
செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வார் என முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு பதில் கடிதம் அனுப்பினார்.
அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான மோசடி வழக்கை விசாரிக்க, அமலாக்கத் துறைக்கு அனுமதி அளித்து, கடந்த மாதம் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து, அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கும்படி, மே 31ல், முதல்வருக்கு, ஆளுநர் ரவி கடிதம் எழுதினார். அதற்கு முதல்வர், ‘வழக்கு உள்ள காரணத்தினாலேயே, அமைச்சர்கள் பதவி விலக வேண்டிய அவசியமில்லை’ என பதில் கடிதம் அனுப்பினார்.
இதற்கிடையே செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்ததால், அவரது இலாகாக்களை இரு அமைச்சர்களுக்கு பகிர்ந்தளித்து, செந்தில் பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக நீடிக்க ஆளுநருக்கு தமிழக அரசு பரிந்துரைத்தது. ஆனால், துறை மாற்றத்துக்கு ஒப்புதல் அளித்த ஆளுநர், ‘இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பதை ஏற்க முடியாது’ என தெரிவித்தார்.
இதை கண்டு கொள்ளாமல், ‘இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பார்’ என, முதல்வர் அறிவித்தார். அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது. இந்த நிலையில், செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கம் செய்து, நேற்று (ஜூன் 29) மாலை ஆளுநர் ரவி உத்தரவிட்டார். பின்னர் நள்ளிரவு அவரே அந்த உத்தரவை வாபஸ் பெற்றார்.
இது தொடர்பாக ஆளுநர், முதல்வர் ஸ்டாலினுக்கு அளித்த கடிதத்தில், ‘செந்தில்பாலாஜி விவகாரத்தில், அட்டர்னி ஜெனரலின் கருத்தைக் கேட்பது விவேகமானது என மத்திய உள்துறை அமைச்சர் எனக்கு ஆலோசனை வழங்கி உள்ளார். இதன் அடிப்படையில் நான் அட்டர்னி ஜெனரலின் ஆலோசனையை நாடி உள்ளேன். இதனால், என்னிடம் இருந்து மறுஉத்தரவு வரும் வரை, செந்தில்பாலாஜியின் நீக்கம் உத்தரவு நிறுத்தி வைக்கப்படுகிறது’ என விளக்கமளித்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக அமைச்சர்கள், தமிழக அட்வகேட் ஜெனரல் சண்முக சுந்தரம் மற்றும் மூத்த வழக்கறிஞர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின், ‘செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வார்’ எனக் குறிப்பிட்டு ஆளுநர் ரவிக்கு பதில் கடிதம் அனுப்பியுள்ளார்.