
சிதம்பரம் நடராஜர் கோயில் மீது கண் வைத்துள்ள திமுக அரசின் அறநிலையத்துறை அதிகாரிகள், மீண்டும் மீண்டும் அங்கே பிரச்சனையை ஏற்படுத்தி வருகின்றனர்.
ஆனி திருமஞ்சன விழாக் காலத்தை ஒட்டி சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மீது ஏறி சுவாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை என வைக்கப்பட்ட அறிவிப்புப் பலகையை அகற்ற வேண்டும் என்று கூறிய அறநிலையத் துறை அதிகாரிகளிடம், தீட்சிதர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஞாயிறு அன்று தேரோட்டமும், ஆனி திருமஞ்சன தரிசனமும் நடப்பதை ஒட்டி, 24ம் தேதி முதல் 27ம் தேதி வரை கோவில் கனகசபையில் ஏறி சுவாமி தரிசனம் செய்ய அனுமதியில்லை என்று தெரிவித்து, கோயில் தீட்சிதர்கள் தரப்பில் அறிவிப்புப் பலகை வைக்கப் பட்டது. இதை அடுத்து சிலர் இது குறித்து அறநிலையத்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்துள்ளனர்.
உடனே, சிதம்பரம், தில்லை காளியம்மன் கோவில் செயல் அலுவலர் சரண்யா, தாசில்தார் செல்வகுமார், எஸ்.ஐ.,க்கள் சங்கர், பொன்மகரம் மற்றும் போலீசார் என நாத்திக திமுக., அரசின் அலுவலர்கள் ஒரு படையே கோவிலுக்குள் திரண்டு வந்து, தீட்சிதர்கள் வைத்துள்ள அறிவிப்புப் பலகையை அகற்றிவிட்டு, கனகசபை மீது ஏறி நின்று பக்தர்கள் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று அடாவடியில் ஈடுபட்டனர்.
ஆனால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்த தீட்சிதர்கள், ‘விழா நிகழ்வு முடியும் வரை பக்தர்கள் கனகசபையில் ஏறி சுவாமி தரிசனம் செய்ய அனுமதியில்லை; கனகசபை மீது அறிவிப்புப் பலகை வைக்கக்கூடாது என்று சொல்ல சட்டத்தில் அனுமதி இல்லை. அறநிலைத்துறை உயரதிகாரிகள் அனுமதியுடன் தான் அறிவிப்பு பலகை வைத்துள்ளோம்’ எனக் கூறினர். இதனால் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. வெகுநேரம் நடந்த வாக்குவாதத்துக்குப் பின் அறநிலையத்துறை அதிகாரிகளும், போலீசாரும் கோவிலில் இருந்து வெளியேறினர். அப்போது, பக்தர்கள் அளித்த புகாரால் அந்த அறிவிப்புப் பலகையை அகற்ற அங்கே வந்ததாகவும், தனது பணியைச் செய்ய விடாமல் தீட்சிதர்கள் தடுத்ததாகவும் இது குறித்து போலீஸ் புகார் அளிக்க உள்ளதாகவும் கூறினார் செயல் அலுவலர் சரண்யா.
இது குறித்து தீட்சிதர்கள் தரப்பில் விளக்கம் கூறிய போது, அதிகாரிகள் மற்றும் சிலர் கோவில் தேரோட்டம் மற்றும் தரிசனத்தை நிறுத்த வேண்டுமென்றே பிரச்னை செய்கின்றனர். தேர் மற்றும் தரிசனத்தின் போது, கருவறையில் உள்ள சிவகாமசுந்தரி சமேத நடராஜரை கனகசபையில் எழுந்தருளச் செய்து பூஜை செய்து வெளியே கொண்டு வருவோம். அதற்கு இடையூறு ஏற்படக்கூடாது என்பதால் பக்தர்களை கனசபையில் இந்த நான்கு நாட்களுக்கு மட்டும் அனுமதிப்பதில்லை. மேலும், திருவிழாவிற்காக நடராஜருக்கு அணிவிப்பதற்காக விலை உயர்ந்த நகைகள் வைக்கப்பட்டுள்ளன. கருவறையில் இருந்து சிவகாமசுந்தரி சமேத நடராஜர் தேரில் எழுந்தருள வெளியே கொண்டு வரும் பணிகள் நடைபெறும்போது பாதுகாப்பு கருதி கனகசபை மீது பக்தர்கள் ஸ்வாமி தரிசனம் செய்ய அனுமதிப்பதில்லை. இது வெகுகாலமாகவே கடைப்பிடிக்கப்பட்டு வரும் நடைமுறை. இதில் புதிதாக எதுவும் இல்லை. எங்களது பணியை செய்யவிடாமல் அறநிலையத்துறை செயல் அலுவலரும் அறநிலையத்துறை அதிகாரிகளும் மன உளைச்சலுக்கு உள்ளாக்கி வருகின்றனர் என்று கூறினர்.
பழனி கோயில் அறிவிப்பு பலகை அகற்றம் அதைத் தொடர்ந்து சிதம்பரம் கோயிலிலும் தங்கள் கைவரிசையை காட்ட அறநிலையத்துறை அதிகாரிகள் இறங்கியது ஆகிய செயல்பாடுகளால் தமிழகத்தில் ஹிந்து பக்தர்களிடையே கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.