எர்ணாகுளம் – வேளாங்கண்ணி – எர்ணாகுளம் ரயிலைத் தொடர்ந்து கொல்லம் – சென்னை ரயிலிலும் பெட்டிகள் அதிகரிக்கப் படுகின்றன. கொல்லம் – செங்கோட்டை – சங்கரன்கோவில் – ராஜபாளையம் – மதுரை வழியாக தினசரி இயக்கப்படுகின்ற வண்டி எண் 16101/16102 சென்னை – கொல்லம் – சென்னை விரைவு ரயிலின் பெட்டிகள் எண்ணிக்கை 14 இருந்து 17 பெட்டிகளாக அதிகரிக்கப்பட உள்ளன!
பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற ரயிலான, எர்ணாகுளம் – கோட்டயம் – கொல்லம் – செங்கோட்டை – ராஜபாளையம் வழியாக வாரம் இருமுறை இயக்கப்படுகின்ற வண்டி எண் 16361/16362 எர்ணாகுளம் – வேளாங்கண்ணி – எர்ணாகுளம் விரைவு ரயிலின் பெட்டிகள் எண்ணிக்கை 14 இருந்து 18 பெட்டிகளாக அதிகரிக்கப்பட்டு நேற்று சனிக்கிழமை முதல் இயங்கி வருகிறது.
இரண்டாம் வகுப்பு Sleeper படுக்கை வசதி பெட்டிகள் (2) மற்றும் மூன்றாம் வகுப்பு 3rd ஏசி பெட்டிகள் (2) இணைக்கப்பட்டு மொத்தம் 18 பெட்டிகள் கொண்ட ரயிலாக இயக்கப்படுகின்றன .
இந்த வழித்தடத்தில் செங்கோட்டை முதல் கொல்லம் வரை உள்ள மலை வழி ரயில் பாதையில் 14 பெட்டிகள் மட்டுமே இயங்கும் ரயில்களை கூடுதல் பெட்டிகள் இணைக்க வசதியாக கடந்த ஆண்டு சோதனை கூட்டம் நடத்தப்பட்டது. இந்த சோதனை ஓட்டம் முடிவில் 22 பெட்டிகள் வரை இந்த மலைவழிப் பாதையில் இயக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. இதை அடுத்து தற்போது எர்ணாகுளம் வேளாங்கண்ணி ரயில் கூடுதலாக நான்கு பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த வழியில் இயங்கும் கொல்லம் – செங்கோட்டை – ராஜபாளையம் – சென்னை விரைவு ரயில் மற்றும் திருநெல்வேலி – செங்கோட்டை – கொல்லம் – பாலக்காடு இடையே இயங்கும் விரைவு ரயில் பெட்டிகளும் 18 பெட்டிகளாக நீட்டித்து இயக்க பயணிகள் வலியுறுத்தி வந்தனர்.
இந்த நிலையில் வண்டி எண் 16101/16102 சென்னை – கொல்லம் – சென்னை விரைவு ரயிலின் பெட்டிகள் எண்ணிக்கை 14 இருந்து 17 பெட்டிகளாக அதிகரிக்கப்பட உள்ளன. இந்த ரயிலில் இரண்டாம் வகுப்பு Sleeper படுக்கை வசதி பெட்டிகள் (2) மற்றும் மூன்றாம் வகுப்பு 3rd ஏசி பெட்டிகள் (1) இணைக்கப்பட்டு மொத்தம் 17 பெட்டிகள் கொண்ட ரயிலாக இயக்கப்பட உள்ளன. வரும் செவ்வாய்க் கிழமை ஏப்.9 மற்றும் 10 முதல் இரு மார்க்கத்திலும் கூடுதல் பெட்டிகள் இணைத்து இயக்கப்படும்.
இதன் மூலம் இந்த ரயிலில் கூடுதல் பயணிகள் சென்னை சென்று வர வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளன. பாலக்காடு செங்கோட்டை திருநெல்வேலி விரைவு ரயில் பெட்டிகள் எண்ணிக்கை அதிகரித்து இயக்க பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.