாளும் பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் குறித்து தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறேன். இனி இன்னும் சுதந்திரமாக நீதியை பெற்றுத்தர நல்ல களம் அமைந்திருக்கிறது. இது கட்சி சார்ந்த பொறுப்பல்ல.அதனால் எனது குரல் நம் சமூக மக்கள் அனைவருக்காவும் இருக்கும்” எனத் தெரிவித்திருக்கிறார்.
தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக குஷ்பு தேர்வு செய்யப்பட்டதற்கு தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, தொடர்ந்து பெண்களுக்காகவும், குழந்தைகளுக்காவும் குரல் கொடுத்துவரும் குஷ்பு, தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். அவருக்கு எனது வாழ்த்துகள் எனக் குறிப்பிட்டிருக்கிறார்.