
தமிழக அமைச்சரவையில் இருந்து இலாகா இல்லாத அமைச்சராக இருந்து வந்த செந்தில் பாலாஜியை நீக்கியுள்ளார் ஆளுநர் ரவீந்திர நாராயண ரவி. இந்நிலையில் செந்தில் பாலாஜி நீக்கம் குறித்து தனது கருத்தைத் தெரிவித்த முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர் செந்தில் பாலாஜிய நீக்க ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அதிகாரம் இல்லை, இதை சட்டரீதியாக எதிர்கொள்வோம் என்று கூறியுள்ளார்.
ஆளுநர் என்ற பதவிக்கான கௌரவத்தை காப்பாற்றாமல், பாஜகவின் அடிவருடியாக செயல்படுகிறார் ஆளுநர் ரவி. அந்தப் பதவிக்கே அவர் தகுதி இல்லாதவர் என்று டி.கே.எஸ்.இளங்கோவன் கூறியுள்ளார்.
ஒருவர் அமைச்சரவையில் இருக்க வேண்டுமா, வேண்டாமா என்பது முதலமைச்சரின் அதிகாரத்துக்கு உட்பட்டது. அரசியல் சட்டத்தைக் கொச்சைப்படுத்தும் வகையில் ஆளுநர் செயல்பட்டுள்ளார். நீதிமன்றத்துக்குச் சென்றால் ஆளுநர் ரவி மீண்டும் குட்டுப்படுவார் என்று, காங்கிரஸ் எம்.எல்.ஏ. செல்வப்பெருந்தகை காட்டத்துடன் விமர்சித்துள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் செய்தியாளர்களிடம் பேசிய போது, அமைச்சரை நீக்குவதற்கு ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்று கூறியுள்ளார். ஆனால், அவரே முன்னர் அமைச்சர்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது கோரிக்கையும் வைத்துள்ளார். ஆளுநருக்கு அமைச்சரை நீக்குவதற்கு அதிகாரம் இல்லை என்றால் ஏன் ஆளுநரிடம் போய் அமைச்சர்களை நீக்க வேண்டும் என்று அந்நாளில் கோரிக்கை வைத்தார் என்ற கேள்வி இப்போது பரவலாக எழுப்பப்பட்டு வருகிறது.
செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கம் செய்து, ஆளுநர் அறிவித்துள்ளார். அமைச்சரை பதவி நீக்கம் செய்ய ஆளுநருக்கு அதிகாரமில்லை என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியிருக்கிறார். ஆனால் கடந்த ஏப்ரல் 13, 2017-ல் ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் ரத்து செய்யப்பட்ட போது அது தொடர்பாக அப்போதைய தமிழக ஆளுநர் பொறுப்பு வகித்த வித்யாசாகர் ராவிடம் இதே மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்ட கடிதத்துடன் துரைமுருகன், உள்ளிட்ட திமுகவினர் மும்பை சென்று முறையிட்டனர்.
அந்த மனுவில், “முதல்வர் மற்றும் அமைச்சர்களை உடனடியாக ராஜினாமா செய்ய ஆளுநர் உத்தரவிட வேண்டும். அவர்கள் ராஜினாமா செய்யத்தவறும் பட்சத்தில், அப்பதவிகளை நிர்வகிக்கும் உரிமையை இழந்த அவர்கள் அனைவரையும் ஆளுநர் பதவி நீக்கம் செய்ய வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார். இதே போல பல உதாரணங்கள் உள்ளன… என்ற கருத்துக்கள் பரவலாக சமூக வெளிகளில் பகிரப்பட்டு வருகின்றன.