செயற்கை நுண்ணறிவு எனும் ஏ ஐ தொழில் நுட்பம் மூலம் இந்தியாவில் நடைபெற உள்ள தேர்தலை சீர்குலைக்க சீனா திட்டமிட்டுள்ளதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் எச்சரிக்கை கொடுத்துள்ளது .
நாடாளுமன்ற தேர்தல் வரும் 19-ம் தேதி முதல் ஜூன் 1 வரை 7 கட்டங்களாக நடக்கிறது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்த நிலையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்தியாவில் தேர்தலைச் சீர்குலைக்க சீனா திட்டமிட்டுள்ளதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் எச்சரிக்கை கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக மைக்ரோசாப்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது …
2024ல் பல்வேறு நாடுகளில் பொதுத் தேர்தல்கள் நடைபெறுகின்றன. இவற்றைக் குறி வைத்துள்ளன சீனாவின் ஆதரவு பெற்ற சைபர் குழுக்கள். இதற்கு வடகொரியாவின் ஆதரவும் உண்டு.
இந்தத் தேர்தலின் போது நிலவும் பொதுக் கருத்தை தங்களுக்கு சாதகமாக மாற்றும் வகையில் செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட தகவல்களை சமூக வலைத்தளங்களில் பரவ வைத்து, குழப்பத்தை ஏற்படுத்த சைபர் குழுக்கள் திட்டமிட்டுள்ளன.
இந்த ஆண்டு உலகம் முழுவதும், குறிப்பாக இந்தியா, அமெரிக்கா, தென் கொரியாவில் முக்கியத் தேர்தல்கள் நடைபெறுவதால் தனது நலனுக்கு பயனளிக்கும் வகையில் இதனை செயல்படுத்தி இடையூறு செய்ய சீனா திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது என்று, அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மைக்ரோசாப்ட் நிறுவன அதிகாரி ஒருவர் கூறியபோது, டீப்பேக் மற்றும் நடக்காத நிகழ்வுகளை வைத்து உருவாக்கப்பட்ட தவறான மற்றும் மோசடி விளம்பரங்கள் மூலம் அரசியல் விளம்பரத்தை உருவாக்குவது மிகப் பெரிய அச்சுறுத்தலாகும். இவைபோன்ற மோசடி விளம்பரங்கள் வேட்பாளர்கள் குறித்து தவறான தகவலை பொதுமக்களிடம் பரப்பி அவர்களைத் தவறாக வழி நடத்தும்.
சீனா, தற்போது செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை தொடர்ந்து சோதனை செய்து வருகிறது. இது பின்னாளில் அந்நாட்டுக்கு பெரிய அளவில் பயனளிக்கும். தைவானில் ஆதிக்கத்தை செலுத்துவதற்காக சீனா இதனை சோதித்துப் பார்த்துள்ளது. அங்கு போலியான தகவல்களைப் பரப்பி குழப்பத்தை ஏற்படுத்தியது என்று அவர் கூறினார்.
கடந்த மாதம் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பில்கேட்ஸ் புது தில்லியில் பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை சமூக காரணங்களுக்காக பயன்படுத்துவது, பெண்கள் தலைமையில் வளர்ச்சி, சுகாதாரம் மற்றும் விவசாயத்தில் புதுமைகள் ஆகியவை குறித்து அவர்கள் விவாதித்தனர் என்பது குறிப்பிடத் தக்கது.
தற்போது உலகம் முழுவதும் ஐரோப்பிய யூனியனைத் தவிர்த்து குறைந்தது 64 நாடுகளில் இந்த ஆண்டு பொதுத் தேர்தல்கள் நடக்கின்றன. எனவே இந்த 2024ஆம் ஆண்டு பல நாடுகளுக்கு முக்கியமான ஆண்டாகத் திகழ்கிறது. இந்த நேரத்தில் தான் சீனா தனது குயுக்தி நிறைந்த வேலைகளை திட்டமிட்டுச் செய்து வருகிறது.
ஏ.ஐ., தொழில்நுட்பத்தின் மூலம் இந்திய நாடாளுமன்றட் தேர்தலில் குழப்பம் விளைவிக்க சீனா சதித் திட்டம் தீட்டியிருப்பதாக ஒரு தவகல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்தியாவில் வரும் ஏப்.19 ம் தேதி தேர்தல் தொடங்குகிறது. ஜூன் மாதம் வரை ஏழு கட்டங்களாக வாக்குப்பதிவு நடக்கிறது. இந்தத் தேர்தலைப் பொறுத்தவரை வழக்கமான சுவர் விளம்பரங்கள், ஒலிபெருக்கி விளம்பரங்கள், நோட்டீஸ் விநியோக, வீடு வீடாகச் சென்று வாக்காளர்களைச் சந்திப்பது போன்ற பாரம்பரிய முறைகளைக் கடந்து, சமூக வலைத்தளங்கள் மூலம் பிரசாரம் செய்வது முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.
வேட்பாளர்கள் , கட்சிகளின் தரப்பில் விளம்பரங்கள், மீம்ஸ், வீடியோ என பெருமளவில் மக்களை சமூகத் தளங்கள் வாயிலாக விளம்பரங்கள் சென்றடைகின்றன. இந்த வகையில் செயற்கை நுண்ணறிவு எனும் ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் குழப்பம் விளைவிக்க சீனா திட்டமிடுகிறது.
இதன் ஒரு பகுதியாக, ‛டீப் ஃபேக்’ முறையில் நடக்காத நிகழ்வுகளை வைத்து உருவாக்கப்பட்ட தவறான மற்றும் மோசடி விளம்பரங்கள் மூலம் அரசியல் விளம்பரத்தை உருவாக்கி, வேட்பாளர்கள் குறித்து தவறான தகவலை பொதுமக்களிடையே பரப்பி அவர்களை தவறாக வழிநடத்தும்.
ஏற்கெனவே பிரதமர் மோடி இது போன்ற ஏஐ., தொழில்நுட்பம் குறித்து தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிரதமர் மோடி அளித்த ஒரு பேட்டியில் , ஏ.ஐ., தொழில்நுட்பம் ஆபத்தாக உள்ளது. இதில் மிக கவனமாக இருக்க வேண்டியுள்ளது என கவலை தெரிவித்திருந்தார். பொதுமக்கள் விழிப்புடன் இருந்தால் மட்டுமே சீன ஆதரவுக் குழுக்களின் ஏமாற்று வித்தைகளில் இருந்து நாட்டைக் காப்பாற்ற முடியும்!