கர்நாடக மாநிலத்தில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நேற்று காலை தொடங்கியபோது, காங்கிரஸ் முன்னிலை பெற்று வந்தது. பின்னர் பாஜக., சமமான அளவில் முன்னிலைக்கு வர, தொடர்ந்து பாஜக., அதிக இடங்களில் முன்னிலையில் இருந்தது. இதனால் 116 இடங்களுக்கு மேல் முன்னிலையில் இருந்ததால் பாஜக., ஆட்சி அமைக்கும் பெரும்பான்மை பெற்றுவிட்டதாக பலரும் கருதினார்கள்.
இந்நிலையில், அரசியல் தலைவர்களும் முந்திக் கொண்டு முதல்வர் வேட்பாளராகப் போட்டியிட்ட எடியூரப்பாவுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர். தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்த வாழ்த்தை ப.சிதம்பரம் உள்ளிட்டோர் விமர்சித்து சர்ச்சை ஆக்கியுள்ள நிலையில், இதேபோல பாஜக., வெற்றி உறுதி ஆகும் முன்பே திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து கூறியதும் சர்ச்சை ஆகியிருக்கிறது.
எடியூரப்பா முதல்வராக வர வேண்டியவர், ஆனால் அவருக்கு இப்படியான இடியாப்பச் சிக்கல் வந்ததற்குக் காரணம் ஸ்டாலின் சொன்ன வாழ்த்துதான் என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
கர்நாடக தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் திரு. எடியூரப்பா அவர்களுக்கு வாழ்த்துகள். புதிதாக பொறுப்பேற்கும் பா.ஜ.க அரசு உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, தமிழக காவிரி உரிமையை மீறாமல் விரைவில் தமிழகத்திற்கு உரிய காவிரி நீரை திறக்க வேண்டுமென்று வலியுறுத்துகிறேன். #KaranatakaVerdict
— M.K.Stalin (@mkstalin) May 15, 2018