காம்ரேட் சீதாராம் யெச்சூரி அம்மனுக்காக தலையில் கலசம் தூக்குகிறார்.. தோழர் அருணாசலம் தனது 40வது வயதில் சிவலிங்கத்தைத் தரிசித்து மெய்சிலிர்க்கிறார், ஆடி அமாவாசையன்று ஸ்டாலினிச கொலைவெறியால் மாண்டுபோன பெயர்தெரியாத ஜீவன்களுக்கும் சேர்த்து தர்ப்பணம் செய்கிறார்..
தோழர் கெ.கெ.எம் தனது பேரனின் மழலை மொழியில் ஸ்ரீகிருஷ்ணனின் புல்லாங்குழல் ஓசையைக் கேட்கிறார்.. தனது 25ம் வயதில் பூணூலை அறுத்து விபூதியை அழித்த காலஞ்சென்ற காம்ரேட் கேசவன் தனது 55ம் வயதிற்கு மேல் அவற்றை மீண்டும் அணிந்து ரமணரிடம் சரணடைகிறார்.. இப்படி எத்தனையோ.
இது தான் இந்திய நிதர்சனம். பின்தொடரும் நிழலின் குரல்.
இந்த இந்து தேசத்தில், பாரதபூமியில் பிறந்து வளர்ந்த புண்ணியத்தால் தான், மார்க்சிய மனஇருள் என்னும் மலினத்திலிருந்து, கம்யூனிச கொலைபாதகம் என்னும் கயமைத்தனத்திலிருந்து விடுபடுவதற்கான ஒரு வாய்ப்பும் வாயிலும் இவர்களுக்கு வாய்த்திருக்கிறது. மற்ற பல நிலங்களில் இந்தப் படுகுழியில் வீழ்ந்தவர்கள் பலர் எழுந்திருந்து வாழ்ந்ததாக சரித்திரமில்லை.
எங்கும்போய்க் கரைகாணாது எறிகடல்வாய் மீண்டு ஏயும்
வங்கத்தின் கூம்பேறும் மாப்பறவை போன்றேனே
என்பது போல, எங்கெங்கோ இலக்கின்றிப் பறந்து திரியும் கடற்காகங்களும் இந்து தர்மம் என்ற வங்கத்திற்குள் தான் வந்து சரணடைய வேண்டும்.
(பி.கு. காலஞ்சென்ற காம்ரேட் கேசவன் – எனது பெரியப்பா).
#கம்யூனிசம் #இடதுசாரிகள் #மார்க்சியம் #இந்துத்துவம்#இந்துமதம் #தர்மம் #மீட்சி




