திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் சக்திகுமார் ஓர் அசத்தல் உத்தரவை போட்டிருக்கிறாராம்…! சொல்லிச் சொல்லி மாய்ந்து போகிறார்கள் மாவட்ட காவல்துறை ஆய்வாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள்.
பங்குனி உத்திரத்தை முன்னிட்டு அதிக அளவில் பாதுகாப்புப் பணிகளில் காவலர்கள் ஈடுபட வேண்டியுள்ளது. இதற்காக காவலர்கள் அதிக அளவில் தேவைப்படுவார்கள். ஆனால், அவர்களின் குடும்பத்தாரும் இன்று பங்கு உத்திரம் என்பதால் கோயில்களுக்குச் செல்லவும், சாமி கும்பிடவும் விருப்பப்பட்டு செல்வார்கள் என்பதால், காவலர்களும் தங்கள் குடும்பத்தாருடன் நேரத்தை செலவிட யோசனை செய்துள்ளார் அருண் சக்திகுமார்.
இன்று முருகன் கோயில், சாஸ்தா உள்ளிட்ட குல தெய்வம் கோவில்களுக்கு காவலர்களும் தங்கள் குடும்பத்தினருடன் செல்ல ஏதுவாக, ஓர் உத்தரவைப் பிறப்பித்துள்ளாராம். அதன்படி, அதிகாரிகள், அலுவலைக் காரணம் காட்டி, காவலர்களை அனுப்பாமல் இருக்கக் கூடாது எனவும், ஷிப்ட் முறையில் காவலர்களை அவர்கள் குடும்பத்தினருடன் குலதெய்வம் கோவிலுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டாராம்…
காவலர்களின் உணர்வுகளை மதிப்பது தான், ஒவ்வொரு அதிகாரிகளின் “Good Supervising Activities” என்று ஓப்பன் மைக்கில் அருண் சக்திகுமார் கூறினார் என்று புளகாங்கிதமடைகிறார்கள் நெல்லை மாவட்ட காவல் துறையினர்.
அண்மைக் காலமாக காவல் துறையில் கீழ் நிலைக் காவலர்கள் சிலர், ஏன் அதிகாரிகளில் ஓரிருவர் கூட பணி நேரத்தில், பணியிடத்திலேயே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொள்வது அதிகரித்துள்ளது. இதற்கு, பணிச் சுமையும், மன அழுத்தமும் உயரதிகாரிகளின் நெருக்கடியும் காரணம் என்று பரவலாகக் கூறப்படுகிறது. இதனால்தான், காவல் துறையினரிடையே மன அழுத்தத்தைக் குறைப்பதற்காக சென்னையில் யோகா பயிற்சிக்கு ஏற்பாடு செய்தார் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன்.