சென்னை: அதிர்ச்சி அளிக்கும் சம்பவமாக, சென்னையில் 11 வயதான மாற்றுத்திறனாளி சிறுமியை தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் காவலுக்கு இருந்தவர்கள் உள்ளிட்ட ஊழியர்கள் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தில் 17 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் அடி உதை கொடுத்தனர். அவர்கள் 17 பேரையும் நீதிமன்றக் காவலில் வைக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னை அயனாவரத்தில் சுமார் 300 வீடுகளைக் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்பில் தில்லியை பூர்வீகமாகக் கொண்ட குடும்பம் கடந்த 34 ஆண்டுகளாக வசித்து வருகிறது. அந்த வீட்டின் 11 வயதான சிறுமி சிபிஎஸ்இ., பள்ளியில் 7ஆம் வகுப்பு பயின்று வருகிறார். வயதுக்கு உரிய மன வளர்ச்சி இல்லாதவராகவும், கேட்கும் திறன் குறைபாடு உடையவராகவும் இருந்த அந்தச் சிறுமியை, அந்தக் குடியிருப்பில் பணிபுரிந்து வந்த பிளம்பர், லிஃப்ட் மேன், காவலாளி என பலர் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் விசாரணையில் தெரியவந்துள்ளது. இது சென்னை வாசிகளை மட்டுமின்றி அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
அந்தச் சிறுமியை ரவி என்ற லிப்ட் ஆப்ரேட்டர் முதலில் மிரட்டி பலாத்காரம் செய்துள்ளான். பின்னர் தன் நண்பர்கள் இருவரிடம் கூற, அவர்கள் அந்தச் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தனராம். இவ்வாறு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்கப் பட்டதை வீடியோ எடுத்து வைத்து மிரட்டி, பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்த விவகாரம் அந்த அடுக்குமாடிக் குடியிருப்பின் பிளம்பர், எலெட்ரிசியன் என மேலும் சிலருக்குத் தெரியவர, அவர்களும் அந்தச் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். சிறுமிக்கு மயக்க ஊசி போட்டு வன்கொடுமை செய்ததாகவும் தெரிய வருகிறது.
தனக்கு என்ன நடக்கிறது என்றே புரியாத மனநிலையில் இருந்த அந்தச் சிறுமி, மிகவும் சோர்வாகக் காணப்பட்டிருக்கிறார். ஏற்கெனவே மனநலம் குன்றிய மாற்றுத் திறனாளிக் குழந்தையாக இருந்ததால், பெற்றோர் கூடுதல் கவனம் செலுத்தாலம் விட்டுள்ளனர். பள்ளிக்குச் சென்ற சிறுமி ஏன் வீட்டிற்கு தாமதமாக வருகிறாள், ஏன் சோர்வாக இருக்கிறாள் என்பதை கூட அவர்கள் கவனித்து கூடுதல் அக்கறை எடுக்கவில்லை. இந்நிலையில் வெளியூரில் தங்கி கல்லூரியில் பயின்று வரும் சிறுமியின் அக்கா, வீட்டுக்கு வந்திருந்த போது, தன் தங்கையிடம் காணப்பட்ட மாற்றத்தை உணர்ந்து, அவளிடம் பரிவாகப் பேசியபோது, தனக்கு நடந்த கொடுமைகளை அக்காவிடம் சொல்லி அழுதிருக்கிறார் அந்தச் சிறுமி.
இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்தப் பெண், தன் பெற்றோரிடம் கூற, அதன் பிறகே அவர்கள் விழித்துக் கொண்டிருக்கின்றனர். உடனே மருத்துவமனையில் சென்று சோதித்து, தொடர்ந்து அயனாவரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதை அடுத்து, காவல் துறையினர் நடத்திய விசாரணையில் இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
அந்தச் சிறுமிக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப் பட்டது. தொடர்ந்து, மகிளா நீதிமன்ற நீதிபதி சிறுமியை அழைத்து விசாரணை செய்தார். சிறுமியிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில், அந்தக் குடியிருப்பில் பணியில் அமர்த்தப் பட்டுள்ள UKFS, FOCUS இரு நிறுவனங்களின் ஊழியர்களை விசாரித்துள்ளனர். அத்தனை ஊழியர்களையும் நிற்க வைத்து சிறுமியை அடையாளம் காட்ட வைத்தனர். அதில், சிறுமியால் அடையாளம் காட்டப்பட்ட 17 பேர் கைது செய்யப்பட்டனர். குடியிருப்புக் காவலாளிகள், துப்புரவுத் தொழிலாளிகள், லிஃப்ட் ஆபரேட்டர்கள் உள்ளிட்ட 17 பேர் மீது போஸ்கோ, கொலை மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்துச் சென்றனர்.
இவர்கள் அனைவரும் மகளிர் நீதிமன்றத்தில், நீதிபதி மஞ்சுளா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது போஸ்கோ, பாலியல் வழக்கு விசாரணைகள் தொடர்பான உச்ச நீதிமன்ற வழிகாட்டலின்படி நீதிமன்ற அறை பூட்டப்பட்டு 17 பேரிடமும் நீதிபதி தனித்தனியாக விசாரணை நடத்தினார். இதை அடுத்து அவர்கள் 17 பேரையும் நீதிமன்றக் காவலில் வரும் 31-ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இந்நிலையில், இவர்கள் 17 பேருக்கும் ஆதரவாகவோ, ஜாமீன் கோரியோ வழக்கறிஞர்கள் எவரும் ஆஜராகப் போவதில்லை என வழக்கறிஞர்கள் கூறினர். இதனால், இந்த 17 பேர் தரப்பிலும் ஜாமீன் கோரி எவரும் மனு தாக்கல் செய்யவில்லை.
இதனிடையே, இன்று காலை போலீஸார் கைது செய்து அழைத்து வந்த 17 பேரையும் மகளிர் நீதிமன்ற வளாகத்தில் வைத்து வழக்கறிஞர்கள் அடித்து உதைத்தனர்.
சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் குடும்ப நல நீதிமன்றம் உள்ள கட்டடத்தின் 3 ஆவது மாடியில் மகளிர் நீதிமன்றம் உள்ளது. அங்கே இந்த 17 பேரையும் போலீஸார் ஆஜர்படுத்தினர். அவர்கள் 17 பேரும் பின்னர் 3ஆவது மாடியில் இருந்து, இரண்டாவது மாடிக்குக் கீழே இறங்கிய போது, 2 ஆவது தளத்தில் உள்ள நீதிமன்ற அறைகளில் இருந்த வழக்கறிஞர்கள் சேர்ந்து அவர்கள் 17 பேரையும் தாக்கினர். படிக்கட்டில் இழுத்து வந்து இரண்டாவது தளத்தில் வைத்து அடி உதை சரிமாரியாகக் கொடுக்கப் பட்டதில், 17 பேரில் சிலருக்கு காயம் ஏற்பட்டது. பாதுகாப்புக்காக வந்த போலீஸார் வெகுசிலரே இருந்ததால், போலீசாரால் உடனடியாக நிலைமையை சரிசெய்ய இயலவில்லை. பின்னர் ஒருவாறு அவர்களிடம் இருந்து மீட்டு 17 பேரையும் போலீஸார் காலியாக இருந்த அறைகளுக்குக் கொண்டு சென்றனர்.
இதைத் தொடர்ந்து உயர் நீதிமன்ற வளாகம் முழுவதும் பரபரப்பு நிலவியது. குடும்ப நல நீதிமன்றத்தில் இருந்து வெளியே செல்லும் வழிகளில் வழக்கறிஞர்கள் கூடியிருந்ததால், போலீஸாரால் 17 பேரையும் அழைத்துச் செல்ல இயலவில்லை. இதனால், உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தலைவர் மோகன கிருஷ்ணன், முன்னாள் தலைவர் பால் கனகராஜ் ஆகியோரிடம் வழக்கறிஞர்களை கலைந்து போகச் செய்யுமாறு போலீஸார் கேட்டுக் கொண்டனர்.
இதனிடையே கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு 17 பேரையும் சிறைக்கு அழைத்துச் செல்ல போலீஸார் நடவடிக்கை மேற்கொண்டனர்.
இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய மேலும் 4 ஊழியர்கள் தலைமறைவாகி விட்டதாகக் கூறப்படுகிறது. அவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.



