
வீர வாஞ்சிநாத ஐயரை ‘பார்ப்பன பயங்கரவாதி’ என ஓர் இயக்கம் குறிப்பிட்டதற்கு உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவரிடமும் காவல் கண்காணிப்பாளரிடமும் பிராமணர் அமைப்புகள் மற்றும் ஹிந்து அமைப்புகள் சார்பில் இன்று நேரில் மனு கொடுக்கப்பட்டது.
தூத்துக்குடியில் சனாதன எதிர்ப்பு கருத்தரங்கம் என்ற பெயரில் ஓர் அமைப்பு வரும் ஜூன் 20 ஆம் தேதி நிகழ்ச்சி ஒன்று நடத்த உள்ளதாக போஸ்டர்கள் அடித்திருந்தது. அதில் மனிதநேயப் பண்பாளர் தூத்துக்குடி முன்னாள் உதவி ஆட்சியர் பார்ப்பன பயங்கரவாதி வாஞ்சிநாதனால் படுகொலை செய்யப்பட்ட சனாதன எதிர்ப்பாளர் ஆஷ் துரை நினைவு நாளில் கூட்டம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதற்கு பல்வேறு அமைப்புகளும் பிராமண சங்கங்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. கிறிஸ்துவ ஆங்கிலேயரின் கைப்பாவையாக செயல்பட்டு, சுதந்திரப் போராட்ட வீரர்களையும் வ உ சி சுப்பிரமணிய சிவா உள்ளிட்ட தலைவர்களையும் நாட்டு மக்களையும் அச்சுறுத்தி மிரட்டி துன்புறுத்தி கொடுங்கோலனாகத் திகழ்ந்த, ஆஷை நல்லவனாக சித்திரிக்கும் கிறிஸ்துவ திராவிட அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுப்பப்பட்டன.
பிரிட்டிஷ் ஆட்சியர் செய்த தவறுக்கு இளைஞர் வாஞ்சிநாதன் தண்டனை வழங்கிய இடம் மணியாச்சி என்றும் அடிமைத்தனத்தில் இருந்து விடுதலை அடைந்திட துடிக்கும் தவிப்பு எத்தனை பெரியதாக இருந்திருக்கும் வருங்கால சந்ததிகளின் பொருட்டு நாமும் நமது வாழ்வை அர்ப்பணிப்போம் என்று பிரதமர் நரேந்திர மோடி கடந்த வருடம் மன்கி பாத் மனதின் குரல் நிகழ்ச்சியில் உரையாற்றினார். ஆனால் மாவட்ட நிர்வாகமும் காவல்துறையினரும், அதற்கு மாற்றாக உள்ள தேசவிரோத சக்திகளின் பின்னே சென்று அவர்கள் கூட்டங்களை நடத்துவதற்கு அனுமதி கொடுப்பதுடன் பாதுகாப்பும் கொடுத்து வருகிறார்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில் திங்கள்கிழமை இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆகியோரை நேரில் சந்தித்து பிராமண அமைப்புகள் மற்றும் ஹிந்து இயக்கங்கள் சார்பாக ஒரு மனு அளிக்கப்பட்டது.
இது குறித்து மனு கொடுத்தவர்கள் குறிப்பிட்ட போது,
இன்று எம் சமுதாய மக்களின் நல் எழுச்சி. வீர வாஞ்சிநாதன் அவர்களையும் எமது சமுதாயத்தையும் அவமானம் செய்வதாக எண்ணி நாளை திராவிட தமிழர் கட்சி சார்பில் 20.06.2023 அன்று நடைபெறும் சனாதன எதிர்ப்பு கருத்தரங்கம் நடத்துவதனை தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை மனு தூத்துக்குடி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அவர்களை சந்தித்து கொடுத்தோம். இன்முகத்துடன் எங்களை வரவேற்று ஆவண செய்வதாக உறுதி அளித்தாள்ளார்கள். மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் மனு கொடுத்தோம். இதில் தூத்துக்குடி பாலாஜி, அய்யப்பன், ஹரிஹர கிருஷ்ணன், ரவி பொன்னப்பன், ஹரி, வரதன் அம்பி கண்ணன், கிருஷ்ணமூர்த்தி மற்றும், ஹிந்து முன்னணியைச் சேர்ந்த ராகவேந்திரா, விவேகானந்த கேந்திர கிருஷ்ணன், நெல்லை கயிலை கண்ணன்,சிவகங்கை வைத்தியநாதன், மதுரை அவனியாபுரம் பட்டம்பி ஆகியோர் கலந்து கொண்டனர்… என்று கூறினர்.
அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்ததாவது….
பெறுநர்
1.உயர்திரு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், தூத்துக்குடி,
2. மாநகர காவல்துறை கண்காணிப்பாளர் அவர்கள், மாநகர காவல்துறை அலுவலகம்-தூத்துக்குடி.
பொருள்: 20.06.23 செவ்வாய்க்கிழமை தூத்துக்குடியில் நடைபெறவுள்ள திராவிடத் தமிழர் கட்சி நடத்த இருக்கும் கருத்தரங்கம் குறித்து.
மதிப்பிற்குரிய காவல்துறை கண்காணிப்பாளர் அவர்களுக்கு,
ஐயா, இந்திய சுதந்திர போராட்டத்தில் பங்கேற்று நாட்டுக்காக பொருள், குடும்பம் ஆகியவற்றை இழந்து இன்னுயிர் துறந்த வீரர்கள் பலர். இந்த வகையில் அதிக பங்களிப்புக் கொடுத்து முதன்மை இடத்தில் இருப்பது நெல்லை மாவட்டம். குறிப்பாக அப்போதைய நெல்லை மாவட்டம் தூத்துக்குடியில் கப்பலோட்டிய தமிழன் திருவ.உ.சிதம்பரம் பிள்ளை, திரு சுப்ரமண்யசிவா, வீரன் வாஞ்சிநாதன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்று உயிர் துறந்தனர். அன்று அவர்கள் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்று உயிர்நீத்த தியாகம் தான், இன்று சுதந்திரக் காற்றை நாம் சுவாசிக்கப் போடப் பெற்ற அடித்தளம் என்றால் மிகையல்ல.
இந் நிலையில் வரும் 20.06.2023 செவ்வாய்க்கிழமையன்று தூத்துக்குடி பெரியார் மையத்தில் தூத்துக்குடி மாவட்ட திராவிடத் தமிழர் கட்சி என்ற அமைப்பின் பெயரில் ஆஷ்துரை நினைவுநாளில் சனாதன எதிர்ப்பு கருத்தரங்கம் நடத்துவதாக அறிவித்து உள்ளார்கள். அதில் சுதந்திரப் போராட்ட வீரன் வாஞ்சிநாதனை, பார்ப்பன பயங்கரவாதி வாஞ்சிநாதனால் படுகொலை செய்யப்பட்ட ஆஷ்துரை நினைவு நாள் சனாதன எதிர்ப்பு கருத்தரங்கம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறு ஒரு குறிப்பிட்ட ஜாதியினை, சமுகத்தை குறிப்பிட்டு கருத்தரங்கம் நடத்துவது இந்திய அரசியல் சட்டத்திற்கு புறம்பானதாகும். மூன்று மாதங்களுக்கு முன் எந்த ஒரு அமைப்பும் ஜாதி மதத்தினை இழிவுபடுத்தியோ பேசியோ கூட்டம் நடத்தக்கூடாது என்று உச்சநீதிமன்றம் தெளிவாக உத்தரவு பிறப்பித்துள்ளது.
.இத்தகைய கருத்தரங்கம் நடத்துவது நாட்டின் சுதந்திரத்தையும், அதற்காகப் போராடி உயிர் நீத்த சுதந்திரப் போராட்ட தியாகிகளையும் அவமதிக்கும் செயலாகும். இந்திய நாட்டின் சுதந்திரத்திற்கு பாடுபட்ட தலைவர்களை அவமரியாதையாக சித்தரித்து அவ்வாறு கருத்தரங்கம் நடத்த இருப்பது எங்கள் மனதை மிகவும் புண்படச் செய்கிறது. எனவே மாவட்ட ஆட்சியர் அவர்களும் மாநகரக்காவல் கண்காணிப்பாளர் அவர்களும் இத்தகைய கருத்தரங்கம் நடைபெறுவதற்கு கொடுக்கப் பெற்றுள்ள அனுமதியினை ரத்து செய்து தடை பிறப்பித்திடுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம் என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது